Latest News

October 09, 2016

புதிய அதிபர்களை இழிவுபடுத்தும் வடக்கு கல்வி அமைச்சர் குருகுலராசாவின் அரசியல்.
by admin - 0

புதிய அதிபர்களை இழிவுபடுத்தும் வடக்கு கல்வி அமைச்சர் குருகுலராசாவின் அரசியல்.

 

பரீட்சையில் சித்தியடைந்த அதிபர்களை இழிவுபடுத்திய கல்வி அமைச்சர் குருகுலராசா

புதிய அதிபர் சேவை தரம் 3 நியமனம் தொடர்பான விடயம்.

இன்று 8.10.2016 வடக்கு மாகாண கல்வியமைச்சின் கேட்போர் கூடத்தில் பி.ப.2.30 மணிக்கு புதிய அதிபர்கள் சேவை தரம் 3 அதிபர்களின் சங்கப் பிரதிநிதிகளுக்கும் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கௌரவ த.குருகுலராஜா அவர்களுக்கும் இடையில் கடந்த வாரம் நியமனம் வழங்கப்பட்ட 84 அதிபர்களின் நியமனம் தொடர்பாக கடந்துரையாடல் இடம் பெற்றது.


இக்கலந்துரையாடலில் மாகாணக் கல்வியமைச்சின் செயலாளர் திரு.இ.ரவீந்திரன் மாகாண கல்விப்பணிப்பாளர் திரு.செ.உதயகுமார் மாகாண நிர்வாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு . தர்மலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடந்த வாரம் நியமிக்கப்பட்ட அதிபர் சேவை தரம் 3 நியமனம் தொடர்பான முறை கேடுகள் மற்றும் நியமனத்தில் ஏற்பட்ட பாரபட்சம், முறையற்ற, சட்டவலுவற்ற நியமனம் தொடர்பாக மேற்படி நியமனங்களை முதலமைச்சர் ரத்துச் செய்யும் படி கல்வியமைச்சர், செயலாளருக்கு வழங்கப்பட்ட பணிப்பு தொடர்பாக பதிலை கேட்டு கலந்து கொண்டோம்.


84 தரம் 3 புதிய அதிபர்கள் தற்போது நியமிக்கப்பட்டது மத்திய கல்வி அமைச்சின் நியமனம் தொடர்பான அமைச்சரவை பத்திரம் வெளிவரவுள்ள நிலையிலாகும்.


இந்த வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்ட போது ஏற்கனவே முதலமைச்சர் அவ் நியமனங்களை ரத்துச் செய்யும் படி பணித்திருந்தார். முதலமைச்சரின் பணிப்புரையை மீறியே இவ் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.


மேற்படி விடயங்கள் தொடர்பாக எமது பிரதிநிதிகள் இன்றைய கலந்துரையாடலில் முதலமைச்சரினால் பணிப்புரை வழங்கப்பட்டுள்ள 84 நியமனங்களையும் ரத்துச் செய்யும் கடிதத்திற்கு பதிலைக் கேட்டு இருந்தனர்.


மேலும் பயிற்சிக் காலத்தின் முடிவில் மத்திய கல்வி அமைச்சின் தீர்மானத்திற்கு ஏற்ப எமக்கு பாடசாலைகள் வழங்கும் செயற்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போதும் மேற்படி நியமனங்கள் எவ்வாறு வழங்கப்பட்டது எனக் கேள்வி எழுப்பியதோடு வடக்கு மாகாண கௌரவ முதலமைச்சர் அவர்களின் பணிப்புரைக்கு அமைய வழங்கப்பட்ட நியமனங்கள் ரத்துச் செய்யப்பட்டு 398 அதிபர்களுக்கும் ஒரே திகதியில் நியமனம் வழங்குமாறு கேட்டுக் கொ‌ண்டு‌ள்ளனர்.


இதற்கு பதிலளித்த வடக்கு மாகாண கல்வியமைச்சர் அதிபர் நியமனங்கள் தொடர்பாக மத்திய கல்வி அமைச்சின் அனுமதியோ அல்லது வடக்கு மாகாண முதலமைச்சரின் அனுமதியோ பெறவேண்டிய தேவை தனக்கு இல்லை எனவும் நியமனங்களை நிறுத்த முடியாது எனவும் வாதிட்டார்.

 


இதன் போது கருத்து தெரிவித்த எமது பிரதிநிதிகள் மத்திய கல்வி அமைச்சின் முடிவு பெறப்பட்டுள்ள நிலையில் நான்கு மாதங்கள் வரை எம்மைப் பாடசாலைகளில் நிலைப்படுத்தாது காத்திருந்துவிட்டு இப்போது அவசரமாக 84 ஏன் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன எனக் கேள்வி எழுப்பினர்.


இதற்கு பதிலளித்த கல்வியமைச்சர் மத்திய கல்வி அமைச்சின் முடிவு எவ்வாறு காணப்படினும் தனது முடிவே இறுதி முடிவாக காணப்படும் எனக் கூறினார்.

முதலமைச்சரால் ரத்துச் செய்யுமாறு கோரப்பட்ட கடிதத்திற்கு தங்கள் பதில் என்ன எனக் கேட்ட போது அதை முதலமைச்சரிடமே சென்று கேட்கும் படி ஏளனமாக பதில் அளித்தார்.


அத்துடன் எம்மை வடக்கு மாகாணத்தில் 220 ற்கும் மேற்பட்ட உப அதிபர், பிரதி அதிபர் வெற்றிடங்களை விரும்பின் கடமையை ஏற்குமாறும் அவ்வாறு முடியாது போனால் நீங்களே நியமனப் பட்டியலைத் தயாரித்து நியமனத்தைப் பெறுங்கள் எனக் கூறினார். மேலும் அதிபராக உங்கள் பணியைப் எதிர்காலத்தில் நான் பார்கத்தான் போகிறேன் என பரீட்சையில் சித்தியடைந்த அதிபர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசினார். இதனை ஏற்றுக் கொள்ளாத எமது பிரதிநிதிகள் அமைச்சருடன் கடும் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

எமது நியாயமான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத அமைச்சர் கூட்டத்தின் இடைநடுவில் வெளியேறினார்.


இதனையடுத்து எமது பிரதிநிதிகள் முதலமைச்சரின் கடிதத்தை உடனடியாக அமுல்படுத்துமாறும் உரிய தீர்வின்றேல் எமது நியமனத்தை பெறுவதற்கு போராடுவதைத் தவிர வேறு வழி இல்லை என்றும் கல்வியமைச்சிற்கு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து எதுவிதமான சாதகமான முடிவுகள் எதுவுமின்றி கூட்டம் இடைநடுவில் முடிவுற்றது.

புதிய அதிபர்களின் சங்கம்

 
« PREV
NEXT »

No comments