Latest News

February 07, 2017

மோட்டார் சைக்கிள் - டிப்பர் கோர விபத்து; கணவன் பலி; மனைவி படுகாயம் - திருமணமாகி 9 நாட்களில் நடந்த சோகம்
by admin - 0

மோட்டார் சைக்கிள் - டிப்பர் கோர விபத்து; கணவன் பலி; மனைவி படுகாயம் - திருமணமாகி 9 நாட்களில் நடந்த சோகம்
accident 

யாழ்ப்பாணம் வேலணை பகுதியில் டிப்பர் வாகனமொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் மோதியதில் சம்பவ இடத்திலேயே கணவர் பரிதாபகரமாக உயிரிழந்ததுடன் மனைவி படுகாயமடைந்துள்ளார். இவ்வாறு விபத்துக்குள்ளான தம்பதிகளுக்கு திருமணமாகி 09 நாட்களே கடந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வேலணை மேற்கு 6ஆம் வட்டாரத்தை சேர்ந்த தவநாகேஸ்வரன் பிரதீபன் (வயது 28) என்பவரே உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தார். இவரது மனைவியான திருமதி பிரதீபன் நிறெஞ்சனா (டயானா) என்பவரே படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 

யாழில் நடைபெற்ற புதுமனைப் புகுவிழாவில் பங்கேற்பதற்காக நேற்று முற்பகல் 11 மணி யளவில் வேலணை பகுதியில் இருந்து வேலணை அராலி சந்தியை நோக்கி குறித்த கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர். இதன்போது யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவற்றுறை நோக்கி கருங்கல் சல்லிகளை ஏற்றிக்கொண்டு டிப்பர் வாகனமொன்று பயணித்து கொண்டிருந்தது.
 
டிப்பர் வாகனமானது வேலணை அராலி சந்தியை அண்மிக்கும் போது வேலணை பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வேலணை அராலி சந்தியை நோக்கி பயணித்தவர்கள் மோட்டார் சைக்கிளை யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பிரதான வீதிக்கு ஏற்றியுள்ளனர். இதன்போதே டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்து நேரிட்டுள்ளது.

இவ் விபத்தின் போது மோட்டார் சைக்கிளை மோதிய டிப்பர் வாகனமானது மோட்டார் சைக்கிளை சுமார் 50மீற்றர் தூரம் இழுத்து சென்று அருகில் இருந்த சதுப்பு நில கடலுக்குள் பாய்ந்தது. இதன்போது மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்து வந்த குறித்த மனைவி தூக்கி வீசப்பட்டதுடன் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த கணவர் டிப்பர் சில்லுக்குள் சிக்குண்டு உடல் சிதைவடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட மனைவி மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை குறித்த விபத்தில் உயிரிழந்த நபருக்கும் படுகாயமடைந்த பெண்ணுக்கும்  கடந்த ஜனவரி மாதம் 28ஆம் திகதி திருமணம் நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments