Latest News

July 19, 2011

16 பாக். போலீசாரை சுட்டுக் கொல்லும் வீடியோவை வெளியிட்ட தாலிபான்கள்
by admin - 0

16 பாகிஸ்தான் போலீசாரை சுட்டுக் கொன்ற வீடியோவை பாகிஸ்தான் தாலிபான் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.

தாலிபான் தீவிரவாதிகள் கடந்த மாதம் வடமேற்கு மாகாணத்தில் இருந்து 16 போலீசாரை பிடித்துச் சென்றனர். இந்நிலையில் அந்த 16 பேரையும் சுட்டுக் கொல்லும் வீடியோவை லைவ் லீக் என்னும் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில் 16 போலீசாரின் முகங்களும் கருப்புத் துணியால் மறைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கைகள் பி்ன்னால் கட்டப்பட்ட நிலையில் வரிசையாக நிற்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் முன்பு முகங்களை துணியால் மறைத்துக் கொண்டு 4 தீவிரவாதிகள் கையில் துப்பாக்கியுடன் நிற்கின்றனர்.

அதில் ஒரு தீவிரவாதி பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் பேசப்படும் பாஷ்டோ என்ற மொழியில் அந்த போலீசார் ஸ்வாட் மாவட்டத்தில் 6 குழந்தைகளைக் கொன்றதாகக் கூறுகிறான்.

அவன் மேலும் பேசியதாவது,

இவர் பாகிஸ்தானில் இஸ்லாத்திற்கு எதிராக உருவாகி இருக்கும் எதிரிகள். இவர்கள் அனைவரும் பாகிஸ்தான் போலீசார், வீரர்கள் மற்றும் ஆதரவாளர்கள். இவர்கள் அன்மையில் ஸ்வாட் மாவட்டத்தில் 6 குழந்தைகளை ஈவு இரக்கம் இன்றி கொன்றனர். இவர்கள் தற்போது எங்கள் பிணைக்கைதிகள். அந்தக் குழந்தைகளை எப்படி கொன்றார்களோ, அதேபோன்று இவர்களையும் கொல்லப்போகிறோம். குழந்தைகளின் கொலைக்கு பழிக்குப் பழி வாங்கப்போகிறோம் என்றான்.

அவன் பேச்சை முடித்ததும் துப்பாக்கிச் சூடு நடத்தும் சத்தம் கேட்கிறது. உடனே அந்த போலீசார் அனைவரும் தரையில் விழுந்து வலியில் முணங்குகின்றனர். இதையடுத்து ஒரு தீவிரவாதி ஒவ்வொரு போலீசாராகச் சென்று பார்த்து அதில் உயிருடன் இருப்பவர்களை மீண்டும் சுடுகிறான்.

வீடியோ கேமரா வைத்திருக்கும் இன்னொரு தீவிரவாதி இந்த கொடூரச் செயலை வீடியோ எடுக்கிறான். இந்த வீடியோ 5 நிமிடம், 36 விநாடிகள் ஓடுகிறது. இந்த வீடியோவுக்கு இது வரை எந்த தாலிபான் அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இது குறித்து பாகிஸ்தான் அதிகாரிகள் கூறுகையில்,

கடந்த ஜூன் மாதம் 1-ம் தேதி ஆப்கானிஸ்தானில் இருந்து நூற்றுக்கணக்கான தாலிபான்கள் வடமேற்கு கைபர்-பக்டுன்க்வா மாகாணம், அப்பர் திர் மாவட்டம், ஷால்டலோவில் உள்ள காட்டுப் பகுதியான பாராவல் கிராம போலீஸ் சோதனைச் சாவடியைத் தாக்கினர்.

ஷால்டலோ ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ளது. 2 நாட்கள் நடந்த இந்த தாக்குதலில் குறைந்தது 28 பாகிஸ்தான் துணை ராணுவத்தினரும், 45 தாலிபான்களும் கொல்லப்பட்டனர் என்றார்.

கடந்த ஆண்டு ஸ்வாட் மாவட்டத்தில் 6 இளம் பாகிஸ்தான் ராணுவ வீரர்களைக் கொல்லும் வீடியோ வெளியானது. ஆனால் அது பொய் என்று பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது.


« PREV
NEXT »

No comments