ராஜா உள்ளிட்ட ஸ்பெக்ட்ரம் குற்றவாளிகள், டில்லி பாட்டியாலா கோர்ட்டிற்கு கொண்டு வரப்படுவது வழக்கம். மாலை வரை அனைவரும் கோர்ட்டில் இருந்துவிட்டு, ஜெயிலுக்கு திரும்புவர். நேற்றும், அனைவரும் திகார் சிறையில் இருந்து, கோர்ட்டிற்கு வந்து இறங்கினர். ஆனால் ராஜா, தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலர் பெகுரா, அனில் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனத்தின் கவுதம் தோஷி ஆகியோரைத் தவிர, ஏனைய அனைவருமே மதியம்வாக்கில் மீண்டும் திகாருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த மூவரிடமும், சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டியிருப்பதால், கோர்ட்டிற்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ராஜாவும் பெகுராவும், தோஷியும் மட்டும் கோர்ட்டில் அமர்ந்திருந்தனர். மதியம் வாக்கில் ஒரு கூடுதல் எஸ்.பி., தலைமையில் அமைந்த மூன்று பேர் கொண்ட சி.பி.ஐ., அதிகாரிகள் குழு, பாட்டியாலா கோர்ட்டிற்கு வந்தது. விசாரணையின் துவக்கத்தில், சி.பி.ஐ.,யின் மூத்த வழக்கறிஞர் ஏ.கே.சிங்கும் உடனிருந்தார்.
முதலில், தொலைத்தொடர்புத் துறை செயலர் பெகுராவிடம் விசாரணை நடந்தது. பின்னர், அனில் அம்பானி ரிலையன்ஸ் நிறுவன அதிகாரி கவுதம் தோஷியிடம் விசாரணை நடந்தது. அதன் பிறகு கடைசியாக, ராஜாவை அதிகாரிகள் அழைத்தனர். 4 மணிவாக்கில் அழைக்கப்பட்ட ராஜாவிடம், 5 மணி வரை விசாரணை நடந்தது. பின், அனைவரும் திகார் சிறைக்கு வேனில் ஏற்றி அழைத்துச் செல்லப்பட்டனர். ஏற்கனவே நீதிபதி, மூவரிடமும் தலா ஒரு மணி நேரம் விசாரிக்க அனுமதி தந்திருந்தார்.
இந்த விசாரணை, முழுக்க முழுக்க எஸ்ஸார் மற்றும் "லூப்' என்ற நிறுவனங்கள் சம்பந்தப்பட்டதாக இருந்தது. எஸ்ஸார் நிறுவனத்தின் பினாமி நிறுவனம் தான் லூப் நிறுவனம். இதற்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு கூடாது என வந்த எதிர்ப்பை அலட்சியப்படுத்திவிட்டு, அந்த நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரத்தை ராஜா ஒதுக்கீடு செய்தார். இதில் நடந்த முறைகேடுகள் குறித்து தான், தற்போது ராஜாவிடம் விசாரணை நடத்தி முடித்துள்ளனர் என்று, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. வரும் ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில், மூன்றாவது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதற்கு, சி.பி.ஐ., மும்முரமாக உள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில், ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை வலுப்படுத்த, சி.பி.ஐ., தீவிரமாக உள்ளது. அந்த அடிப்படையில் இந்த விசாரணை என்பதால், அதிக முக்கியத்துவம் பெறுகிறது. மேலும், ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தின் ஒரு பகுதியை, மொரீஷியஸ் நாட்டில் ராஜா முதலீடு செய்துள்ளார். அங்குள்ள இரண்டு வங்கிகளின் கணக்கு விவரங்களை, சி.பி.ஐ., கைப்பற்றியுள்ளது. அந்நாட்டிற்கு நேரில் சென்று, விசாரணையும் நடத்தி முடித்து திரும்பியுள்ளது. இந்த வங்கிக் கணக்குகள் குறித்து ராஜாவிடம் விசாரணை நடத்த, சி.பி.ஐ., ஆயத்த ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதற்கான முன்னோட்டமாகவே நேற்றைய விசாரணையும் இருந்திருக்க வேண்டும். இதற்கிடையில், ஸ்பெக்ட்ரம் வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல்களை இன்று வழங்குவதற்கு, சி.பி.ஐ., கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இவர்களுக்கு, சி.டி., வடிவத்தில் குற்றப்பத்திரிகை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment