ஹரித்துவார் : கறுப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிக்க வலியுறுத்தி, ஏழாவது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்த பாபா ராம்தேவின் உடல் நிலை, நேற்று மோசமடைந்தது. இதையடுத்து, டேராடூன் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உண்ணாவிரதம் இனிமேலும் தொடருமா என்பது இனித் தெரியும்.
கறுப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிக்க வலியுறுத்தி, பிரபல யோகா குரு பாபா ராம்தேவ், கடந்த 4ம் தேதி டில்லி ராம்லீலா மைதானத்தில், தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதம் இருந்தார். டில்லி போலீசார், அவரை கட்டாயப்படுத்தி வெளியேற்றியதோடு, ஹரித்துவாரில் உள்ள, அவரது ஆசிரமத்தில் கொண்டு வந்து, விட்டு விட்டு சென்றனர். ஆசிரமத்துக்கு வந்த பின்னும், பாபா ராம்தேவ் தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். நேற்று முன்தினம் அவரது உடல் நிலை மோசமடைந்தது. அவரை பரிசோதித்த டாக்டர்கள், உண்ணாவிரதத்தை கைவிடும்படி கேட்டுக் கொண்டனர். அதை அவர் ஏற்க மறுத்து விட்டார்.
இந்நிலையில் நேற்று, ஏழாவது நாளாக உண்ணாவிரதத்தை ராம்தேவ் தொடர்ந்தார். நேற்று மயக்க நிலையில் அவர் காணப்பட்டார். ஆசிரமத்துக்கு வந்த டாக்டர் யோகேஷ் சந்திர சர்மா, பாபா ராம்தேவின் உடல் நிலையை பரிசோதித்தார்.
இதன்பின் அவர் கூறுகையில்,"ராம்தேவின் உடல் நிலை மோசமடைந்துள்ளது. ரத்த அழுத்தம், இதய துடிப்பு ஆகியவை மிகவும் குறைந்து வருகின்றன. இந்த நிலை தொடர்ந்தால், அவரது இதயத்தில் அழுத்தம் ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்து ஏற்படும். எனவே, உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்'என்றார்.
இந்த தகவல், உத்தரகண்ட் மாநில முதல்வர் ரமேஷ் பொக்கிரியாலுக்கு தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஹரித்துவார் கலெக்டர் மீனாட்சி சுந்தரத்தின் உத்தரவின் பேரில், ஆசிரமத்தில் இருந்த பாபா ராம்தேவ், ஆம்புலன்ஸ் மூலமாக, டேராடூனில் உள்ள இமாலயா மருத்துவ அறிவியல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆம்புலன்சில் செல்லும்போதே, அவருக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. அவரது உடல்நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
முன்னதாக, ராம்தேவ்வை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்கு திரண்டிருந்த அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், பலத்த போலீஸ் காவலுடன் அவர், அங்கிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதற்கிடையே, ராம்தேவ் விரைவில் உடல் நலம் பெற வேண்டி, அவரது ஆதரவாளர்கள் ஹரித்துவாரில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.நேற்று மாலையில், அவர் உடல்நிலை சீரானதாகவும், ஆனாலும் அவர் தன் உண்ணாவிரதத்தை தொடர்வதாகவும் கூறப்பட்டது.
அவரை மருத்துவமனையில், வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சந்தித்தார். அவர் கூறுகையில் " மருத்துவமனையில் சேர்த்த பின் அவர் உடல்நிலை சீராக இருக்கிறது. போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டேன்' என்றார்.
ரிதம்பரா விளக்கம்: டில்லியில் ராம்தேவ் உண்ணாவிரதம் இருந்தபோது, அவருடன் சாத்வி ரிதம்பராவும் மேடையில் அமர்ந்திருந்தார். இதனால், பாபா ராம்தேவ், ஆர்.எஸ்.எஸ்., ஆதரவுடன் உண்ணாவிரதம் இருப்பதாக, சர்ச்சை எழுந்தது.
இதுகுறித்து நேற்று விளக்கம் அளித்த ரிதம்பரா,"ஊழல் என்பது, தனிப்பட்ட ஒரு நபரைச் சார்ந்தது இல்லை. அது சமுதாயத்துக்கே பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் விஷயம். இந்திய நாட்டின் குடிமகள் என்ற முறையில், ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்பதற்கான முழு உரிமையும் எனக்கு உண்டு' என்றார்.
இதற்கிடையே, டில்லியில் ராம்தேவ் உண்ணாவிரதம் இருந்தபோது நடந்த வன்முறையின்போது, போலீஸ் தாக்குதலில் காயமடைந்த ராஜ் பாலா என்ற பெண், டில்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலை மோசமாக இருப்பதாக, டாக்டர்கள் நேற்று தெரிவித்தனர்.
ஆர்.எஸ்.எஸ்., கண்டனம்: ஆர்.எஸ்.எஸ்., இணை பொதுச் செயலர் பைய்யாஜி ஜோஷி கூறுகையில்,"ராம்தேவ் போராட்டம் தொடர்பான விவகாரத்தில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை தொடர்பு படுத்தி, மத்திய அரசை சேர்ந்த சில அமைச்சர்களும், காங்கிரஸ் நிர்வாகிகளும், தொடர்ந்து புகார்களை கூறி வருகின்றனர். ஊழலுக்கு எதிராக மக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வை திசை திருப்பும் வகையில், மிகவும் மலிவான வகையில் இதுபோன்ற செயல்களில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது' என்றார்.
No comments
Post a Comment