Latest News

February 16, 2017

கேப்பாப்புலவு சிறுவர்களின் உரிமையை மறுக்கும் இலங்கை அரசு! இதுதானா நல்லாட்சி?
by admin - 0

கேப்பாப்புலவு மக்களின் வாழ்விடங்களை அரச படைகளான இராணுவம் அபகரித்து இராணுவ முகாம்களை அமைப்பத்துத் தங்கியிருப்பதற்கு அனுமதித்து அங்கு வாழும் மக்களை வீதியில் பரிதவிக்க விட்டுள்ள இலங்கை அரசின் செயற்பாடு மனிதாபிமானமற்ற மனிதத் தன்மையற்ற செயற்பாடாகவே நோக்கப்படுகின்றது.

கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்களின் பூர்வீக வாழ்விடங்களை இராணுவம் அடாத்தாக அபகரித்து இராணுவ முகாம்களை அமைத்துத் தங்கியுள்ளமையால் அங்கு வாழும் மக்கள் வாழ இடமின்றி இராணுவ முகாமுக்கு முன்னாலுள்ள வீதியில் சிறுவர்கள், குழந்தைகளுடன் இரவு பகலாகத் தங்கியுள்ளார்கள்.

இலங்கையில் மக்களுக்கான நல்லாட்சி நிலவுவதாகக் கூறப்படுகின்ற போதிலும் கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்கள் இன்றுடன் 14 நாட்களாக வீதியில் வசித்து வருகின்றார்கள். இதனை இலங்கையின் மக்களுக்கான நல்லாட்சியாளர்கள் இதுவரை கவனத்தில் எடுத்ததாகத் தெரியவில்லை.

இங்கு வாழும் மக்களின் வாழ்விடங்களை இராணுவம் அபகரித்துள்ளமையால் இந்த மக்கள் வாழ இடமின்றி வீதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றமையால் இவர்களது சிறுவர்கள் கல்வி கற்க முடியாத நிலையில் பாதிக்கப்படுகின்றார்கள். சிறுவர்கள் வீதியில் இரவு பகலாக வாழ்வதால் வெயில், பனி போன்றவற்றால் பாதிக்கப்பட்டு இவர்களது சுகாதார நிலைமைகளும் மறுக்கப்படுகின்றது. 
கேப்பாப்புலவு
இவர்கள் தங்கியுள்ள வீதிக்கு அருகில் பற்றைகள், காடுகள் காணப்படுகின்றன. அவற்றுக்குள் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய விஷப்பாம்புகள், காட்டு விலங்குள் போன்றவற்றாலும் அதிக பாதிப்புக்கள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.
வீதியால் செல்லும் வாகனங்கள் போன்றவற்றாலும் விபத்துக்கள் ஏற்படக்கூடிய அபாய நிலைகள் அதிகம் காணப்படுகின்றன.
இலங்கையில் மனித உரிமைகள், சிறுவர் உரிமைகள் அரசினால் மதிக்கப்படுவதாகக் கூறப்படுகின்ற போதிலும் கேப்பாப்புலவு பிலக்குடியிருப்புச் சிறுவர்கள் தமிழ்ச்சிறுவர்கள் என்ற காரணத்தினாலா இவர்களுக்கான உரிமைகள் அனைத்தும் மறுக்கப்படுகின்றன?

இலங்கையில் கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் அனைவரும் கட்டாயம் கல்வி கற்க வேண்டும். அப்படி அவர்களது கல்வியை யாராவது மறுத்தால் அவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் எனவும் கல்வி கற்காத 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களை கிராமங்கள் தோறும் சென்று சிறுவர்களை பாடசாலைகளுக்கு இணைக்கும் செயற்பாடுகள் அரசினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்தச் சிறுவர்களின் கல்வி கற்பதற்கான உரிமை முதற்கொண்டு உயிர் வாழ்வதற்கான உரிமைகளும் மீறப்பட்டு வருகின்றன.

இன்றுடன் 14 நாட்களாக இந்தச் சிறுவர்கள் வாழ இடமின்றி தமது குடும்பத்துடன் வீதியில் வசித்து கல்வி கற்க முடியாத நிலையில் அவலப்பட்டு அந்தரிக்கிறார்கள். இந்தச் சிறுவர்களுக்கு எந்த உரிமைகளும் இல்லையா? இவர்கள் உங்கள் கண்களுக்குச் சிறுவர்களாகத் தெரியவில்லையா? 

இந்தச் சிறுவர்களும் கல்வி கற்றுப் பாதுகாப்பாக வாழ இவர்களது பூர்வீக வாழ்விடங்களைப் பறித்து அதில் இராணுவ முகாம்கள் அமைக்க அனுமதித்துள்ள இலங்கையின் நல்லாட்சி உதவுமா? அல்லது 14 நாட்களாக இவர்களை வீதியில் வாழ விட்டுக் கண்மூடி இருக்கும் மனிதாபிமானமற்ற நிலை இன்னும் தொடருமா??? என்னும் ஏக்கத்துடன் இந்தச் சிறுவர்கள் காத்திருக்கிறார்கள்!!!



« PREV
NEXT »

No comments