கடந்த புதன்கிழமை நடந்த மும்பை குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணைக்கு அழைக்கப்பட்ட கடந்த கால குஜராத் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய சதிகாரனின் சகோதரன் மர்மமாக இறந்தார். இது போலீசாருக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.
மும்பை குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக குற்றவாளிகள் யார் என்பதை கண்டறிவதில் போலீசாருக்கு இன்னும் விடை கிடைக்காமல் குழப்பமே நீடித்து வருகிறது. ரகசிய காமிரா மட்டும் தற்போது முக்கிய ஆதாரமாக உள்ளது. இதன் அடிப்படையில் குற்றவாளிகள் யார் என்பதை இன்னும் ஒரிரு நாளில் வரைபடமாக வெளியிடப்படும் என்று பயங்கரவாத தடுப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் இது தொடர்பான விசாரணை அருகில் உள்ள மாநிலங்களான, குஜராத், மேற்குவங்கம், உ. பி., மற்றும் கர்நாடக மாநிலங்கள் சென்று சிறப்பு போலீசார் விசரணை நடத்தி வருகின்றனர்.
குஜராத்தில் முகாமிட்டுள்ள போலீசார் இது தொடர்பாக ஒரு முக்கியநபரிடம் விசாரணை நடத்தினர். இவர் ஆமதாபாத்தில் (2009 ) நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய அப்சல் உஸ்மானியா என்பவரது சகோதரர் பயாஸ்உஸ்மானி (44) . அப்சல் தற்போது சிறையில் உள்ளார். இவருக்கு இந்திய முஜாகிதீன் என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உண்டு. இதனால் பயாசை வரவழைத்த சிறப்பு படையினர் துருவி, துருவி விசாரணை மேற்கொண்டனர். விசாரணை நடந்து கொண்டிருந்தபோது பயாஸ் தமக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறினார். இதனையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் நேற்று இறந்து போனார். டாக்டர்கள் இவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஹைபர் டென்சன் மற்றும் மூளையில் ரத்தக்கசிவு காரணமாக இறந்திருக்கலாம் என டாக்டர்கள் கூறியுள்ளனர். ஆனால் இவரது சாவில் மர்மம் இருப்பதாகவும் இதற்து பயங்கரவாத தடுப்பு படை போலீசாரே காரணம் என்றும் பயாஸ் உறவினர்கள் ஆவேசமுற்று பிணத்தை வாங்க மறுத்துள்ளனர்.
விசாரணையின் போது போலீசார் டார்ச்சர் கொடுத்துள்ளனர் என இவரது குடும்ப உறுப்பினர்கள் கூறியதை அடுத்து பயாஸ் உடல் பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விசாரணைக்கு அழைக்கும் போது பயாஸ் உடல் நலம் குன்றியிருந்தார் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மும்பை குண்டுவெடிப்பில் 19 பலியானது தொடர்பான விசாரணை மும்முரமாக நடந்து வரும் வேளையில் பயாஸ் சாவு ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது. காரணம் இவரிடம் முக்கிய தகவல்கள் கிடைக்கும் என போலீஸ் தரப்பில் எதிர்பார்க்கப்பட்டது.
விசாரணைக்கு டி.ஜி.பி., உத்தரவு: பயாஸ் மரணம் குறித்து சி.ஐ.டி., விசாரணைக்கு மகாராஷ்டிரா மாநில டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார். பயாஸ் மரணம் குறித்து பல்வேறு கோணங்களில் சி.ஐ.டி., போலீசார் விசாரிப்பார்கள் என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
இதனிடேயே, பயாசின் மரணம் இயற்கையானது. அவருக்கு ஏற்பட்ட உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டது. அளவுக்கு மீறி ரத்த அழுத்தம் காரணமாகவே பயாஸ் மரணமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கும்போது அவரது உடலில் காயங்கள் ஏதும் இல்லை சிடி ஸ்கேன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments
Post a Comment