Latest News

July 07, 2011

51 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பூச்சியின் படிமம் அவுஸ்திரேலியாவில் கண்டறியப்பட்டுள்ளது
by admin - 0

பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பூச்சிகள் அதிக பார்வைத் திறனுடன் இருந்திருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
51 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பூச்சியின் படிமம் அவுஸ்திரேலியாவில் கண்டறியப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் தென் பகுதியில் உள்ள கங்காரு தீவில் அடிலைடு பல்கலைக்கழகம் மற்றும் தெற்கு அவுஸ்திரேலிய அருங்காட்சியக குழுவினர் இணைந்து சமீபத்தில் தொல்பொருள் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.
இதில் 51.5 கோடி ஆண்டு பழமையான பூச்சியின் படிமத்தை கண்டுபிடித்துள்ளனர். இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது: பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினங்களின் பார்வைத் திறன் குறைவாக இருந்திருக்க கூடும் என்று நம்பப்பட்டு வந்தது.
கங்காரு தீவில் கிடைத்திருக்கும் படிமத்தை வைத்து பார்க்கும் போது அவற்றின் பார்வை திறன் நன்கு இருந்திருக்க வேண்டும் என்பது நிரூபணமாகியுள்ளது.
தற்போது கிடைத்திருப்பது தட்டான் போன்ற பூச்சியாக இருக்கலாம் என்று தெரிகிறது. இவை கூட்டுக் கண் அமைப்பு கொண்டவை. இதன் கண்ணில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான லென்ஸ்கள் இருந்திருக்கலாம்.
தெள்ளத் தெளிவான பார்வையை அந்த வகை பூச்சி பெற்றிருந்திருக்கும். 54 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் ஏற்பட்ட மாபெரும் வெடிப்பு நிகழ்வுக்கு அப்புறம் விலங்குகள், பூச்சியினங்களின் பார்வைத் திறன் அதிகம் இருந்திருக்கலாம் என்று தெரிகிறது.
இதுதொடர்பான ஆய்வு நடந்து வருகிறது. மனிதர்களின் கண்ணில் ஒரே ஒரு லென்ஸ் மட்டுமே உள்ளது. தற்போது இருக்கும் தட்டான்பூச்சியின் கண்ணில் சுமார் 30 ஆயிரம் லென்ஸ்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments