Latest News

January 19, 2017

மெரீனாவில் லட்சக்கணக்கானோர் திரண்டனர் - தலைமைச் செயலகத்தில் போலீஸ் குவிப்பு - பதற்றத்தில் சென்னை
by admin - 0

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சென்னை மெரீனா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் திரண்டுள்ளனர். சோழிங்கநல்லூர், அடையாறு உட்பட 15 இடங்களில் போராட்டம் நடைபெறுவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.




சென்னை: வேண்டும் வேண்டும்... ஜல்லிக்கட்டு வேண்டும்... பனை மரத்துல வவ்வாலா... தமிழனுக்கே சவாலா? என்று தாள கதியில் முழக்கமிடுகின்றனர் இளைஞர்கள். கடந்த 60 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் மாணவர்களின் போராட்டம் மணிக்கு மணி தீவிரமடைந்துள்ளது.

 

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றாலும், தலைநகரான சென்னையில் குவிந்து வருகின்றனர் இளைஞர்கள். கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டது வசதியாகப் போனது. ஏராளமானோர் சாரை சாரையாக திரண்டு வருகின்றனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னையில் 15 இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. மெரினா, சோழிங்கநல்லூர், அடையார் உள்ளிட்ட 15 இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது

  • இரவு பகலாக போராட்டம்

    மெரினாவில் 500 பேராக தொடங்கிய போராட்டம் இப்போது லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு கடந்த 3 நாட்களாக இரவு, பகல் பாராமல் போராடி வருகின்றனர்.

  • உணவுகள், அடிப்படை வசதிகள்

    போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள், மாணவர்களுக்கு உணவுகள், தண்ணீர் அளிக்கப்பட்டு வருகிறது. அடிப்படை வசதிகள், இயற்கை தேவைகளுக்கு 4 கேரவன் வேன்கள் நிறுத்தப்பட்டுள்ளன. நேரம் செல்லச் செல்ல மாணவர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. பல பகுதிகளில் ஆட்டம், பாட்டம் என அமர்களப்படுகிறது.

  • பெண்கள் மயக்கம்

    மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கத்தி கத்தி கூச்சலிட்ட மாணவர்களில் 4 பேர் மயக்கம் அடைந்தனர். மயக்கம் ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் தோட்டம் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொளுத்தும் வெயில், கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

  • தலைமை செயலகத்தில்

    சென்னை தலைமைச் செயலகத்துக்கு வெளியே போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. மெரினாவில் போராடுவோர் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடலாம் என போலீசுக்கு தகவல் வந்ததை அடுத்து பாதுகாப்பது போடப்பட்டுள்ளது. போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது.

  • பேச்சுவார்த்தை

    சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டக்குழுவினரை அழைத்து காவல் துறை கூடுதல் ஆணையர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கூடுதல் ஆணையர் சங்கர், தாமரைக்கண்ணன், ஸ்ரீதர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

  • டைடல் பார்க் மனிதச்சங்கிலி

    காவல்துறையினரின் அத்துமீறலைக் கண்டித்தும் ஜல்லிக்கட்டுக்கான தடையினை விலக்கி உடனடியாக ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என வலியுறுத்தியும், தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் தற்கொலையும், அதிர்ச்சியால் மரணமடைவதையும் தடுக்க போதிய இழப்பீட்டு நிதி வழங்க வேண்டியும், டைடல் பூங்காவில் ஒன்று கூடி மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • பேரெழுச்சி முழக்கம்

    மத்திய அரசே! ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டு மக்களின் மரபுரிமை! ஜல்லிக்கட்டு மீதான தடையை உடனடியாக நீக்கிடு! உழவர்கள் தற்கொலையை தடுத்திட உடனடியாக வறட்சி நிவாரணம் வழங்கிடு!காவிரியில் தமிழக உரிமையை மறுக்காதே! காவிரி நீர் மேலாண்மை வாரியத்தை அமைத்திடு! தமிழக அரசே, கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களை உடனே விடுதலை செய்! என்று முழக்கமிட்டனர்.

  • மாணவர்கள் மறியல்

    சோழிங்கநல்லூரில் ஜேப்பியார் கல்வி குழுமத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் விடுமுறை விடப்பட்டும் ஊர் திரும்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் அடையாறு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டம் நடைபெறுவதால் சென்னையில் ஒருவித பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது.

« PREV
NEXT »

No comments