Latest News

February 27, 2017

விடுதலைக்கானம் பாடி தமிழீழ மண்ணை இசையால் நனைத்திட்ட தமிழீழத் தேசப்பாடகர் சாந்தன் அவர்களின் மறைவு தமிழ்த்தேசிய இனத்திற்கு நிகழ்ந்த ஒப்பற்றப் பேரிழப்பு! 
-சீமான் புகழாரம்
by admin - 0

சாந்தன் 
விடுதலைக்கானம் பாடி தமிழீழ மண்ணை இசையால் நனைத்திட்ட தமிழீழத் தேசப்பாடகர் சாந்தன் அவர்களின் மறைவு தமிழ்த்தேசிய இனத்திற்கு நிகழ்ந்த ஒப்பற்றப் பேரிழப்பு! 
-சீமான் புகழாரம்! 



இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

தனது கணீர் குரல்வளத்தால் எழுச்சிப் பாடல்கள் பாடி உணர்வூட்டி தமிழீழ விடுதலை வேட்கைக்கு உரமூட்டிய தேசப் பாடகர் சாந்தன் அவர்களின் மறைவுச்செய்தி உலகமெங்கும் வாழும் தமிழர்களுக்குப் பெரும் துயரத்தைத் தந்திருக்கிறது. 

தேசத்தின் விடுதலையை முரசறிவிக்க விடுதலைக்கானம் பாடும் பெருங்குயிலாய் மாறி தமிழீழ மக்களை இசைமழையால் நனைத்திட்ட அந்தப் பெரும்பாடகனின் இழப்பு தமிழ்த்தேசிய இனத்திற்கு நிகழ்ந்த ஈடுசெய்ய முடியா பேரிழப்பாகும். அவருக்கு நாம் தமிழர் கட்சி தனது புகழ்வணக்கத்தைச் செலுத்துகிறது. 

1970களில் கொழும்பில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றைப் பார்வையிடச் சென்ற சாந்தனுக்குப் பாடும்வாய்ப்பு கிட்டவே, 'மருதமலை மாமணியிலே! முருகையா' பாடலைப் பாடி அதன்மூலம் பெரும்புகழ் பெற்றார். 

அதன்மூலம் தனது கலைப்பயணத்தைத் தொடங்கிய சாந்தன் வானொலியில் பாடும் அளவுக்கு உயர்ந்தார். பின்னர், 'சாந்தன் இசைக்குழு' என இசைக்குழுவைத் தொடங்கி மக்கள் பாடகராக உருவெடுத்தார். 

தமிழீழ விடுதலைப் புலிகளோடு இணைந்து இவர் பாடிய பலநூறு எழுச்சிப் பாடல்கள் தேச விடுதலைக்கு அறைகூவல் விடுக்கும்.

 அதிலும் இவர் பாடிய, 'இந்த மண் எங்கள் சொந்த மண்' பாடல் இப்போது கேட்டாலும் விடுதலை வேட்கையைப் பீறிட்டுக் கிளம்பச் செய்திடும். மேலும், 'ஆழக்கடல் எங்கும் சோழ மகராஜன்', 'கரும்புலிகள் என நாங்கள்', 'எதிரிகளின் பாசறையைத் தேடிப் போகிறோம்' உள்ளிட்ட இவரது பல தேச விடுதலைப் பாடல்கள் தமிழீழத் தேசத்தின் கீதமாக என்றென்றும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கும்.

 

தேசத்தின் பெரும்பாடகராய் மாறி தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் அன்பைப் பெற்ற பெரும்பாடகர் சாந்தன் அவர்கள் மண்ணுலகைவிட்டு மறைந்தாலும் தமிழீழத் தேசப்பாடல்கள் மூலமாக என்றென்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பார்! அவர் உயிராய் நேசித்திட்ட தமிழீழ விடுதலைக் கனவை அடைந்து அதனை உலகுக்குப் பறைசாற்றிடுவோம். 

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments