Latest News

May 09, 2011

அல்-குவைதாவின் மூளையாக செயல்பட்டார் ஒசாமா
by admin - 0

வாஷிங்டன் : பாகிஸ்தானில், ஒசாமா பின்லாடன் தங்கியிருந்த அபோதாபாத் வீட்டில் இருந்து, அமெரிக்க வீரர்கள் கைப்பற்றிய முக்கிய வீடியோக்களில் ஐந்தை, அமெரிக்கா வெளியிட்டுள்ளது. இவற்றின் மூலம், அபோதாபாத் வீடுதான், அல்-குவைதாவின் உண்மையான செயல்பாட்டுத் தளமாகவும், கட்டுப்பாட்டு மையமாகவும் இருந்தது தெரியவந்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில், ஒரு வீட்டில் தங்கியிருந்த ஒசாமா பின்லாடன், அமெரிக்க வீரர்களின் அதிரடித் தாக்குதலில் கொல்லப்பட்ட பின், அந்த வீட்டில் இருந்த, 10 ஹார்ட் டிரைவ்கள், ஐந்து கணினிகள், 100 டிஸ்க்குகள் மற்றும் தம்ப் டிரைவ்கள், அவர்களால் கைப்பற்றப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டன.அவற்றில், ஐந்து வீடியோக்களை அமெரிக்கா நேற்று வெளியிட்டது. இந்த ஐந்து வீடியோக்களிலும், ஒலிப்பதிவுகள் (ஆடியோ) நீக்கப்பட்டுள்ளன. அந்த ஒலிப்பதிவுகள் அனைத்தும், பயங்கரவாதிகள் பற்றியும், அவர்களின் பிரசார செய்திகள் பற்றியும் இருந்ததால், அவை தற்போதைக்கு பொருத்தமற்றவையாக கருதப்பட்டு நீக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் காரணம் தெரிவித்துள்ளனர். இந்த ஐந்து வீடியோக்களும் தற்போதைக்கு பொது இணையதளங்களில் வெளியிடப்படவில்லை. அல்-குவைதா பிரசாரத்திற்காக தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தி இவற்றை ஒசாமா எடுத்திருப்பதாலும், வெளியிடங்கள் சிலவற்றில் எடுத்த வீடியோக்கள், பின்லாடனுடன் இணைக்கப்பட்டிருப்பதாலும், இந்த இரண்டாலும் அமெரிக்காவுக்கு எவ்விதப் பயனும் இல்லை என்பதாலும், இவை பொது இணையதளங்களில் வெளியிடப்படவில்லை என, அதிகாரிகள் காரணம் கூறியுள்ளனர்.இந்த வீடியோக்களில், பெரும்பாலும், ஒசாமா தன் வீட்டில் உட்கார்ந்து கொண்டு, "டிவி'யில், செய்திச் சேனல்களை பார்ப்பது தான் பதிவாகியுள்ளது. இறுதியில் ஒரு வீடியோவில், ஒரு செய்தி சேனலில் தனது படம் காண்பிக்கப்படுவதை ஒசாமா பார்ப்பது பதிவாகியுள்ளது."டிவி'யில் ஒசாமா பின்லாடன் துப்பாக்கியால் சுடுவதைப் படம் எடுக்குமாறு, வீடியோ எடுப்பவரை நோக்கி ஒசாமா சைகை காட்டுவது மற்றொரு வீடியோவில் பதிவாகியுள்ளது.

அல்-குவைதா மையம்:இந்த வீடியோக்கள் எவ்வகையிலும் மாற்றம் செய்யப்படாமல் அப்படியே வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அதிகாரிகள், இவற்றின் மூலம் அபோதாபாத் ஒசாமா வீடு, அல்-குவைதாவின் உண்மையான செயல்பாட்டு தளமாகவும் கட்டுப்பாட்டு மையமாகவும் இருந்துள்ளதாக கூறியுள்ளனர்."ஒசாமா பின்லாடன், அல்-குவைதாவின் கொள்கை வகுப்பாளராக மட்டுமல்லாமல், திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஈடுபட்டிருந்தார். அல்-குவைதா தனது முக்கிய முடிவுகளை எடுப்பதில் மூளையாகச் செயல்பட்டார்' என, அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.இந்த ஐந்து வீடியோக்களும், "அமெரிக்க மக்களுக்கு ஒரு செய்தி' என்ற பெயரில் பதிவிடப்பட்டுள்ளன. இவற்றில், அமெரிக்காவின் கொள்கைகளை ஒசாமா விமர்சிப்பது, முதலாளித்துவத்தை அவதூறு செய்வது ஆகியவை இடம் பெற்றுள்ளன.

முதல் இரு வீடியோக்களும், 2010, அக்டோபர் 9 முதல், நவம்பர் 5ம் தேதிக்குள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். இறுதி மூன்று வீடியோக்களில், ஒசாமா தன்னை வீடியோ எடுப்பதற்கான ஒத்திகை காட்சிகள் மட்டும் இடம் பெற்றுள்ளன.

பயங்கரவாத மிரட்டல்கள் உள்ளனவா? ஒசாமா வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டவற்றில், பயங்கரவாத மிரட்டல்கள் அல்லது திட்டங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனவா என அமெரிக்கா ஆராய்ந்து வருகிறது.

இதுகுறித்து பேசிய அமெரிக்க உளவுத் துறை அதிகாரி ஒருவர், "ஏதாவது பயங்கரவாத திட்டங்கள் அவற்றில் இருக்கின்றனவா என்பதை கண்டுபிடிப்பதற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். அப்படி ஏதாவது திட்டங்கள் இருந்தால், அவற்றைப் பற்றி அமெரிக்க அதிகாரிகளுக்கும், அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கும் தகவல் தெரிவிப்பதற்கும் முக்கியத்துவம் கொடுக்கிறோம்' என்றார்.

"கிடைத்துள்ள ஆவணங்களில் இருந்து, அல்-குவைதாவுக்குள் பகிர்ந்து கொள்ளப்பட்ட தகவல்கள் பற்றி சில குறிப்புகள் கிடைத்துள்ளன. மேலும் பல முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்று நம்புகிறோம்' என்றும் கூறினார்.

அல்-குவைதா அபாயம் : * ஒசாமா வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் மூலம், அல்-குவைதா, இன்னும், அமெரிக்கா மற்றும் உலக நாடுகளைத் தொடர்ந்து அச்சுறுத்தும் பயங்கரவாத அமைப்பாக செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
* ஒசாமா வீட்டுக்கு எதிர்ப்புறம் குடியிருந்த நபரை கைது செய்து விசாரித்த பாக்., போலீசார், நேற்று அவரை விடுவித்தனர்.
* "பாகிஸ்தானுக்குள் புகுந்து ஒசாமாவை சுட்டுக் கொன்றதால், பாகிஸ்தானின் இறையாண்மையை அமெரிக்கா மீறவில்லை. அதற்கான தேவையும் இல்லை' என, பாக்., பிரதமர் யூசுப் ரசா கிலானி தெரிவித்துள்ளார்.Osama Bin Laden


« PREV
NEXT »

No comments