கப்பி: ஆண் மீன்கள் 2.5 செ.மீ. நீளமும், பெண் மீன்கள் 5 செ.மீ. நீளம் வரையிலும் வளர்கின்றன. 7.5-8.5 கார அமில நிலையும் வளர்ப்பிற்கேற்ப தட்பவெப்ப சூழ்நிலையும் (26-30 டிகிரி செ.கி) ஏற்றவை. 4-6 வார காலத்திற்கு ஒருமுறை 50 குட்டிகளை இடுகின்றன.
மோலி: கறுப்பு, வெள்ளை, ஆரஞ்சு மற்றும் சாக்லேட் நிறமுடையவை. 9 செ.மீ. நீளமும், 10-15 கிராம் எடை வரையிலும் வளர்பவை. 5 வாரத்திற்கு ஒரு முறை 250 குட்டிகளை இடும். ஆண் மீன்களின் முதுகுத் துடுப்பு நிமிர்ந்து விசிறி போல் காணப்படும்.
பிளாட்டி: பல்வேறு வண்ண வகையினை உடையது. ஆண் மீன்கள் 4 செ.மீ. வரையிலும், பெண் மீன்கள் 5 செ.மீ. வரையிலும் 3-4 வார இடைவெளிக்கு ஒரு முறை 50-75 குட்டிகளை இடும். 10 பெண் சினை மீன்களுக்கு ஒரு ஆண் மீன் என இருப்பு செய்ய வேண்டும்.
ஸ்வோர்ட்டெய்ல்: ஆண் மீன்கள் 8 செ.மீ. வரையிலும் பெண் மீன்கள் 12 செ.மீ. நீளம் வரையிலும் வளர்கின்றன. 5 பெண் மீன்களுக்கு ஒரு ஆண் மீன் போதுமானது. ஆண்மீனின் வால் துடுப்பு வீரனின்வாள் போல் நீண்டு வனப்புடன் காணப்படும்.
எல்லா வகையான குட்டியிடும் அலங்கார மீன்களுக்கும் நீர்ப்பாசிகள் மறைவிடமாகவும் பாதுகாப்பாகவும் விளங்குகின்றன. புழு, பூச்சி போன்ற உயிர் உணவுகளையே மீன்கள் விரும்பி உண்கின்றன. எனவே சினை மீன்களின் இனப்பெருக்க உணர்ச்சியினைத் தூண்ட புரதம் நிறைந்த உணவுகளையும் தகுந்த மறைவிடங்களையும் அளித்து குட்டிகளைப் பாதுகாத்து உற்பத்தி செய்ய வேண்டும்.
முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்ற மீன்களில் கோய் கெண்டை, செவ்வால் சுறா, பொன்மீன், ரோசி பாரிப், டைகர் பாரிப், டெட்ரா, கவுராபி, பைட்டர், ராமிரன் நீல சிக்ளிட், அவுரோங்கல், ஏஞ்சல், ஆஸ்கார் ஆகியவை கண்ணாடித் தொட்டிகளை அலங்கரித்து கண்களுக்கு விருந்தூட்டுபவை. வியாபார ரீதியில் வளர்த்து உற்பத்தி செய்து விற்பனை செய்வதற்கு ஏற்றவை.
பொன்மீன்: சிவப்பு ஒராண்டா, சிங்கத்தலை, முட்டைக்கண் முத்துச்செதில், காரிகோ, கருப்புமூர் போன்ற நூற்றுக்கணக்கான வகையான பொன்மீன்கள் உள்ளன. இம்மீன்கள் தாவர மற்றும் புழுபூச்சி போன்ற மாமிச உணவுகளை உண்டு 4 மாதகாலத்தில் 20 முதல் 25 கிராம் உடல் எடையினைப்பெறும். 5 முதல் 6 மாத காலத்தில் பருவ முதிர்ச்சியடைந்து இனப்பெருக்கம் செய்கின்றன. காரத்தன்மையுடையதும் (7.5 - 8.5) மிதமான வெப்பநீரும் (25-28.5 டிகிரி செ.கி), மித கடின நீரும் (150-250 மி.கி/லி) பொன் மீனுக்கு ஏற்ற நீர்ச்சூழல் குணங்கள் 25 கிராம் எடையுள்ள பொன்மீன் கிட்டத்தட்ட 750 ஒட்டும் தன்மையுள்ள முட்டைகளை நீர்ப்பாசிகளில் இடுகின்றன. சிறிய நூல் போன்ற நுண் குஞ்சுகள் 65-72 மணி நேரத்தில் பொரிந்து வெளிவருகின்றன. பொன்மீன்களைத் தொட்டிகளில் தனியாகத்தான் வளர்க்க வேண்டும்.
No comments
Post a Comment