சார்லஸ் - டயானா தம்பதிகளின் மகனான இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தனது நீண்ட நாள் தோழியான கேதரீன் மிடில்டனை திருமணம் செய்ய முடிவு செய்தார்.அவர்களுடைய திருமணம் இன்று நடப்பதாக நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
லண்டனில் உள்ள பெஸ்ட் மினிட்டர் தேவாலயத்தில் திருமணத்தை நடத்த முடிவு செய்து இருந்தனர். இதற்கான ஏற்பாடுகள் விரிவாக நடந்து வந்தன. லண்டன் நகரமே விழாக்கோலம் பூண்டது.
திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க 50 நாட்டு தலைவர்கள் உள்பட 1900 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தன. அவர்கள் நேற்றே லண்டன் வந்து சேர்ந்து விட்டனர்.
இங்கிலாந்து நேரப்படி இன்று காலை 8.15 மணிக்கு திருமண (இந்திய நேரம் பகல் 1.45) நிகழ்ச்சிகள் தொடங்கின. அதை தொடர்ந்து முக்கிய பிரமுகர்கள் தேவாலயத்துக்கு வந்தனர். அதை தொடர்ந்து மணமகன் வில்லியமும் ராஜ குடும்பத்தினரும் அடுத்தடுத்து தேவாலயத்துக்கு வந்தனர்.
மணமகள் கேதரீன் குடும்பத்தினர் தேவாலயம் அருகே உள்ள கோரிவ் ஓட்டலில் தங்கி இருந்தனர். மணமகன் வில்லியம் தேவாலயத்துக்கு வந்ததும் மணமகள் குடும்பத்தினர் தேவாலயத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
அதை தொடர்ந்து இங்கிலாந்து நேரப்படி 11 மணிக்கு (இந்திய நேரம் மாலை 4.30) திருமண நிகழ்ச்சிகள் தொடங்கின. இங்கிலாந்து ராஜ குடும்பத்து திருமணங்கள் எப்போதுமே மிக விமரிசையாக நடத்தப்படும். அதே போல இந்த திருமணமும் விமரிசையாக நடந்தது. அதுவும் வில்லியம் பட்டத்து இளவரசர் என்பதால் கொண்டாட்டங்கள் அதிகமாக இருந்தன.
திருமணத்துக்கு 1900 பேர் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தாலும் மணமக்களை அரண்மனைக்கு அழைத்து செல்வதை பார்ப்பதற்கு இங்கிலாந்து மக்கள் தேவாலயம் பகுதியில் குவிந்தனர். தாமதமாக சென்றால் இடம் கிடைக்காது என்பதால் நேற்றே தேவாலயம் பகுதியிலும், மணமக்கள் அரண்மனைக்கு செல்லும் பகுதியிலும் ஏராளமானோர் திரண்டு விட்டனர். அவர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கூடாரம் அமைத்து தங்கி இருந்தனர்.
இன்று காலையில் இருந்து அந்த பகுதியில் மேலும் ஏராளமானோர் திரண்டு விட்டனர். அந்த பகுதியில் மட்டும் லட்சக்கணக்கானோர் திரண்டு இருந்தனர். திருமண நிகழ்ச்சிகளை 90 டி.வி. நிறுவனங்கள் நேரடி ஒளிபரப்பு செய்திருந்தன. இதை உலகம் முழுவதும் 200 கோடி பேர் பார்பபார்கள் என கணிக்கப்பட்டு உள்ளது.
தங்கள் நாட்டு இளவரசர் திருமணம் என்பதால் இங்கிலாந்து மக்கள் இதை தங்கள் வீட்டு திருமணம் போலவே கருதினார்கள். இதனால் நாடு முழுவதுமே கொண்டாட்டங்கள் களைகட்டின.
திருமணத்தையொட்டி லண்டன் நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. திருமணம் நடந்த இடத்திலும் முக்கிய பகுதிகளிலும் அதிரடிப்படையினர் நிறுத்தப்பட்டிருந்தனர்.
No comments
Post a Comment