Latest News

November 24, 2016

மாவீரர் நாளை குழப்ப சிங்களம் சதி - த.வி.பு
by admin - 0

இலட்சியத்தால் ஒன்றுபட்டு எழுச்சிகொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிடமுடியாது.       -தமிழீழத் தேசியத் தலைவர்-

 

ஒற்றுமையே எமது இனத்தின் பலம்.

தமிழினத்தின் ஒற்றுமையையும் கொள்கைப் பற்றையும் வெளியுலகிற்கு எடுத்துக்காட்டும் ஒரு நிகழ்வாகவே ஆண்டுதோறும் நாம் மாவீரர்நாளை நினைவு கூருகின்றோம். இப்புனித நாளில் தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாக கலந்துகொள்வதையும், மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் தடுத்து நிறுத்தவே, எமது எதிரியான சிறீலங்கா அரசு தாயகத்தில்  மாவீரர் துயிலும் இல்லங்களை அழித்தது. அத்தோடு நின்றுவிடாமல், புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் உணர்வாளர்களிடையே குழப்பங்களை ஏற்படுத்துவதுடன், தமிழ் மக்கள் இந்நிகழ்வுகளில் கலந்துகொள்வதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளது.

இதன்விளைவாகவே கடந்த சில ஆண்டுகளாக, ஒரேநாட்டில் இரண்டு மாவீரர் நிகழ்வுகளை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் ஒரு சிலரூடாக நடந்த வண்ணம் உள்ளதை காணக்கூடியதாக உள்ளது.

சிறீலங்கா அரசு தனது இந்தச் சதிவலையில் சிலரை சிக்கவைத்துள்ளதுடன்,  அவர்களின் உதவியுடன் வன்முறைகளையும் தூண்டிவிட்டுள்ளது. இதன் மூலம் மாவீரர் நாளின் புனிதத்தன்மையை மாசுபடுத்த நினைக்கிறது. மேலும், புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழீழ மக்களின் நன்மதிப்பையும், ஒழுக்கத்தையும் சீர்குலைத்து வெளிநாட்டு மக்களிடையே தமிழர்களைப் பற்றிய எண்ணகருவில் மாற்றத்தை ஏற்படுத்தவும், தொடரும் எமது விடுதலைப் பயணத்திற்கு தடைபோடவும் எண்ணுகின்றது.

சிறீலங்கா அரசின்  இத்தகைய திட்டமிடலின் ஓர் அங்கமாகவே பிரான்ஸ் நாட்டில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் மீதான வாள்வெட்டுச் சம்பவத்தை நாம் நோக்குகின்றோம். அத்துடன் இச்சம்பவத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

எதிர்வரும் 27ம் நாள் Sarcels நகர மண்டபத்தில் நடைபெறவுள்ள மாவீரர் நாளை குழப்புவதற்காக  சிறீலங்கா அரசு  முன்னெடுக்கும் இந்த சூழ்ச்சித் திட்டத்தை தமிழ்மக்களாகிய நாம் முறியடிப்போம். எல்லோரும் ஓரிடத்தில் அணிதிரண்டு  எமது தேசப்புதல்வர்களை நினைவுகூர்வோம். இதன் மூலம் எமது இனத்தின் ஒற்றுமையையும் பலத்தையும் எமது விடுதலையை நசுக்கநினைக்கும் சிறீலங்கா அரசுக்கு வெளிப்படுத்துவோம்.

‘‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’’

அனைத்துலகத் தொடர்பகம்.
தமிழீழ விடுதலைப் புலிகள்.

« PREV
NEXT »

No comments