Latest News

February 23, 2017

கருணாவின் நேற்றைய நேர்காணலும், தலைவர் பற்றிய அவனது நகைச்சுவையும்.! ஈழத்து துரோணர்.!!
by admin - 0

கருணாவின் நேற்றைய நேர்காணலும், 
தலைவர் பற்றிய அவனது நகைச்சுவையும்.!

ஈழத்து துரோணர்.!!
 

நேற்று கருணாவின் சிங்கள ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் தமிழ்மொழிபெயர்ப்பொன்றை காணநேர்ந்தது. கடந்த வருடம் தமிழக ஊடகங்களுக்கு கருணா வழங்கிய செவ்விக்கும் அன்று பதில் அளித்திருந்தேன். 

அன்றைய நேரம் ஓரளவுக்கு கருணா புலிகளுடன் இணைந்திருந்த போது, அவரது வகிபாகம் பற்றி கூடியவரை பதிவிட்டிருந்தேன். (சில சொல்ல முடியாத சம்பவங்கள் தவிர)

அதனால், இந்த செவ்வியில் கருணாவின் முரண்பட்ட, உண்மைக்கு புறம்பான பொய்களுக்கான விளக்கங்களை, உங்களோடு பகிர விளைகின்றேன். 
 
கருணா, நிதி மோசடி மற்றும் பாலியல் குற்றங்களுக்கான தண்டனைக்கு அஞ்சி, புலிக்கலமைப்பிலிருந்து பிரதேசவாதம் என்ற கருத்தை முன் வைத்து, சுமார் 6000 போர் அனுபவம் பெற்ற போராளிகளுடனும், அவர்களுக்கு தேவையான ஆயுதங்களுடனும், கிழக்கை பிரித்து தனது ஆளுகைக்குள் கொண்டு வந்தான். 

அந்த நேரத்தில் அலவி மௌலானா ஊடாக, சிங்கள அரசின் பின்னுதவி கிடைக்கும் என்ற உத்தரவாதத்திற்கு பின்னரே, துணிந்து இந்த முடிவை கருணா எடுத்தான். 
 
இங்கு நாம் கவனிக்க வேண்டியது, தனி மனித ஒழுக்கம் சிதறிய ஒருவன் தண்டணைக்கு அஞ்சி, பல்லாயிரம் உயிர்களை கொடுத்து, இரத்தம் சிந்தி வளர்த்த, தமிழர் போராட்டம்  அழிவதற்கு இவனும் ஒரு காரணமாகியுள்ளான். 

உண்மையில் பிரதேசவாதம் என்பது தலைவரிடம் இருந்ததா? போராளிகளை வடக்கு, கிழக்கு எனப்பிரித்து பார்த்தாரா? 
 
ஒரு போதும் இல்லை எல்லோரையும், தனது சகோதரர்களாகவும், பிள்ளைகளாகவுமே பார்த்தார்.!

இப்போது நான் கூறப்போகும் இந்த விடையம், எத்தனை பேருக்கு தெரியுமோ தெரியவில்லை? 
இது ஒரு வாய்மொழிக் கருத்து என்பதால், என்னால் உறுதிப்படுத்த முடியாத ஒன்று தான். ஆனால், இது உண்மை என்பது எனதெண்ணம்.! 

1989களில் பிரேமதாசாவின் பேச்சுவார்த்தை மேசையில், பொதுவில் பேசாத விடையமொன்று மறைமுகமாக அவர்களால் முன்வைக்கப்பட்டது. அதாவது கிழக்கை தவிர்த்து(திருகோணமலையையும் தவிர்த்து) வடக்கை தமிழருக்கு தருவதற்கு அவர்கள் முன் வந்தார்கள். 

அதை தலைவர் அடியோடு மறுத்துவிட்டதாக அன்றைய நேரத்தில் கானகத்தில் இருக்கும்போது பேசிக்கொள்வார்கள். வடக்கு தான் தலைவருக்கு முக்கியமாக இருந்திருந்தால், வடக்கை அவர் பெற்றிருக்க முடியும். 

தலைவரோ அல்லது போராளிகளோ எந்தவிதமாகவும் வடக்கு, கிழக்கு என்ற பாகுபாடும் பேணியதில்லை. அதற்கு உதாரணம், கருணாவின் பிரிவின் போது அவனது ஆளுகையின் கீழ், புலிகளின் முக்கிய தாக்குதல் படையணிகளான ஜெயந்தன் படையணி, அன்பரசி படையணிகள் இருந்தன. 

இந்தப் படையணிகள் வடபோர்முனையில் பல, கள அனுபங்களை தன்னகத்தே கொண்ட தாக்குதல் படையணிகள். இந்த அணிகளை தன்னிடம் இருப்பதை எண்ணியே, அந்த நேரத்தில் கருணா ஊடகங்களுக்கு வாய்ச்சவடால் விட்டுக்கொண்டிருந்தான். 

இந்த 6000போராளிகளில், சில நூறுபேர் கருணாவின் விசுவாசிகளாக இருந்து, அவனது பிரதேசவாதத்தையும், இவனது நஜவஞ்சகத்தையும் நம்பியிருந்தனர். ஏனையவர்கள் தலைவர் மீதும், தமிழீழ தனியரசின் மீதும் நம்பிக்கை கொண்டே இருந்தனர். 

இன்று கருணா புலிகளியக்கத்தில் தான் தலைவருக்கு அடுத்த நிலையில் இருந்ததாகவும், தானே பெரும்பான்மை யுத்தக்களங்களை வெண்றதாகவும், மார்தட்டுகின்றான். சரி, இதை ஒரு பேச்சுக்கு, உண்மை என்றே வைத்துக்கொள்வோம்.! 

அப்படியானால், புலிகளுடமான பிரிவின் போது, "தங்கள் படையணிகள் மீது வன்னிப்புலிகள் தாக்குதல் மேற்கொண்டால், தாக்குதலுக்கு வரும் அனைவரும் கொன்று குவிக்கப்படுவார்கள்" என்று சவால் விட்டான். 

சிங்கள ஊடகங்களும், சர்வதேச ஊடகங்களும் இவனை நம்பி பெரும் பரப்புரையை செய்த போதெல்லாம், அவன் விசரன் கத்திறான் என்றே தலைவர் கடந்து சென்றார். ஒரு கட்டத்தில் எல்லை மீறிப்போனபோது போராளிகளை மீட்கும் நடவடிக்கையை தலைவர் ஆரம்பித்தார்.

1500 போராளிகள் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணை தலைமையில் உள் நுழைந்தபோது, கருணாவுடன் நின்ற பெரும்பான்மையான போராளிகள் புலிகளிடம் சரணடைந்தனர். இதில் கருணாவின் அண்ணன் ரெஜி போன்றவர்கள் எதிர்ப்பை காட்டி, புலிகளின் தாக்குதலில் மாண்டு போயினர். 

இந்த நடவடிக்கையினால் புலிகளிடம் சரணடைந்தவர்கள் போக, மீதியான சில நூறு கருணா விசுவாசிகள் தங்கள் வீடுகளுக்கு ஓடினர். சிலர் மத்தியகிழக்கு நாடுகளுக்கு தப்பி ஓடினர். "தன்னை பெரும் போர் தளபதியாக கற்பனையிலிருந்த கருணா, சிங்கள உளவுத்துறையின் உதவியுடன் கொழும்புக்கு தப்பிச்சென்று பதுங்கினான். 

அங்கும் புலிகளின் உளவுத்துறையினர் இவர்களை வேட்டையாடிய போது, லண்டனுக்கு தப்பிச்சென்றான். அங்கு சிறையில் 6மாதகாலம் இருந்த போது, கொஞ்ச ஆங்கிலத்தை பொறுக்கியெடுத்தபடி மீண்டும் கொழும்பு வந்தான். 

ஆக, கள அனுபவமுள்ள போராளிகளை வைத்திருந்த போதும், 1500 புலிகளை இவனால் ஏன் சமாளிக்க முடியவில்லை? ஏனென்றால், பெரும்பான்மையான போராளிகள் தலைவரை மட்டுமே தங்கள் தேசத்தின் தலைவராக ஏற்றுக்கொண்டிருந்தனர்.

மிக முக்கியமானது, இவனை சண்டைக்களங்களில் வழிநடத்தியது தலைவரே. இவனால் தனித்து திட்டமிட்டு ஒரு தாக்குதலை செய்யமுடியாதென்பதே வரலாறு (கருணா பற்றிய முன்னைய பதிவில் இது பற்றி குறிப்பிட்டுள்ளேன்) அதனால் தான், புலிகள் நடவடிக்கையை மேற்கொண்டபோது என்ன செய்வதென்று தெரியாது, அவனை நம்பி வந்தவர்களையும் கைவிட்டு தான் மட்டும் தப்பி ஓடினான்.  

இதே கருணா தான், தலைவரின் திட்டமிடலுடனும், அவரது வழிநடத்தலுடனுமே, போராளிகளை தான் வழிநடாத்தியதாக  பலதடவை போராளிகளுக்கும், மக்களுக்கும் கூறியுள்ளான். அது தான் உண்மை.! 

உண்மையில் கிழக்குமாகாணத்தின் தளபதியாக கருணா இருந்தபோதும், இவனை வெளிக்காட்டியது லெப்.கேணல்.ரீகண்ணை, மேஜர். அன்டனியண்ணை, லெப்.கேணல்.ஜோய், பிரிகேடியர் பானு அண்ணை (1991-1993வரை தண்டனையின் நிமித்தம்,பானு அண்ணை மட்டுக்கு அனுப்பப்பட்டிருந்தார். அன்றைய நேரத்தில் பெரும்பான்மையான தாக்குதல்கள் இவரின் வழிநடத்துதலிலேயே மேற்கொள்ளப்பட்டது) 

இவர்களின் பதுங்கித் தாக்குதல்களின் வெற்றிகள், கருணா தளபதி என்பதால் இவனுக்கே கௌரவத்தைக் கொடுத்தது. இது தலைவருக்கு தெரியாததல்ல. இவனது நிர்வாக நேர்த்தி காரணமாக இவைகளைக் கடந்து சென்றார். 

இப்படி மற்றவர்களின் தியாகத்தில் குளிர்காய்ந்தமையால் தான், இவனும், இவனது சகாக்களும் அன்று, புலிகளை எதிர்கொள்ள முடியாமல் சிதறி ஓடினர். 

இவனை ஒத்த ஒருவனாகவே இன்று நான், தமிழ்நாட்டில் ராகவா லாரன்ஸை பாக்கின்றேன். இன்னொருவரது உழைப்பை திருடுவதே, மிகவும் கேவலமாக செயல் என்பதுவே எனது கணிப்பு. இந்த இருவருக்கும் பல விடையங்கள் ஒத்துப்போவதை பல தடவை நான் காண்டுள்ளேன்.!

இந்த நேர்காணலில் தலைவரின் குற்றம் சுமத்துவதில் பின் நிற்பது தெரிகின்றது. காரணம் தலைவரை யார் எதிர்த்தாலும் அவர்களை துரோகிகளாகவே மக்கள் வகைப்படுத்துகின்றனர். இது கால, காலத்துக்கும் அவர்களது பரம்பரையையே இழிநிலைக்கு இட்டுச்செல்லும் என்பதால், இன்று தலைவரை முன்னிறுத்தி தங்கள் புலியெதிர்ப்பை அடக்கி வாசிக்கின்றனர் பலர். 

இப்போது கருணாவும் தலைவரை குறை கூறுவதைக்குறைத்து, அதற்கு பதிலாக தலைவரைவிட தான் ஆளுமை மிக்கவனாகக் காட்டி, தமிழர்க்கு தலைமையேற்க எடுக்கும் முயற்சிகளின் வெளிப்பாடே, கருணாவின் சமீபத்திய கருத்தாடல்கள். 

அந்த நேர்காணலின்போது தலைவரின்,பல பிழையான முடிவினாலேயே போராட்டம் தோல்விகண்டதாகவே பதிவு செய்கின்றான். 

#இராணுவத்தினரின் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில்? என்ற கேள்வி ஒன்றுக்கு..

"இலங்கை இராணுவத்தினர் ஒழுக்கமானவர்கள். அவர்கள் பெண்கள் மீதான துஸ்பிரயோகத்தினை செய்யவில்லை" என்று வக்காளத்து வாங்கி, தனது புது எஜமான்களுக்கு, தனது கீழ்த்தர விசுவாசத்தை உறுதிப்படுத்துகின்றான்.

 #பிரபாகரன் எப்படிப்பட்டவர்? அவருடைய ஒழுக்கம் எவ்வாறானது? என்ற கேள்வியொன்றுக்கு..

அவர் ஒழுக்கமானவர். "அவருடைய பொழுது போக்கு ஆங்கில போர் திரைப்படங்களைப் பார்ப்பதே ஆகும். நான் அவருக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கூறுவேன். வெற்றிகள் பல வந்ததனால் அவருக்கு தலைக்கணம் அதிகமாகி விட்டது. அதுவே அவரது தோல்விக்கு வழி வகுத்தது. பிரபாகரனுடன் பேச ஏனையவர்கள் அஞ்சுவார்கள் ஆனால் என்னால் பேசமுடியும்".

இதில் தலைவரின் ஒழுக்கம் பற்றி உலகுக்கே தெரியும் அதை நான் சொல்லத்தேவை இல்லை. ஆனால், தான் தான் அண்ணைக்கு ஆங்கிலப்படங்களை மொழிபெயர்ப்பதாக விட்டான் பாருங்கள் ஒரு விடுகை :) 

போராளிகளுக்கு மட்டுமல்ல, ஏன் மக்களுக்கு கூடத்தெரியும், தாயகத்தில் ஆங்கிலத்திரைப்படங்கள் உடனேயே மொழிபெயர்ப்பு செய்து, தணிக்கை செய்த பின்னரே வெளியிடப்படும். அப்படி தமிழாக்கம் செய்யாத நல்ல படங்கள் வெளிவருவது அரிது. 

சரி, அப்படி பார்ப்பதானாலும் இவனைக் கூப்பிட்டு மொழிபெயர்க்கவைத்து தான் பார்க்க வேண்டிய தேவை அண்ணைக்கு இல்லை. ஆங்கிலத்தில் முதிர்ச்சி பெற்ற பல தளபதிகளும், பொறுப்பாளர்களும் புலிகளமைப்பில் பஞ்சமில்லை.! 

இதில் கருணா தலைவரின் கல்வியறிவை குத்திக்காட்டுவதே அவனது வலிந்த கருத்துத் திணிப்பாகவே நான் பாக்கின்றேன். தலைவர் 8ம் வகுப்பு வரை தான் கல்வி கற்றார் என்பது உலகத்துக்கே தெரியும். அவர் அதை நினைத்து ஒருபோதும் கவலைகொண்டதுமில்லை. வெட்கப்பட்டதுமில்லை. 

பெரும் பான்மையான போராளிகள் படிப்பை பாதியில் விட்டே போராட்டத்தில் இணைந்தனர். அதனால்  கல்வி கற்ற போராளிகள் பாதிக்கு பாதியே இருந்தனர் என்பது உண்மையே. புலிகளமைப்பு அனுபவத்தால் கட்டியமைக்கப்பட்ட ஒரு அமைப்பு.!  

ஏன், நானும் 7ம் வகுப்புவரை தான் கல்வி கற்றேன். இதில் எனக்கு வெட்கப்படுவதற்கு எதுவுமில்லை.! ஆனபோதும் மேலதிக கல்வியை தலைவர் போராளிகளுக்கு வழங்கினார் என்பதுவே உண்மை. 

ஆனபோதும் தலைவர் வன்னிக்கு சென்றபின் பண்டிதர் பரந்தாமனிடம் தமிழும், சோதிமாஸ்ற்றரிடம், தற்காப்பு கலையையும், ஆங்கிலத்தை ஒரு பாதிரியாரிடமும் கற்பதற்கு அவர் பின்நிற்கவில்லை. (ஆங்கிலம் கற்பித்தவர் சென்.பற்றிக்ஸ் கல்லூரியின் முன்னாள் அதிபர். அவரது பெயர் எனக்கு உடனே நினைவில் வரவில்லை. அவர் பின்னைய நாளில் சிங்கள அரசால் கைதுசெய்யப்பட்டு காணாமல் போய்விட்டார்) 

ஆக, கல்வி அறிவுக்கும் அனுபவ அறிவுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. அனுபவ அறிவே சிறந்ததென்பதே எனது வாதம்.! 

அடுத்தது கருணா அள்ளி விட்ட ஒன்று, ஏனையவர்கள் தலைவருடன் பேச அஞ்சுவார்கள், நான் அஞ்சுவதில்லை என்றும் ,அத்தோடு நினைத்த நேரத்தில் தன்னால் தலைவரை சந்திக்க முடியுமென்றும் இப்போதெல்லாம் அள்ளித்தெளிக்கின்றான். 

தலைவரால் வெளியில் சொல்லாதபோதும், அண்ணைக்கு அடுத்த நிலையில் இருந்தது, பொட்டு அம்மான் என்பது அனைவருக்கும் தெரியும். அம்மானில் தொடங்கி சாதாரண போராளிகள் வரை தலைவரை மிகுந்த பணிவுடனும், மரியாதையுடனும் தான் அணுகுவர். 

இதில் யாரும் விதிவிலக்கில்லை. பிழை விட்டால் தலைவரின் அணுகுமுறை மிகவும் கடுமையாகவே இருக்கும். யாராக இருந்தாலும் தலைவரின் அனுமதி இல்லாது அவரை சந்திக்க முடியாது. அவரிடம் அனுமதி கேட்டு, சந்திக்கும் "விடையத்தின்  முக்கியத்துவம்" கணக்கிடப்பட்ட பின்னரே நேரமும், சந்திக்கும் இடமும் சொல்லப்படும். 

அதுவரை அவர் எந்த முகாமில் இருக்கிறார் என்பது யாருக்கும் தெரிவதில்லை.இப்படி இருக்கும் போது, இவனது அறிக்கைகள் தான் இன்றைய நகைச்சுவைகள்.

இப்போது  தன்னை முன்னிலைநிறுத்தி அரசியல் பிரவேசம் ஒன்றை மீண்டும் மஹிந்தைக்கு சார்பாக முன்னெடுக்கின்றான். இவன் தலைகீழாக நின்று தண்ணி குடித்தாலும் இவனை எமது மக்கள் ஏற்கப்போவதில்லை.!
நகைப்புடன் துரோணர்.!!
« PREV
NEXT »

No comments