Latest News

November 01, 2016

அரசியல் சாணக்கியன், சிறந்த கெரில்லா வீரன் பிரிகேடியர். தமிழ்செல்வன்/ தினேஷ் ஈழத்து துரோணர்
by admin - 0

அரசியல் சாணக்கியன், சிறந்த கெரில்லா வீரன் 
பிரிகேடியர். தமிழ்செல்வன்/ தினேஷ் 
ஈழத்து துரோணர்.!!!
 
பிரிகேடியர்.தமிழ்ச்செல்வன்/தினேஷ் எங்கள் தேசத்தின் புன்னகை அரசன். பிடிகொடுக்காத அரசியல் சாணக்கியன். இப்படித்தான் சர்வதேசமும், எமது மக்களும், தினேஷ் அண்ணை மீது கொண்டிருக்கும் அடையாளம். 

தினேஷ் அண்ணையின் போராட்ட வாழ்வின் இறுதிப்பக்கமே பலருக்கு தெரிந்தது. அவரது ஆரம்ப பக்கத்தை பற்றியதே இந்த பதிவு. இதை  அறிய நாங்கள் கொஞ்சம் பின்னோக்கி போகவேண்டும். 
 
தினேஷ் அண்ணையின் மரணம் வரை "தினேசண்ணை"  என்று தான் நான் அவரை அழைப்பேன். ஆகவே, எனது பதிவும் இந்த பெயரை தாங்கியே தொடரும். 

தினேசண்ணை தமிழ்நாட்டில் 4 வது பயிற்சி முகாமில், பொன்னம்மானால் பயிற்று விக்கப்பட்ட போராளி. அவரின் சிபாரிசின் பெயரில் தலைவர் அணியில் இணைக்கப்பட்டிருந்தார். 

அந்த நேரத்தில் இருந்து தலைவருடனேயே இருந்து, அவர் தாயகம் திரும்பியபோது அவருடனேயே தாயகம்  வந்திருந்தார். 

தன்னுடன் நிக்கும் போதே இவரது நிர்வாக ஆளுமையை கணிப்பிட்டிருந்த தலைவர், 1987களில் தென்மராட்சி கோட்டப் பொறுப்பாளராக இருந்த, மேஜர்.கேடில்ஸ் அண்ணை வீரச்சாவடைந்த பின்னர், அந்த பொறுப்பை தன்னுடனிருந்த தினேசண்ணையிடம் ஒப்படைத்தார். 

அவர் பொறுப்பெடுத்து சில மாதங்களிலேயே இந்தியப்படையினர் எம் தாயகத்தினுள் அத்து மீறி வந்து எம் மீது போர்  தொடுத்திருந்தனர்.
 
போர் ஆரம்பமான நேரம் தலைவரையும், அண்ணி மற்றும் பிள்ளைகளையும் காக்கும் பெரும் சுமை எம் போராளிகளுக்கு இருந்தது. 
அந்த நேரத்தில் எல்லோரது தெரிவும் தென்மராட்சியே. காரணம் சிறு காடுகளுடன் கூடிய மக்களரணும் கொண்ட பிரதேசமாக அது இருந்தது. 
 
சில பாதுகாப்பு காரணங்களுக்காக, அண்ணையிடமிருந்து அண்ணி, பிள்ளைகளை பிரித்து, தலைவரை பாதுகாப்பாக வன்னிக்கு  நார்த்தியிருந்தனர் போராளிகள். 

இந்த நேரத்தில் அண்ணி, பிள்ளைகளின் பாதுகாப்பு தினேஷைண்ணையின் தலையில் விழுந்திருந்தது. அவர்களை இந்தியப்படை வேட்டையாட அலைந்து திரிந்தது. அன்று அண்ணியின் உயிருக்கோ அல்லது அவர்களை கைது செய்திருந்தாலோ, தமிழர் தேசம் பெரும் தலைகுனிவை அன்று சந்தித்திருக்கும். 
 
அந்த நேரத்தில் இந்தியப்படையினருடன் மாற்றுக்குழுவை சேர்ந்த துரோகிகளும், இவர்களைக் கொல்ல இரத்தக்காட்டேரிகளாக அலைந்து திரிந்தனர். 

அவர்கள் கண்களில் எல்லாம் மண்ணை தூவி, காத்து நின்றனர் தினேஷைண்ணையின் அணியினர். இதில் குணாண்ணை, மகிந்தியண்ணை, அம்மாண்ணை, போன்றவர்கள் முதன்மையானவர்கள். 

இதில் அண்ணியை நேரடியாக சந்தித்து உதவிகள் செய்வது விசண்ணை. அண்ணியை ஒருநாள் சந்தித்துவிட்டு வரும் போது கைதடியில் வைத்து வின்சண்ணை மீது சுற்றிவளைப்பொன்றை இந்திய படையும், துரோகக்கும்பலும் மேற்றுக்கொண்டது. 

இதில் அவர்களிடம் உயிருடன் பிடிபட்டால் அண்ணி பிள்ளைகளின் உயிருக்கு ஆபத்தென்று, வின்சண்ணை சயனைட் அருந்தி வீரச்சாவடைந்தார். 

இனியும் அங்கு வைத்து அண்ணியை பாதுகாப்பது சிரமம் என்பதால் வன்னிக்கு நகர்த்தியிருந்தனர். அன்று எம் தேசத்தின் முதல் பெண்மணியை பாதுகாத்து தந்தது தினேசண்ணையும் அவரது அணியினரும், தென்மராட்சி மக்களுமே ஆகும். 

1988 இந்திய இராணுவத்துடனான யுத்தத்தில் மிகவும் நெருக்கடியான காலகட்டம். அந்த நேரத்தில் யாழ்மாவட்ட தளபதிகளான லெப்.கேணல்களான  மதியண்ணை, இம்ரானண்ணை, பாண்டியண்ணை என ஆளுமை மிக்க   தளபதிகளை,  ஒவ்வொருவராக இழந்து கொண்டிருந்தோம். 

அப்போது எமது அணிகளும் சிதறிப்போயிருந்தது. அந்த நேரத்தில் தான், தலைவர் அவர்கள் பொட்டு அம்மானை யாழ்மாவட்ட தளபதியாக நியமித்தார். அவர் தனது  பயணத்துக்கு ஆயத்தமானார். பல சிரமங்களுக்கு பின் அந்த அணியில் நானும் இணைந்திருந்தேன். 

1988 இறுதியில் என்று நினைக்கின்றேன்(இந்த பயணம் பற்றி முன்னமே பதிவு செய்துள்ளேன்) யாழ் பயணமானோம். 

ஆரம்பத்தில் வடமாராட்சி,கப்பூது, தென்மராட்சி என மாறி,மாறி  நிலை கொண்டிருந்தோம். அப்படி தென்மராட்சிக்கு போன போது தான், முதல் முதலில் தினேசண்ணையை சந்தித்தேன். 

அந்த நேரத்தில் நாம் பயணத்திற்கு ஆயத்தமான போது, கிட்டண்ணையால், அம்மானுக்கு தெரியாமல்  தினேசண்ணைக்கு கடிதமொன்று என்னிடம்  தரப்பட்டிருந்தது. 

அந்த கடிதத்தில் இருந்த விடையம் "ஏனைய தளபதிகள் போல பொட்டுவை நாங்கள் இழக்க கூடாது. அவனை பாதுகாத்தே உங்கள் செயல்பாடுகள் அமைய வேண்டும்" என்பதே அந்த கடிதத்தின் முக்கிய விடையம். 

இதை தனது அணியினருக்கு சொல்லி அவரை பாதுகாத்தே, அன்று தென்மராட்சியில் பல தாக்குதலை மேற்கொண்டார். அண்ணியை போல அம்மானையும் அன்று பாதுகாத்தவர்களில் முதன்மையானவர்களில் தினேசண்ணையும் ஒருவர்.

இந்த நேரத்தில்  இவரால் மேற்கொள்ளப்பட்ட கொமாண்டோ பாணியிலான தாக்குதல் அன்றைய நேரத்தில், சர்வதேச செய்தியானது. 

ஒருநாள் இந்திய இராணுவத்திற்கு எதிராக மிருசுவில் கண்டிவீதி நெடுஞ்சாலையில்  அமைந்திருந்த இந்தியப்படைநிலை மீது, தினேசண்ணை  தலைமையில் பாரஊர்தியொன்றில் சென்ற எமது அணியினரின் தாக்குதலை இந்தியப்படை எதிர்பார்க்கவில்லை.  

கண்ணிமைக்கும் நேரத்தில் ஓடும் வாகனத்தில் இருந்து குதித்து, ஆங்கிலப்படப் பாணியில்  இந்தியப்படையினர் மீது தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. 

இதில் 20க்கு மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டு, பிரவுன் LMG உட்பட ஆயுதங்களும் அள்ளப்பட்டது. அன்று பெரும் சாதனை ஒன்று நிகழ்த்தப்பட்டது  

அந்த நேரத்தில் வடமாராட்சியில் இருந்த லெப்.கேணல்டேவிட் அண்ணை அணியினருக்கும், லெப்.கேணல்.ராஜண்ணை, தும்பண்ணை அணியினருக்கும், தினேசண்ணை அணியினருக்கும் ஒரு முக்கோண போட்டி ஒன்று நிலவியது. 
யார் கூடுதலாக எதிரியை கொன்று, ஆயுதங்களை கைப்பற்றுவதென்பதே ஆகும். 

இப்படியான சந்தர்ப்பத்தில் தான் இந்த தாக்குதல் அன்று மேற்கொள்ளப்பட்டு, இவர்களின் அணி செய்தித்தலைப்பு ஆனது. 

இதன் பின்னர் இந்திய இராணுவம் வெளியேறிய பின், 1990இல் சிங்கள இராணுவத்துடன் சண்டை ஆரம்பமானபோது, புலிகளின் முதலாவது மரபுவழி சண்டையான, ஆணையிறவு தாக்குதலில் காயமடைந்தார். 

1991ம் ஆண்டு யாழ்மாவட்ட தளபதியாக பொறுப்பு வகித்தார். அந்த நேரத்தில் இவரது தலைமையில் சிலாவத்தை முகாம் மீது ஒரு வலிந்த தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அந்த தாக்குதல் எமக்கு நிர்ணயித்த வெற்றியை தரவில்லை. ஆனால் பெரும் பட்டறிவை எமக்கு தந்திருந்தது.

1993ம் ஆண்டு பூநகரி தாக்குதலின் போது இவர்கள் மீது விமானதாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதில் இவரை தள்ளி விழுத்தி, இவரின் மேல் படுத்து இவரது உயிரை காதபோதும் வைத்தி என்ற போராளி வீரச்சாவடைந்திருந்தான். 

இதில் படுகாயமடைந்த தினேசண்ணையை, இவர்கள் சென்ற வாகனம் சேதமான படியால்,  மேஜர்.வேங்கை என்ற போராளி தனது தோளில் வைத்து 3km தூரம் வரை ஓடி, வாகன உதவி பெற்று, அன்று தினேசண்ணையின் உயிரை காத்தனர் அந்த போராளிகள்.   

அதன் பின்னர் அரசியல்துறை என்ற பிரிவை உருவாக்கி, அதன் பொறுப்பாளராக தினேசண்ணையை தலைவர் நியமித்தபின், மக்களுக்கான சேவையும், உறவும் விரிவடைந்தது என்றால் அது மிகையாகாது. 

தினேசண்ணை ,பொது மக்களாக இருந்தாலும் சரி, வயது குறைந்த போராளியாக இருந்தாலும் சரி, கடும் தொனியில் யாருடனும் உரையாடியதை நான் கண்டதில்லை. அதுவே அவரது வெற்றியின் ரகசியங்களில் முதன்மையானது. 

இதில் ஒரு சம்பவத்தை நான் குறிப்பிட வேண்டும். தினேசண்ணை யாழ் தளபதியாக இருந்த போது, விடுமுறையில் செல்ல நினைக்கும் போராளிகள் பெரும்பாலும் அவரிடம், விடுமுறைக்காக கூறும் காரணம், "அம்மாவிற்கு சுகமில்லை போய்ப்பாத்திட்டு வாறன்" இப்படி கேட்டால் கூடின நாள் விடுமுறையும், செலவுக்கு  அதிக பணமும் கொடுப்பார். 

அந்தளவு தூரம் தாய்மேல் பாசம் கொண்ட இளகிய மனம் படைத்தவர்.

இதில் அடிக்கடி பொய் சொல்லி லீவு எடுப்பதில் மேஜர். பிரபு தான் முதலிடம்.(இவனது வரலாறும் முன்னம் பதிவு செய்துள்ளேன்.) எப்படியோ இது தினேசண்ணைக்கு தெரியவரும் போது, தண்டனை அனுபவிப்பதும் அவன் தான். இது தான் தினேசண்ணை. 

தினேசண்ணைக்கும், அண்ணைக்குமான உறவு பூர்வ ஜென்ம பந்தம் போன்றது. எந்த நிகழ்வானாலும் அண்ணை அழைப்பது தினேசண்ணையை தான். அண்ணை மட்டுமல்ல, அண்ணியாரும் தனது சகோதரனை போலவே அவரை பார்த்தார். 

தினேசண்ணையின் பிள்ளைகளான அலை, ஒளிவேந்தன் ஆகியோரும் தலைவரை பெரியப்பா என்றும் அண்ணியை பெரியம்மா என்றுமே, அழைத்து தங்கள் உறவை நிலை நிறுத்துவர். 

நான் வெளியிடமிருந்து வன்னி வரும் போதெல்லாம், கிடைக்கும் சந்தர்ப்பதில் தினேசண்ணையையும் சந்திப்பேன். மிகப்பெரும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவிய காலங்களில் எனது உந்துருளிக்கு தடை இல்லாத எரிபொருள் தினேசண்ணை ஒழுங்கு செய்து தருவார். அன்றைய காலங்களை இன்றும் நினைக்கின்றேன். 

எம் தேசத்தின் அரசியல் சாணக்கியனாக, ஆளுமை மிக்க தளபதியாக வளர்ந்தபின்னும், இறுதிவரை எந்தவித மனமாற்றமும் இல்லாது, நான் முதல் முதலில் சந்தித்தபோது எப்படி உரையாடினாரோ, கடைசிவரை அவரிலோ அவரது பேச்சிலோ, நட்பிலோ எந்த மாற்றத்தையும் நான் கண்டதில்லை. 

நாம் வேறு,வேறு துறைகளில் இருந்த போதும், அவருடன் உரையாடும் சந்தர்ப்பங்களில் அவரது தலைவர் மீதான பற்றையும் எமது மக்களையும், தேசத்தையும் எந்தளவு தூரம் நேசித்தார் என்பதை நான் உணர்ந்துள்ளேன். 

உலகத்துக்கே தெரிந்த அவரது முகாமின் மீது குண்டை போட்டு அழித்த எதிரிக்கு தெரியவில்லை, அவரை மக்கள் மனங்களில் இருந்து அழிக்க முடியாதென்பதை.!!
நினைவுகளுடன் துரோணர்.!!!
« PREV
NEXT »

No comments