Latest News

January 14, 2017

தைப்பொங்கல் தமிழரின் பண்பாட்டு விழா - சிவ கஜேந்திரகுமார் (சர்வேதேச இந்து இளைஞர் பேரவை இலங்கை)
by admin - 0

தைப்பொங்கல்  தமிழரின் பண்பாட்டு விழா -  சிவ கஜேந்திரகுமார் (சர்வேதேச இந்து இளைஞர் பேரவை இலங்கை)



தைப்பொங்கல் திருநாளில் உழவர்கள் தமது வேளான்மைக்கு உதவி செய்த சூரியன் பகவானுக்கு நன்றி செலுத்துகின்றனர்.  இதற்காக அவர்கள் சூரியன் உதிக்கும் வேளையில் அவனுக்காக பொங்கலிட்டு தமது நன்றியை வெளிக்காட்டுக்கின்றனர். உழவர்கள் மாத்திரமல்லாமல் ஒவ்வொரு மனிதப்பிறவியும் சூரியனுக்கு நன்றி கூறும் நாளாக இன்றைய நாள் போற்றப்படுகிறது.   தைப் பொங்கல், அறுவடைத் திருநாள் என கூறப்படும் பொங்கல் பண்டிகை, தமிழர் பண்டிகை ஆகும். பொங்கல் என்பதற்கு சாப்பிடும் பொங்கல் என்று பொருள் அல்ல. பொங்கிப் பெருகி வருவது என்று பொருள். தமிழர்கள் இருக்குமிடமெல்லாம் பொங்கல்   கொண்டாடப்படுகிறது.   இப்  பொங்கல் பண்டிகை,தமிழ்நாடு இலங்கை   மலேசியா, கனடா, சிங்கப்பூர், மொரீஷியஸ் உள்ளிட்ட அனைத்து உலக நாடுகளிலும் கூட விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.  . 

பொங்கல் பண்டிகையின் தோற்றம் எப்போது என்று உறுதியாகத் தெரியவில்லை. 1000 ஆண்டுகளுக்கு முன்பு வந்தது இந்த பண்டிகை ஒன்று ஒரு கூற்று உள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இது கொண்டாடப்படுகிறது என்று இன்னொரு கூற்றும் உள்ளது. சோழர் காலத்தில் பொங்கல் பண்டிகைக்கு புதியீடு என்று பெயர் இருந்தது. அதாவது, ஆண்டின் முதல் அறுவடை என்று அதற்குப் பொருள். உழவர்கள் தை மாதத்தின் முதல் நாளில், அந்த ஆண்டின் முதல் அறுவடையை மேற்கொள்வது வழக்கமாக இருந்தது. இதுதான் பின்னர் பொங்கல் பண்டிகையாக மாறியது என்கிறார்கள். 

பொங்கல் பண்டிகை மொத்தம் நான்கு  நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. முதல் நாள் போகி பண்டிகை.  இரண்டாம்  நாள் பொங்கலிடும் நாள். 3வது நாள் மாட்டுப் பொங்கல் 4 ம் நாள்  காணும்பொங்கல் நமக்கு காலமெல்லாம் கை கொடுத்து உதவும் மழை, சூரியன், விவசாயத்திற்குப் பயன்படும் கால்நடைகள் ஆகியவற்றுக்கு நன்றி கூறும் நல் வாய்ப்பாக இத்  திருநாள் கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருநாளின் முதல் நிகழ்வான போகி பண்டிகை அன்று , அதிகாலையில், அனைவரும் எழுந்து குளித்து, வீட்டில் உள்ள தேவையற்ற, பழையை பொருட்களை வீட்டின் முன்பு வைத்து தீயிட்டு கொளுத்துவார்கள். அல்லவை அழிந்து நல்லவை வரட்டும். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற மொழிக்கேற்ப போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. வீட்டுப் பொங்கல். 

2ஆவது நாளான பொங்கல், விசேஷமானது. தை மாதப் பிறப்பு நாள் இது. சர்க்கரைப் பொங்கல் என்று இந்த பண்டிகைக்குப் பெயர். புதுப்பானை எடுத்து, மஞ்சள் உள்ளிட்டவற்றை பானையைச் சுற்றிக் கட்டி, புதுப் பாலில், புது அரிசியிட்டு, வெல்லம் உள்ளிட்டவற்றைக் கலந்து பொங்கலிடுவார்கள். வீட்டுக்கு வெளியே சூரியன் இருக்கும் திசையை நோக்கி இந்த பொங்கலிடும் நிகழ்ச்சி நடைபெறும். அரிசி நன்கு சமைந்து, பொங்கி வரும்போது குலவையிட்டும், பொங்கலோ பொங்கல், பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக என்ற குரலோடு பொங்கல் பானையை இறக்க வேண்டும். நன்கு பொங்கி வந்தால் அந்த ஆண்டு முழுவதும் நல்ல வளமும், நலமும் நிலவும் என்பது ஐதீகம்.   
பொங்க வைக்கும் முறை: -தைப்பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்னரே கொண்டாட்ட வெடிகள் வெடிக்க தொடங்கி விடும். பொங்கலுக்கு தேவையான பொருட்களை ஆயத்தப்படுத்திக் கொள்வர். மேற்கு நாடுகளில் பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் கொண்ட பொதிகள் விற்பனைக்கு இருக்கும். வசதி படைத்த பலர் புத்தாடை வாங்குவர். பொங்கலன்று அதிகாலை எழுந்து முழுகுவர். வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் பானை வைப்பர். புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். முற்றத்திற் கோலமிட்டு தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். இந்துத் தமிழர்கள், சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று “பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!” என்று உரக்கக் கூவி அரிசியை இருகைகளாலும் அள்ளிப் பானையில் இடுவர். தனது முதற் பயனை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வான். இது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது என்பர்.  

3வது நாள் விழா மாட்டுப் பொங்கல்: - கிராமங்கள் தோறும் மாட்டுப் பொங்கள் விமரிசையாக கொண்டாடப்படும். வீடுகள் புதுப் பூச்சு காணும். மாடுகள், பசுக்களின் கொம்புகளுக்கு புது வர்ணம் பூச்சி, நன்கு குளிப்பாட்டி, அவற்றை அலங்காரம் செய்து, மாட்டுப் பொங்கல் தினத்தின்போது படையலிட்டு வழிபாடு செய்வார்கள். பின்னர் மாடுகளுக்கு பொங்கலும் அளிக்கப்படும். ஆண்டெல்லாம் நமக்காக உழைக்கும் மாடுகளுக்கு நன்றி கூறும் தினமாக இது கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தின்போது மாடுகளுக்கு ஒரு வேலையும் தர மாட்டார்கள். கழுத்தில் புது மணி கட்டி, கொம்புகளை சீவி விட்டு சுதந்திரமாக திரிய விடுவார்கள். இந்த இடத்தில்தான் ஜல்லிக்கட்டு தோன்றியிருக்கிறது. மாட்டுப் பொங்கலின்போது கிராமங்கள் தோறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். 
4 வது நாள் காணும் பொங்கல்: -  காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா ஆகும். காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். உற்றார் உறவினர் நண்பர்களை காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் பட்டி மன்றம் வழுக்கு மரம் ஏறல் என்று வீர சாகசப் போட்டிகளிலிருந்து சகலமும் இடம் பெறும்.இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும்.பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத்தினை கட்டி அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள் பொங்கல் பண்டிகையின் மூன்று முக்கிய அம்சங்கள், கரும்பு, ஜல்லிக்கட்டு, இனிப்புப் பொங்கல்தான். இவை இல்லாமல் பொங்கல் நிறைவடையாது.  அதேபோல பொங்கல் பண்டிகையின்போது கிராமங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளும் விசேஷமானவை

எனினும், இலங்கையில் அநேகமாக இரு நாட்களே பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இலங்கையில் முக்கியமாக தைப்பொங்கலும், மாட்டுப் பொங்கலுமே கொண்டாடப்படுகின்றது. பொங்கல் பண்டிகையின்போது, திருமணமாகி புகுந்த வீடு சென்ற பெண்களுக்கு பிறந்த வீட்டு சீராக அறுவடையில் விளைந்த புதிய அரிசி, பருப்பு என்பனவற்றை கொடுப்பார்கள். எனினும், இக்காலத்தில் இந்த வழக்கம் வித்தியாசமாகி புடவைகள் முதல் அனைத்து வீட்டுப் பொருட்களும் பொங்கல் சீராக வழங்கப்படுகின்றது.இன்று பலரும் உழவுத் தொழிலை கை விட்டு நகரங்களை நோக்கி நகர ஆரம்பித்தாலும், நாம் உண்ணும் உணவினை வழங்கும் விவசாயிகளுக்கு மரியாதை செலுத்த வேண்டியது நமது கடமையாகும்.தை பிறந்தால் வழிபிறக்கும் என்பார்கள். எனவே   இத்தனை காலமும் தடைப்பட்ட காரியங்கள் தை பிறந்தவுடன் ஈடேறும் என்பது தொன்று தொட்டு வரும் நம்பிக்கை. 

தை பிறந்தால் வழி பிறக்கும் 

தரணியிலே ஒளி பிறக்கும் 

தை மகளின் வருகையிலே 

பரணி சொல்லும் வழி பிறக்கும் 


ஆதலால்  பழையன கழிதலும் புதியன புகுதலும் நலமேயாம் வாழையடி வாழையாய் வந்த நல்லதோர் முதுமொழியாம் தைமாதமதில் தைதிருநாள் பொங்கலதில் விடியும் வேளை நாமெழுந்து நீராடி நற்காலைப் பொழுதினிலே பொங்கல் விழா தனிப்பெருந் திருவிழாக்கோலம் பூணுகிறது. தைப்பொங்கல் திருவிழா என்பது ஒரு தமிழரின் பண்பாட்டு விழா!
« PREV
NEXT »

No comments