Latest News

September 09, 2020

கொக்கு தொடுவாயில் தமிழர்கள் மீள் குடியேற மகாவலி அதிகார சபை தடையாக உள்ளது – கஜேந்திரகுமார்
by Editor - 0

முல்லைத்தீவு மாவடத்திலுள்ள கொக்கிளாய் மேற்கு, கொக்குத்தொடுவாய் வடக்கு, கொக்குத்தொடுவாய் தெற்கு ஆகிய பகுதிகளில் 601 தமிழரகளுக்குச் சொந்தமான 2,524 ஏக்கர் பயிரச் செய்கை நிலங்களில் தமிழர்கள் மீளவும் குடியமரவும், விவசாயம் செய்யவும் மகாவலி அதிகார சபையால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

2005 ம் ஆண்டிலிருந்து 2015ம் ஆண்டுவரையான காலப்பகுதியிலான மகிந்த இராஜபக்சவின் ஆட்சிகாலத்துடன் ஒப்பிட்டு 2015ம் ஆண்டிலிருந்து 2020ம் ஆண்டு காலப்பகுதிக்கான மத்திய வங்கியின் நிதி அறிக்கை தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் இரஞ்சித் பண்டார சமர்ப்பித்திருக்கும் ஒத்திவைப்புப் பிரேரணை தொடர்பில் உரையாற்றும்போது கஜேந்திரகுமார் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிக்கையில்,

மத்தியவங்கியின் ஆளுனர் பேராசிரியர் லக்ஸ்மன் யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்து அங்கு பல கூட்டங்களில் கலந்துகொண்டுள்ளார்.

இன்றை பத்திரிகைகளில் குறிப்பாக டெயிலி எப்ரி பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தக் கூடடங்களிற்கான முக்கிய நோக்கம், நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் உட்பட முறைசார் மற்றும் முறைசாரா நிதிநிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைக் கண்டறிந்து, அவற்றுக்கு அவர்களுடைய பங்களிப்புடன் தீர்வினை எட்டுவது எனவும் இச்செய்திகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

போருக்குப் பின்னரான காலத்தில், வடக்குக் கிழக்கில் கடன் பிரச்சனை என்பது அதிலும் குறிப்பாக நுண்கடன் தொடர்பான பிரச்சனைகள் மக்களை தற்கொலைக்கு தூண்டுமளவிற்கு மோசமானதாக உருவெடுத்துள்ளன.

இப் பிரேரணையானது 2015ம் ஆண்டிலிருந்து 2020 வரையான காலப்பகுதியல் பொருளாதாரப் பிரச்சனைகளை குறித்து நிற்கிறது. ஆனால் நுண்கடன் தொடர்பான பிரச்சனை 2009இல் போர்முடிவுற்றகாலத்திலேயே ஆரம்பித்துவிட்டது.

வடக்கு கிழக்கில் வாழும் மக்கள், முக்கியமாக தமிழ் மக்கள் பொருண்மியத்தில் மிகவும் பாதிப்பிற்குள்ளாகியிருக்கிறார்கள்.

போர் நடைபெற்ற காலத்தில், அவர்களது பகுதிகள் யுத்தவலயமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. அங்கு பலபத்தாண்டுகளாக மிகக்கடுமையான பொருளாதாரத் தடை நடைமுறையிலிருந்தது

அம்மக்கள் பொருளாதார பலத்தில் நாட்டின் ஏனையபகுதிகளில் வசிப்பவர்களுடன் ஒப்பிடும்போது 30வருடங்கள் பின்னிற்கிறார்கள்.

போர் முடிவிற்கு வந்ததன் பின்னரான காலப்பகுதியில், பிரதமர் அவர்கள் நாட்டின் ஜனாதிபதியாகவும், நிதி அமைச்சராகவும் இருந்தபோது, இந்த நுண்கடன் நிறுவனங்கள் காளான்கள் முளைப்பதுபோல் உருவாகி அங்கு செயற்பட ஆரம்பித்தன. போரினால் பாதிக்கப்பட்ட இந்த மக்கள் நாட்டின் ஏனையபகுதிகளுடன் வாழ்பவர்களுடன் பொருளாதாரவிடயங்களில் போட்டியிடவேண்டியிருந்ததால் அவர்கள் நுண்கடன் பெறவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களை பொருளாதார ரீதியில் மேம்படுத்துவதற்கு முற்போக்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. அதற்கு மாறாக அப்போதைய அரசாங்கம் இவ்விடயத்தையிட்டு பாராமுகமாகவே இருந்தது. இந்த நிலையில் திடிரெனத் தோற்றம்பெற்ற இந் நிதிநிறுவனங்கள் வழங்கிய கடனில் தங்கியிருக்க வேண்டிய நிலைக்கு அங்குள்ள மக்களுக்கு தள்ளப்பட்டார்கள்.

மோசமான முறையில் செயற்படும் இந்நிறுவனங்களிலிருந்து கடன்களைப் பெற்றவர்கள் முற்றிலுமாக வங்குரோத்து நிலைக்கு இட்டுச் செல்லப்பட்டனர். சிறு வர்த்தகர்கள் மட்டுமல்ல நடுத்தர மற்றும் பெரியளவிலான வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள்கூட கடனை மீளசெலுத்தமுடியாத நிலையில் தங்களை மாய்த்துக் கொள்ளுமளவிற்கு நிலமை பாரதூரமாகவுள்ளது.

வடக்கு கிழக்கில் தற்கொலைசெய்யும் வர்த்தகர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கிறது. போருக்குப்பின்னரான காலத்திலேயே தற்கொலைகள் அதிகரித்துச் செல்வதனை கவனத்திற்கொள்ள வேண்டியுள்ளது. போர்க்காலத்தில் அங்குள்ள பொருளாதார நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. ஆனால் போருக்கு பின்னரான காலத்தில் முன்னரைவிட மோசமானதாக மாறியிருக்கிறது.

மத்தியவங்கியின் முன்னாள் ஆளுனர் இந்த நுண்கடன் நிறுவனங்கள் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார். வங்கிகள், மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட நிதிநிறுவனங்கள் தவிரந்து மற்றைய சிறு நிதிநிறுவனங்கள், நுண்கடன் விடயத்தில் பெருத்த குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

நுண்கடன் வழங்கும் நிறுவனங்களை இவ்வரசாங்கம் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படவேண்டும.

இந்த அரசாங்கமே முன்னைய ஆட்சியில் இந்நிலையை உருவாக்கியவர்கள் என்றவகையில் இதனைச் சீர்செய்வதற்கான கடப்பாடு உங்களிடமே உள்ளது.

ஜனாதிபதி தனது கொள்கை விளக்க உரையில், மக்களின் பொருண்மியத்தை மேம்படுத்தும் விடயத்தில் இனவேறுபாடின்றிச் செயற்படவிருப்பதாகக் குறிப்பிட்டார். கடனில் மூழ்கி மரணப்பொறிக்குள் சிக்கியிருக்கும் இம்மக்களை பொருண்மிய சுமையிலிருந்து விடுவிக்கவேண்டிய கடமை இந்த அரசாங்கத்திற்கு உள்ளது. கடன் சுமையிலிருந்து இம்மக்கள் வெளிவர உதவுவது மட்டும் போதுமானதன்று. அவர்களிடமுள்ள பொருண்மியத்தை பாதுகாப்பதற்கு அவர்களுக்கு உதவவேண்டும். போருக்கு பின்னரான பத்தாண்டு காலத்தில் இது நடைபெறவில்லை. இனியாவது அதனைச் செய்வதற்கு அரசாங்கம் முன்வரவேண்டும்.

ஜனாதிபதி தனது கொள்கை விளக்கவுரையில் குறிப்பிட்ட இன்னொருவிடயம், காணியற்று அரசாங்கக் காணிகளில் குடியிருப்பவர்களும் அவற்றை சொந்தமாக்கி உறுதி வழங்கவுள்ளதாகத் தெரிவித்திருந்தார். இதுபற்றிய விவாதத்தில் உரையாற்றியபோது நான் அதனை வரவேற்றிருந்தேன். ஆனால் இவ்விடயம் தொடர்பிலான களநிலை அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது.

முல்லைத்தீவு மாவடத்திலுள்ள கொக்கிளாய் மேற்கு, கொக்குத்தொடுவாய் வடக்கு, கொக்குத்தொடுவாய் தெற்கு ஆகிய பகுதிகளில் 601 தமிழரகளுக்குச் சொந்தமான 2,524 ஏக்கர் பயிரச் செய்கை நிலத்தில் மக்கள் மீளக் குடியமரவோ, சுதந்திரமாக விவசாயம் செயய்வோ முடியாத நிலையிலிருக்கிறது. உறுதிப் பத்திரங்கள், மற்றும் அனுமதிப்பத்திரங்கள் (Permits) உள்ளதுமான மேற்படி 2524 ஏக்கர் நிலங்களில் 784 ஏக்கர் நிலம் அந்தப் பகுதியைச் சேராத சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இது தமிழ் மக்களின் உரிமைகளை மீறுவதாக அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள ஆமையன் குளம், முந்திரிகைக்குளம், சாம்பன் குளம், மணற்கேணி, ஆகிய பகுதிகளில் உறுதிகள் மற்றும் அனுமதிப்பத்திரங்கள் உள்ளதுமான தமது காணிகளுக்கு அதன் உரிமையாளர்கள் செல்வதற்கு அப்பகுதியிலுள்ள இராணுவம் அனுமதி வழங்க மறுத்துவருகிறது. ஆனால் இக்காணிகளில் பயிர்செய்வதற்கு சிங்களமக்களுக்கு அனுமதிவழங்கப்பட்டுள்ளது. இச் சிங்கள மக்களுக்கு இக்காணி தொடர்பில் எதுவத உரிமையும் கிடையாது.

மீதியாகவுள்ள 1,740 ஏக்கர் நிலம் மகாவலி எல் வலயத்திற்குள் உட்படுத்தப்பட்டுள்ளது. காணி ஆணையாளர் நாயகத்தின் 2013/1 இலக்க சுற்றுநிருபத்தின் பிரகாரம் இந்நிலங்களுக்கான உரிமப்பத்திரங்களை வழங்குவதற்கு கரைத்துறைப் பற்று பிரதேச செயலகமானது, நடவடிக்கை மேற்கொள்ள முற்பட்டபோது மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை இவ்விடயத்தில் தலையிட்டு இந்நிலங்கள் தங்களது அதிகாரசபைக்கு உட்பட்டவை எனவும் பிரதேச செயலாளர் பணியகத்திற்கு இவ்விடயத்தில் தலையிடுவதற்கான அதிகாரமில்லை எனவும் கூறி காணிகளுக்கான உரிமம் வழங்குவதனை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அங்கு விவசாயம் செய்வதற்கு அனுமதியில்லை எனவும் அம்மக்களுக்கு கூறியிருக்கிறது. இப்போது அங்கு வீதித்தடைகள் போடப்பட்டிருக்கின்றன. காட்டு இலாகாவும், வனவிலங்குகள் திணைக்களமும் மகாவலி அதிகாரசபையுடன் இணைந்து இந்த மக்கள் தங்களுடைய காணிகளுக்கு செல்வதற்கு எந்தவிதமான உதவியையும் செய்ய மறுத்து வருகின்றன.

விவசாயத்திற்கு பயன்படும் எந்திரங்கள் எதனையும் அங்கு எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பாதைகள் மிகமோசமான நிலையில் உள்ளன. முப்பதாண்டுகால போருக்கு முகங்கொடுத்த மக்களுக்கு தங்களுடைய நிலங்களில் பயிர் செய்வதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது

இந்த நிலமை வவுனியா வடக்கில் நெடுங்கேணி, மருதோடை, பட்டிக்குடியிருப்பு, கட்டுக்குளம், மன்னன்குளம், புளியங்குளம் வடக்கு, காஞ்சுரமோட்டை, விண்ணாங்குப்பிட்டி ஆகிய பகுதிகளிலும் தொடர்கிறது. இங்கு தமிழ் மக்களுக்குரிய 960 ஏக்கர் காணிகளில் பயிரிடுவதற்கு இராணுவம் அனுமதி வழங்க மறுத்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன ஆட்சியிலிருந்தபோது இப்பகுதிகளுக்கு சென்று பார்த்திருக்கிறார். அவர் அங்கு பயணம் செய்தபோது இந்த 960 ஏக்கர் நிலமும் இராணுவத்தினால் சிங்கள மக்கள் பயிர்ச்செய்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இவர்கள் இப்பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல. வரலாற்று ரீதியாக அவர்களுக்கும் இந்நிலங்களுக்கும் எந்தத் தொடர்பும் இருந்திருக்கவில்லை.

முன்னாள் ஜனாதிபதியிடம் இவ்விடயம் கூறப்பட்டபோது, அவர் அங்கு விவசாயத்தில் ஈடுபட்டுவந்த சிங்களவர்களிடம், இது நேர்மையான நடவடிக்கையில்லை எனக் கூறியிருக்கிறார். பாரம்பரியமாக இப்பகுதியில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் மக்களுக்கு பயிரச்செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் கூறியிருக்கிறார். அவரது இந்தக் கருத்து அங்குள்ள சிங்கள மக்களாலும், ஏனைய பகுதிகளிலுள்ள சிங்கள மக்களாலும் பிரச்சனைக்குரிய விடயமாகவே பார்க்கப்பட்டது.

மத்திய வங்கியின் இவ்வறிக்கை கவனத்திலெடுக்கப்பட வேண்டுமாயின் இப்பகுதிகளிலுள்ள மக்கள் நடைமுறையில் எதிர்நோக்கி வருகிற பொருண்மிய பிரச்சனைகள் கவனத்திலெடுக்கப்பட்டு தீர்க்கப்பட வேண்டும்.

மக்கள் தாங்கள் பெற்ற கடனைத் திருப்பிசெலுத்த முடியாமல் தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்றால் இங்கு ஏதோ தவறு இருக்கிறது என்பதனை உணர்ந்து கொள்ளவேண்டும். என்பதனையும் வலியுறுத்தியுள்ளார்.

« PREV
NEXT »

No comments