ஒரு கண்ணில் வெண்ணெய், இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு என்ற கதையாக தனது இரு மகன்களை வளர்த்து வந்த திமுக தலைவர் கருணாநிதி அதற்குரிய பலனை தற்போது அனுபவித்து வருவதாக திமுகவின் உள் விவகாரங்களை நன்கு அறிந்தவர்கள் வேதனையுடன் சொல்கிறார்கள்.
கருணாநிதி போட்ட கணக்கு இன்று தப்புக் கணக்காகி அவரையே பதம் பார்க்க ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அப்படி என்னதான் திமுகவில் பிரச்சினை?
இதை திமுகவின் பிரச்சினை என்று கூற முடியாது. மாறாக, வாரிசுரிமை கோரி நடந்து வரும் குடும்பச் சண்டை என்றுதான் சொல்ல முடியும் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.
கருணாநிதியின் மூத்த மகன் அழகிரியும், இளைய மகன் ஸ்டாலினும் ஆரம்பத்திலிருந்தே எலியும், பூணையுமாகத்தான் இருந்தனர். ஆரம்பத்திலிருந்தே ஸ்டாலின் நிதானமானவராக நடந்து வந்தார். ஆனால் அழகிரி சற்று முரட்டுத்தனமானவர். இதனால்தான் ஸ்டாலினுக்குப் பின்னால் பிரச்சினை வந்து விடக் கூடாது என்பதற்காக முரசொலிப் பத்திரிக்கையை பார்த்துக் கொள்வதற்காக என்று கூறி அவரை மதுரைக்கு அனுப்பி வைத்தார் கருணாநிதி.
மேலும் ஸ்டாலினுக்கு எதிராக யாரும் வராமல் மிகவும் கவனத்துடன் நடந்து வந்தார் கருணாநிதி. அதன் கடும் பாதிப்புதான் வைகோ போன்ற மாபெரும் தொண்டர்களை திமுக இழந்தது.
ஸ்டாலினுக்கு கிட்டத்தட்ட போட்டியே இல்லாமல் காய்களை நகர்த்தி வந்தார் கருணாநிதி. ஆனால் கருணாநிதியே எதிர்பாராத வகையில் தென் மாவட்ட திமுகவில் அழகிரி எடுத்த விஸ்வரூபம் அமைந்தது. தன்னைத் தாண்டி தென் மாவட்ட திமுகவில் ஈ எறும்பு கூட நகர முடியாத அளவுக்கு தனது நிலையை ஸ்திரமாக்கிக் கொண்டார் அழகிரி.
இதனால் அவருக்கு புதிதாக தென் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியைக் கொடுத்தார் கருணாநிதி. அத்தோடு நிற்கவில்லை அழகிரி, ஸ்டாலினுக்கு முக்கியப் பொறுப்பை கொடுக்க முடிவு செய்தால், தனக்கும் அவருக்கு நிகரான பொறுப்பைத் தர வேண்டும் என்று கருணாநிதிக்கு கண்டிஷன் போட ஆரம்பித்தார்.
இதையடுத்து அவரை சமாளிக்க மத்திய அமைச்சர் பதவியையும் கொடுத்தார் கருணாநிதி. ஆனாலும் அழகிரி சமாதானமாகவில்லை.
ஒரு கட்டத்தில் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாகவே ஸ்டாலினை கட்சித் தலைவராக்க கருணாநிதி திட்டமிட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து நேரடியாக சென்னை சென்று கருணாநிதியிடமே எச்சரிக்கை விடுத்தார் அழகிரி. இதனால் அந்தத் திட்டம் அப்படியே கைவிடப்பட்டது.
இந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் வைத்து கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் இடையே நடந்த கடும் வாக்குவாதம் திமுகவினரை நிலை குலைய வைத்துள்ளது.
திமுகவில் மிகப் பெரிய அளவில் வாரிசுப் போர் மூண்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
ஸ்டாலின் கோருவது என்ன?
துணை முதல்வர் பதவி வரை அரசுப் பதவியிலும், பொருளாளர் என்ற நிலைக்கு கட்சிப் பதவியிலும் உயர்ந்த ஸ்டாலின் தற்போது கருணாநிதியிடம் கோருவது திமுக தலைவர் பதவியை என்கிறார்கள்.
கருணாநிதி தனது காலத்திலேயே தலைவர் பதவிக்கு அடுத்து வருவது யார் என்பதை அறிவிக்க வேண்டும் என்று ஸ்டாலின் உறுதியாக கூறி வருகிறாராம். மேலும், கோவையில் நடைபெறவுள்ள செயற்குழு, பொதுக் குழுக் கூட்டத்திலேயே அதை அவர் அறிவிக்க வேண்டும் என்று அவர் கருணாநிதியிடம் கூறினாராம். இதனால்தான் வார்த்தை தடித்து இருவருக்கும் இடையே சண்டை மூண்டதாக கூறுகிறார்கள்.
அழகிரி சொல்வது என்ன?
அதேசமயம், தலைவர் பதவிக்கு அடுத்து இன்னொருவர் என்ற பேச்சுக்கே இடமில்லை. கடைசி வரை கருணாநிதி மட்டுமே தலைவராக இருக்க வேண்டும். அவருக்குப் பிறகு ஏற்படும் நிலை குறித்து அப்போது பார்த்துக் கொள்ளலாம். இப்போது எந்த மாற்றமும் இருக்கக் கூடாது என்று கூறி வருகிறாராம் அழகிரி.
ஒருவேளை மீறி அடுத்த தலைவர் யார் என்பதை கருணாநிதி அறிவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டால் தான் கடுமையான முடிவுகளை எடுக்க நேரிடும். அது கட்சிக்கு நல்லதல்ல என்று கருணாநிதியிடம் அழகிரி எச்சரித்துள்ளதாக தெரிகிறது.
இப்படி இரு பிள்ளைகளும் கடுமையாக மோதி வருவதைக் கண்டு கருணாநிதி மனம் உடைந்து போயுள்ளதாக தெரிகிறது.
மேலும், கனிமொழிக்கு இனியும் கட்சியில் முக்கியத்துவம் தரக் கூடாது என்றும் ஸ்டாலின், அழகிரி ஆகியோர் வற்புறுத்தி வருகிறார்களாம். இதை ஏற்க கருணாநிதி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
கோவை பொதுக் குழுக் கூட்டத்தில் இந்த கோஷ்டிப் பூசல் மிகப் பெரிய அளவில் வெடிக்கப் போகிறது என்றும் திமுகவின் விவகாரங்கள் அறிந்தவர்கள் கவலையுடன் கூறுகின்றனர்பணம் வேண்டுமா? இங்கே கிளிக் செய்யுங்கள்.
No comments
Post a Comment