பொருளாதார சேதநிலை: இளம் பயிரில் சதுர மீட்டருக்கு 2 முட்டைக்குவியல்கள் அல்லது பயிர் வளர்ச்சிக் காலத்தில் 10 விழுக்காடு தூர்களில் நடுக்குருத்து வாடி இருத்தல் மற்றும் மணி பிடிக்கும் பருவத்தில் 2 விழுக்காடு வெண் கதிர்கள் தோன்றுதல் போன்ற அறிகுறிகள் இதன் பொருளாதார சேதநிலைக்கு ஒரு அளவுகோலாகும்.
மேலாண்மை முறைகள்: அறுவடை செய்தபின் தாள்களை மடக்கி உழுவதன் மூலம் புழுக்களையும், கூட்டுப்புழுக்களையும் அழிக்கலாம். * நடவு செய்யும் பொழுது வாடிய நடுக்குருத்து உடைய நாற்றுகளைத் தவிர்க்க வேண்டும்.* சிபாரிசு செய்யப்பட்ட அளவிற்கு மேல் தழைச்சத்து உரங்கள் இடுவது கூடாது. * ஏனைய பூச்சிகள் போன்று இப்பூச்சியும் இரவு நேரங்களில் விளக்குப் பொறிகளுக்கு ஈர்க்கப்படுவதால் அந்துப் பூச்சிகளை எளிதில் அழிக்கலாம். மேலும் விளக்குப் பொறி மூலம் இப்பூச்சியின் எண்ணிக்கை மற்றும் நடமாட்டத்தையும் கணக்கிடலாம். விளக்குப் பொறியின் அடியில் ஒரு தட்டில் மண்ணெண்ணெய் கலந்த நீர் வைத்தால் வெளிச்சத்திற்கு கவரப்படும் அந்துப்பூச்சிகள் நீரின்மேல் விழுந்து அழிகின்றன. நாற்றங்காலுக்கு அருகில் விளக்குப்பொறியை வைக்கக்கூடாது. ஐந்து ஏக்கருக்கு ஒரு விளக்குப்பொறி போதுமானது.
* இப்பூச்சியின் தாக்குதலைத் தாங்கி வளரக் கூடிய ஐ.ஆர்.8, 20, 26, 36, 40 மற்றும் 56 போன்ற நெல் ரகங்களைப் பயிரிடலாம்.
* எக்டருக்கு டிரைகோகிரம்மா ஜப்பானிக்கம் ஒட்டுண்ணியை 5 சி.சி. என்ற அளவில் நாற்று நட்ட பிறகு 15 நாட்கள் முதல் வாரம் ஒரு முறை நான்கு வாரத்திற்கு வயலில் கட்டி குருத்துப் பூச்சியின் முட்டைகளை அழிக்கலாம்.
* பூச்சி தாக்குதல் அல்லது முட்டை குவியல்கள் பொருளாதார சேத நிலையைத் தாண்டும்போது ஒரு ஏக்கருக்கு மோனோ குரோட்டோபாஸ் 400 மி.லி. அல்லது புரொபெனோபாஸ் 400 மி.லி. என்ற அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம்
No comments
Post a Comment