Latest News

June 23, 2011

அவன் இவன்- பட விமர்சனம்
by admin - 0


நடிப்பு: விஷால், ஆர்யா, ஜிஎம் குமார், ஆர்கே, அம்பிகா, பிரபா ரமேஷ், ஜனனி, மதுஷாலினி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
ஒளிப்பதிவு: ஆர்தர் வில்சன்
வசனம்: எஸ் ராமகிருஷ்ணன்
கதை-திரைக்கதை-இயக்கம்: பாலா
தயாரிப்பு: கல்பாத்தி எஸ் அகோரம்
மக்கள் தொடர்பு: நிகில்


பாலாவிடமிருந்து வந்திருக்கும் முதல் கமர்ஷியல் படம் அவன் இவன். கதை, லாஜிக் என எதைப் பற்றியும் கவலைப்படாமல், சிரிக்கச் சிரிக்க காட்சிகள் அமைத்து, கடைசியில் தனது வழக்கமான வன்முறை க்ளைமாக்ஸில் முடித்திருக்கிறார் பாலா.

கதைக்காக எந்த மெனக்கெடலும் இதில் தெரியவில்லை. 'வால்டர் வணங்காமுடி' விஷால், 'கும்புடறேன் சாமி' ஆர்யா இருவரும் அண்ணன் தம்பிகள். ஆனால் அம்மாக்கள் வேறு. என்னதான் சக்களத்திச் சண்டை என்றாலும், பகை என்று வந்தாலும் உறவையும் பாசத்தையும் விட்டுக் கொடுக்காத முரட்டு அம்மாக்கள் (அம்பிகா, பிரபா ரமேஷ்)! இவர்களுக்கு திருட்டுதான் தொழில்.

இந்தக் குடும்பத்தை தன் உறவாக நினைக்கும் வாழ்ந்து கெட்ட ஜமீன் ஜிஎம் குமார். விஷாலையும் ஆர்யாவையும் சொந்தப் பிள்ளைகளாகக் கருதி பாசம் பொழிகிறார், அவர்களுடன் இம்பாலா காரில் ஊர் சுற்றுகிறார். படத்தின் கடைசி ரீலுக்கு முன்பு வரை விடிய விடிய குடிக்கிறார். அவ்வப்போது திருட்டை விட்டுவிடச் சொல்லி அட்வைஸ் பண்ணுகிறார்.

இப்படி குடியும் கும்மாளமுமாக போய்க் கொண்டிருக்கும் இவர்கள், கசாப்புக் கடைக்கு அடிமாடுகளை அனுப்பும் ஆர்கே வழியில் குறுக்கிடுகிறார்கள் (கவனிக்க: வில்லன் குறுக்கிடவில்லை... இவர்கள்தான் வில்லன் வழியில் குறுக்கிடுகிறார்கள்!). அதன் பிறகு நடப்பது வழக்கமான ரணகள க்ளைமாக்ஸ்!

விஷால் தனது ப்ரொஃபைலாக இனி புகைப்படங்கள் எதையும் காட்டத் தேவையில்லை. இந்தப் படத்தை போட்டுக் காட்டிவிடலாம். அந்த அளவுக்கு நடிப்பில் பின்னிப் பெடலெடுக்கிறார். எல்லா காட்சியிலும் ஒரு மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு ஆக்ஷன் படங்களில் வந்த விஷாலையா இப்படி மாற்றியிருக்கிறார் பாலா என்ற வியப்பு படம் முடிந்த பிறகும் அடங்கவில்லை.

அதுவும் அந்த ஆரம்ப ஆட்டமும், நவரச ஒரங்க நாடகமும் அட்டகாசம். விஷாலுக்கு இந்தப் படம் நிஜமாகவே ஒரு மைல்கல்.

ஆர்யா இரண்டாவது நாயகனாக வருகிறார். ஆனால் அவருக்கே உரிய அந்த குறும்புத்தனம் குறையாத நடிப்பு. ஜட்ஜ் வீட்டு பர்மாபெட்டி பூட்டைத் திறக்க அவர் கேட்கும் பரிசும், அதன் பிறகு செய்யும் அலப்பறைகளும் தமிழ் சினிமாவுக்கு புதுசு.

கதாநாயகிகளாக வரும் ஜனனி, மதுஷாலினியை விட, அம்மாக்களாக வரும் அம்பிகாவும் பிரபா ரமேஷும் அலட்டிக் கொள்ளாத நடிப்பைத் தந்து அசத்துகிறார்கள். அம்பிகாவுக்கு அந்தக் குரல் ஒரு பெரிய ப்ளஸ்.

ஜமீனுக்கு துரோகம் செய்த நபர் தேடி வரும் காட்சியில் அம்பிகா சீறும் காட்சி, பார்ப்பவர்களை நெகிழ வைக்கிறது.

ஜிஎம் குமாருக்கு இது ஒரு 'லைஃப்டைம்' படம். ஆனால் பாவம், அதைச் சொல்லிக் கொள்ள முடியாத அளவுக்கு அந்த கடைசி காட்சி அமைந்துவிட்டது. அந்தக் காட்சியில் அந்த நிர்வாணம் ஆத்திரத்துக்கு பதில் பரிதாபத்தையே கிளப்புகிறது.

வில்லனாக கடைசி 20 நிமிடங்கள் வரும் ஆர்கே அலட்டலில்லாத நடிப்பைத் தந்திருக்கிறார். தன்னைக் காட்டிக் கொடுத்த ஜிஎம் குமாரை அவர் பார்க்கும் பார்வையிலேயே க்ளைமாக்ஸ் தெரிந்துவிடுகிறது.

பொதுவாக பாலா படங்களில் வரும் குறியீடுகள் இந்தப் படத்திலும் உண்டு. சிரிப்பு போலீஸ், காட்சிக்குக் காட்சி கரைபுரளும் சீமைச் சாராயம், லூசுப் பெண்களாக வரும் கதாநாயகிகள்...

ஆர்யாவும் ஜிஎம் குமாரும் குடித்துவிட்டு லூட்டியடிக்கும் அந்த நீ...ள காட்சியை தயவுதாட்சண்யமின்றி கத்தரித்து வீசியிருக்கலாம்.

இருந்தாலும் திருடர்களுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தரும் கிடாவிருந்து செம ரகளை. சூர்யா வரும் அந்தக் காட்சி தேவையே இல்லை. ஆனால் விஷாலின் நடிப்பை வெளிப்படுத்த ஒரு காரணமாக இருப்பதால் பொறுத்துக் கொள்ளலாம்.

யுவன் இசை ஆரம்ப- இறுதிக் காட்சிகளில் ஆஹா... பாடல்களை மொத்தமாக கத்தரித்துவிட்டிருப்பது பரிதாபம்.

ஆர்தர் வில்சனின் கேமரா 'சிம்ப்ளி ஃபென்டாஸ்டிக்'!.

படத்தின் முடிவில் 'என்ன இது பாலா படம் மாதிரி இல்லையே'... என்ற கமெண்டை பலரும் உதிர்ப்பதைக் கேட்க முடிந்தது. பாலா இப்படித்தான் படம் எடுக்க வேண்டும் என்று யாரும் நிர்ப்பந்தப்படுத்த முடியாது. ஒரு படைப்பாளியாக அது அவரது சுதந்திரம். தனது மனதில் உள்ள பலவித படிமங்களையும் காட்சிப்படுத்த முயல்கிறார் அவர். அதில் யாருக்காகவும் சமரசம் செய்து கொள்வதில்லை.

அதனால்தான், கதை இல்லை, தீவிரத்தன்மை இல்லை, பாலாவின் முத்திரை இல்லை என ஆயிரம் விமர்சனங்கள் வைத்தபோதும், அவன் இவனை ரசிக்க முடிகிறது!
« PREV
NEXT »

No comments