Latest News

October 23, 2016

புவிசார் - பூகோள அரசியலில் தமிழத் தரப்பின் தூய்மைவாதமும் சிங்களத் தரப்பின் யதார்த்தமும். -மு.திருநாவுக்கரசு
by admin - 0

புவிசார் - பூகோள அரசியலில்  
தமிழத் தரப்பின் தூய்மைவாதமும் சிங்களத் தரப்பின் யதார்த்தமும்.

-மு.திருநாவுக்கரசு

 

புவிசார் அரசியல் நெருக்கடியை பூகோள அரசியல் வாய்ப்புக்களால் கையாள்வதன் மூலம் வெற்றியீட்டுவதில் இலங்கை ஆட்சியாளர்கள் முதன்மையானவர்கள்.

இலங்கைத் தீவுடன் தொடர்புற்றெழும் இந்திய உபகண்டம் சார்ந்த புவிசார் அரசியல் நெருக்கடியை, பரந்த பூகோள அரசியல் நகர்வுகளுக்கு ஊடாக கையாள்வதன் மூலம் ஈழத்தமிழர்களின் தலைவிதியை அவர்களால் இந்துசமுத்திரத்தின் அடியாழத்தில் இலகுவாகவே புதைத்திட முடிகிறது.

இங்கு புவிசார் அரசியல் (Geopolitics)  எனப்படுவது இந்திய உபகண்டம் சார்ந்த அரசியலாகும். பூகோள அரசியல் (Global politics)  எனப்படுவது பரந்த பூகோளம் தழுவிய நலன்களைக் கொண்ட ஆதிக்க வல்லரசுகளின் அரசியலாகும்.

“அரசியல் என்பது காணப்படும் வாய்ப்புக்களை கையாள்வது பற்றிய வித்தை” என்பார்கள். மேற்படி புவிசார் அரசியல் மற்றும்  பூகோள அரசியல் ஆகியவற்றிற்கு மத்தியில் காணப்படும் வாய்ப்புக்களை கையாளும் வித்தையில் இலங்கை ஆட்சியாளர்கள் பெரிதும் கைதேர்ந்தவர்களாய் காணப்படுகின்றனர். 

புவிசார் அரசியல் அர்த்தத்தின்படி பார்க்கையில் முதலாவதாக இந்தியாவிற்கு அண்மையில் அதனுடன் ஒட்டினால் போன்ற அமைவிடத்தை இலங்கைத் தீவு கொண்டுள்ளதனால் இந்தியாவின் அரசியலோடு அது தொடர்புற்று பின்னிப் பிணைந்துள்ளது.  
 
அதேபோல் இரண்டாவதாக இந்தியாவின் பாதுகாப்போடு தொடர்புள்ள கேந்திர நிலையத்தில் இலங்கை அமைந்துள்ளதால் இந்தியாவின் பாதுகாப்பு நோக்கில் இருந்தும் இது இந்தியாவுடன் தொடர்புற்றுக் காணப்படுகிறது.

அத்துடன் இந்து சமுத்திரத்தில் இராணுவ கேந்திர முக்கியத்தும் வாய்ந்ததும், வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்ததுமான மையத்தில் இலங்கை அமைந்துள்ளதால் இத்தகைய நலன்களோடு சம்பந்தப்பட்ட பூகோள வல்லரச அரசியலுடன் இலங்கை தொடர்புறுவதாக உள்ளது. இந்நிலையில் இலங்கையின் மீது இந்தியாவிற்கு அதிகபட்ச கவர்ச்சி இருக்கும் அதேவேளை பூகோள நலன்களுக்கான ஆதிக்க சக்திகளும், இந்தியாவிற்கு எதிரான அரசியற் சக்திகளும் இலங்கையின் மீது பெரும் கவர்ச்சியைக் கொண்டுள்ளன.

இந்நிலையில் இலங்கை அரசானது புவிசார் அரசியல் ரீதியானதும், பூகோள அரசியல் ரீதியானதுமான பல்பரிமாண முக்கியத்துவங்களைக் கொண்டுள்ளது. இம்முக்கியத்துவத்தைச் சூழ்ந்து புவிசார் - பூகோள அரசியல் நலன்களின் அடிப்படையில் உள்நாட்டு அரசியல், இந்திய உபகண்ட அரசியல், இந்துசமுத்திர அரசியல், பரந்த பூகோள அரசியல் சார்ந்த அனைத்து சக்திகளும் சம்பந்தப்படுகின்றன. இந்த சக்திகளுக்கு இடையேயான போட்டியில் ஈழத் தமிழர்கள் மையப் பொருளாக காணப்படும் நிலையில் அவர்களை பகடைக்காய்களாக்கி தம் அரசியல் நலனை இலங்கை ஆட்சியார்களும் வெளிநாட்டுச் சக்திகளும் ஈட்டுகின்றன. 

இவ்வாறு மேற்படி அனைத்து உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளின் நலன்களும் ஈழத் தமிழரில் மையம் கொண்டுள்ள நிலையில் வெளிநாட்டுச் சக்திகளை கையாள்வதன் மூலம் ஈழத் தமிழர் பிரச்சனையையும், பூகோள அரசியல் சக்திகளை கையாள்வதன் மூலம் இந்திய உபகண்டம் சார்ந்த பூவிசார் அரசியல் பிரச்சனையையும் வெற்றி கொள்வதற்கான வித்தையை இலங்கை ஆட்சியாளர்கள் கைக்கொண்டு வருகின்றனர்.

வரலாறானது வெறுமனே பழங்காலம் பற்றிய ஒரு மனோரம்பிய ரசணைக்கான சம்பங்களின் தொகுப்பல்ல. மாறாக அது நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்குமான இரத்தோட்டத்தின் ஊற்றாகும். இந்தவகையிற்தான் இலங்கையின் கடந்தகால அரசியல் வரலாற்றை நிகழ்காலத்துடனும், எதிர்காலத்துடனும் இணைக்க வேண்டிய அவசியம் இங்குண்டு. 

அரசியல் அரிச்சுவட்டை எதிரியின் காலடிச் சுவடுகளில் இருந்தும் கற்றுக்கொள்ள முடியும். இதனாற்தான் எதிரியை எதிர்மறை ஆசான் என்றும் அழைக்கின்றனர். 

“பேயோடு மட்டுமல்ல பிசாசோடும் கூட்டுச் சேரத் தயார்” என்று தமிழருக்கு எதிராக 1980களில் அன்றைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன கூறியதையும் அதன் பொருட்டு அவர் மேற்கொண்ட அரசியற் செயற்பாடுகளையும் இராசதந்திர நகர்வுகளையும் சரிவர எடைபோட்டுப் புரிந்து கொள்ளாமல் ஈழத் தமிழர்கள் தம் அரசியல் தலைவிதியை முன்னேற்ற முடியாது. 

பேசுவது இலட்சியம் செய்வது பெருந் தியாகம். பெறுவது பேரழிவும் பெருந் தோல்வியும் என்ற ஒரு வரலாற்றுப் போக்கையே 1918ஆம் ஆண்டிலிருந்து இற்றைவரை ஈழத் தமிழர்கள் கொண்டு  காணப்படுகின்றனர்.
“அரசியல் என்பது சாத்தியக்கூறுகள் பற்றிய ஒரு கலை” என்ற பாணியில் ஆட்சியாளர்கள் இலங்கை அரசியலை கையாள்வதையும், அதன் மூலம் தமிழர்களை இலகுவாக வெற்றி கொள்ள முடிவதையும் அவதானிக்க முடிகிறது.
தமிழ்த் தரப்பின் அரசியல் கற்பனை நிறைந்த இலட்சியப் பாதையையும் சிங்களத் தரப்பின் அரசியல் யதார்த்தம் தழுவிய வெற்றிக்கான இலக்கையும் கொண்டுள்ளது. 

ஈழத் தமிழர் அரசியலில் இந்தியாவிற்கு இருக்கக்கூடிய எல்லைகளை ஜே.ஆர். ஜெயவர்த்தன சரிவர அளவிட்டார். இந்த அளவீட்டை அவர் புவிசார் அரசியல், பூகோள அரசியல் என்னும் இரண்டு அளவு கோல்களால் அளந்தெடுத்தார். 

இதன்படி புவிசார் அரசியல் நலன்களை எப்படி பூகோள அரசியலாலும், பூகோள அரசியல் சக்திகளின் நலன்களின் நலன்களை எப்படி புவிசார் அரசியலாலும் கையாளலாம் என்கின்ற வித்தையில் தனித்திறமை மிக்கவராய் காணப்பட்டார். ஆதலாற்தான் தமது இரு முக்கிய எதிரிகளான இந்தியாவையும், ஈழத்தமிழரையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களென ஓர் அரசியல் நகர்த்தலின் மூலம் தம் இரு எதிரிகளான இந்திய இராணுவத்தையும், விடுதலைப் புலிகளையும் மோதவிட்டு இருவரையும் அதலபாதாளத்திற்கு தள்ள அவரால் முடிந்தது. 

அவர் 1987ஆம் ஆண்டு உருட்டிய பம்பரம் 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் ஓய்ந்து அங்கு அது குடையென நிமிர்ந்து நிற்கின்றது. ஆனால் வரலாற்று அகராதியில் இக்குடை சரிந்து கவிழ்வதற்கான நாள் தெளிவாக பதியப்பட்டிருக்கின்றது என்பது வேறுகதை.

தமது சொந்த குடிமக்கள் என்று கூறப்படும் தமிழ் மக்களுக்கு எதிராக பேயோடு மட்டுமல்ல பிசாசோடும் கூட்டுச் சேரத் தயார் என்று பிரகடனப்படுத்தி அதன்படி உலகில் உள்ள அந்நிய சக்திகளிடம் எல்லாம் கைநீட்டி தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தை அவர் நடத்தினார். 

அந்நிய நாடுகளின் கூலிப்படைகளை தமிழ் மண்ணில் இறக்கி தமிழ் மக்களுக்கு எதிராக போர் புரியச் செய்தார். இப்படியே அந்நிய நாடுகளின் உளவுப்பிரிவுகளையும் தரையிறக்கினார். அப்படி மேற்குலக நாடுகளிடமும் வெள்ளை நிறவெறி ஆதிக்க தென்னாப்பிரிக்க அரசிடமும் இருந்து இராணுவ மற்றும் கூலிப்படை உதவிகளை ஒருபுறம் ஜே.ஆர். பெற்றார். மறுபுறம் மத்திய கிழக்கு நாடுகளின் உதவியையும், அந்த மத்திய கிழக்கு நாடுகளுக்கு எதிரான இஸ்ரேலிய மொசாட்டின் உதவியையும் பெற்றார். அமெரிக்காவிற்கு இலங்கையின் கேந்திர நிலையங்களை தங்கத் தாம்பாளத்தில் நீட்டிய ஜே.ஆர். அதேவேளை சிவப்பு சீனாவிற்கு இலங்கையில் பச்சைக் கொடியையும் காட்டினார்.

இந்தியாவின் இராணுவத்தை தருவிக்கவும் கூடவே இந்தியாவிற்கு எதிரான பாகிஸ்தானிய இராணுவ உதவியைப் பெறவும் ஜே.ஆர். தயங்கவில்லை. இறுதியில் தான் தருவித்த இந்திய இராணுவத்தையும் இந்திய இராணுவத்திடம் பயிற்சி பெற்றிருந்த புலிகளையும் மோதவிட்டு தமிழ் மக்களின் இரத்த ஆற்றில் தமது அரசியல் சித்துவிளையாட்டை அரங்கேற்றினார்.

இந்து சமுத்திரம் என்ற ஒரு கவர்ச்சி மையச் சுழியில் மேற்படி எதிரும் புதிருமான பல்வேறு நாடுகளையும் கவர்ந்து பம்பரம் ஆட்டுவதில் பெருவெற்றியீட்டினார். ஜே.ஆர். தொடக்கி வைத்த இந்த புவிசார் மற்றும் பூகோள அரசியல் பாரம்பரிய அடிப்படையிலான வெளியுறவுக் கொள்கைதான் முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் போதும் ராஜபக்ச அரசாங்கத்தால் பெருமெடுப்பில் முன்னெடுக்கப்பட்டது.

மேற்கின் தலைவன் அமெரிக்காவையும், கிழக்கின் தலைவன் சீனாவையும் ராஜபக்சவால் முள்ளிவாய்க்காலில் ஒரு கோட்டில் நிறுத்த முடிந்தது. கிழக்கிற்கும் மேற்கிற்கும் மத்தியில் உள்ள மத்திய கிழக்கையும் ராஜபக்சாவால் முள்ளிவாய்க்காலில் தன் அணி சார்பில் நிறுத்த முடிந்தது. இங்கு எதிரும் புதிருமான ஈரானும் அமெரிக்காவும் ஒரு கோட்டில் நின்றன. அப்படியே அமெரிக்காவையும் கியூபாவையும் கூடவே ஒரு புள்ளியில் நிற்க வைக்க ராஜபக்ச அரசாங்கத்தால் முடிந்தது. இப்படியே எதிரும் புதிருமான பாகிஸ்தானையும் இந்தியாவையும் ஒரு கோட்டில் நிறுத்த முடிந்தது. 

மொத்தத்தில் வடக்கையும் தெற்கையும், கிழக்கையும் மேற்கையும், கிழக்குக்கும் மேற்கிற்கும் இடையேயான மத்திய கிழக்கையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவரும் அபார சக்தியை இலங்கை ஆட்சியாளர்கள் முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் போது நிருபித்துள்ளனர். இவையெல்லாம் புவிசார் அரசியல் - பூகோள அரசியல் என்ற வித்தைகளை கற்றதன் மூலமாக அரங்கேற்றிய சிலம்பாட்டங்களாக அமைந்தன.

உலகப் பெருவல்லரசுகளும் மற்றும் பேரரசுகளும் இங்கு அவற்றின் அளவு வேறுபாடுகளுக்கு பொருத்தமாக சிலம்படி வீரனின் கையில் உள்ள கம்புகள் போல மிக இலாவகமாக கையாளப்பட்டுள்ளன. 

“இரண்டு யானைகள் புணரும் போதும் புல்லுக்குத்தான் சேதம், அவை சண்டையிடும் போதும் புல்லுக்குத்தான் சேதம்” என்ற பேருண்மைக்கு பொருத்தமாக இலங்கை ஆட்சியாளர்களால் தருணம் பார்த்து யானைகளை புணர வைக்கவும், யானைகளை சண்டையிட வைக்கவும் முடிந்துள்ளது. இதில் இருதருணங்களிலும் புல்லாய் நசிந்து போனது ஈழத் தமிழர்கள்தான்.

உறவுகளை கையாளும் வித்தையை இந்த உலகம் இலங்கை ஆட்சியாளர்களிடம் இருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு இலங்கை ஆட்சியாளர்களின் மேற்படி கையாளல் திறன் அமைந்துள்ளது. 

வரலாற்று ரீதியாக தமிழ்த் தலைமைகள் பொதுவாக உறவில் தூய்மையை நாடுவார்கள். ஆனால் இலங்கை ஆட்சியாளரோ உறவில் தேவையை நாடுவார்கள். இலங்கை ஆட்சியாளர்களிடம் உறவு பற்றிய யதார்த்த அணுகுமுறை இருக்கும். தமிழ்த் தலைமைகளிடம் உறவு பற்றிய தூய்மைவாத கற்பனை இருக்கும்.

எதிரும் புதிருமான எல்லா இன நிறங்களும் முள்ளி;வாய்க்காலில் ஒன்றாய் கலந்தன. வெள்ளை, சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம் என எந்த நிறமும் தப்பவில்லை. எல்லாம் ஒன்றுகலந்து ஒரு புது நிறமாய் காட்சியளித்தன. இந்த கலப்பு வித்தை இலகுவாக செய்திருக்க முடியாது. இந்த வித்தைக்கு அடிப்படையான நீண்ட வரலாற்று வழிவந்த புவிசார் மற்றும் பூகோள அரசியல் சமன்பாடுகள் உண்டு. அந்த சமன்பாடுகளில் இலங்கைத் தலைவர்கள் பாண்டித்தியம் பெற்றிருக்காவிட்டால் அதனை அவர்களால் கையாண்டிருக்க முடியாது. அந்த சித்துவிளையாட்டை செய்திக்க முடியாது.

அந்த வரலாற்று வழிவந்த புவிசார் - பூகோள அரசியலின் சங்கிலத் தொடரை இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். புவிசார் அரசியல் என்பது வெறுமனே புவியியல் சார்ந்ததல்ல. அது அரசியல் வரலாற்று வளர்ச்சியுடன் பின்னிப்பிணைந்த ஒன்றாகும். ஆதலால் புவிசார் அரசியலை அதன் அரசியல் வரலாற்றோடு இணைத்துப் பார்க்க வேண்டும்.

18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் நிகழ்ந்த நெப்போலிய யுத்தங்கள்தான் இன்றைய புவிசார் அரசியல் மற்றும் பூகோள அரசியல் சார்ந்த பல மைற்கற்களைத் தோற்றுவித்தன. 
நெப்போலியனிடம் புவிசார் - பூகோள அரசியற் கண்ணோட்டம் இருந்தது. ஆனால் அதுபற்றிய ஞானம் அவரிடம் இருக்கவில்லை. ஆங்கிலக் கால்வாய் 24 மணி நேரத்திற்கு என் கையில் இருக்குமேயானால் மறுகணம் பிரித்தானியா என் கையில் அதைத் தொடர்ந்து ஐரோப்பா என் கையில் என்றவாறு நெப்போலியன் சிந்தித்தார்.
 
அதேவேளை திருகோணமலை யாரின் கையில் இருக்கிறதோ அவரின் கையில் உலகம் இருக்கும் என்றும் நெப்போலியன் கணக்குப்போட தவறவில்லை. தன்னிடம் ஆங்கிலக் கால்வாயை கடப்பதற்குரிய கடற்படை இல்லாத நிலையில் தரைவழியே  ரஷ்யாவை வெற்றி கொள்வதன் மூலம் ஐரோப்பாவை வெற்றிகொள்வதற்குரிய புவிசார் வியூகத்தை நெப்போலியன் அமைத்திருந்தார். 

அங்கு நெப்போலியனுக்கு ஏற்பட்ட துரதிஸ்டம் என்னவெனில் ரஷ்யாவின் சாகா வரம் பெற்ற ஜெனரல் வின்ரரைப் (General Winter)  பற்றிய ஞானம் அவரிடம் இருக்கவில்லை. நெப்போலியனை ஜெனரல் வின்டர் என்னும் புவியியல் சார்ந்த குளிர்காலம் தோற்கடித்தது. அதேபோல மறுபுறம் அட்மிரல் ஆங்கிலக் கால்வாய் (Admiral English Channel)  அவரைத் தோற்கடித்தது. இரு இடங்களிலும் அவரது தோல்விகள் புவியியல் ரீதியானவை.
தரையில் சிங்கமென பாய்ந்த நெப்போலியன், கடலில் யானையென மூழ்கினார். நெப்போலியனது வோட்டர்லூவிற்குப் பின்னால் ரஷ்ய ஜெனரல் வின்டரும், அட்மிரல் ஆங்கிலக் கால்வாயும் இருந்தன.

நெப்போலியனுக்கு வோட்டர்லூ போல் பிரபாகரனுக்கு முள்ளிவாய்க்கால் அமைந்தது. நெப்போலியனின் வோட்டர்லூவின் பின்னால் ரஷ்ய ஜெனரல் வின்டரும், அட்மிரல் ஆங்கிலக் கால்வாயும் இருந்தது போல முள்ளிவாய்க்காலுக்குப் பின்னால் இந்துசமுத்திர அரசியல் இருந்தது.

நெப்போலிய யுத்தத்தின் தாக்கத்திற்கு ஈடுகொடுக்கும் முகமாக அதன் பின் ஐரோப்பிய ஆதிக்க சக்திகள் தம்மை மீள்கட்டமைப்பு செய்து கொண்டன. 19ஆம் நூற்றாண்டு ஐரோப்பா அத்தகைய மீள்கட்டமைப்பில் எழுந்த ஒன்றாகும். அக்கட்டமைப்பின் தொடர்ச்சியே முதலாம் இரண்டாம் உலக மகாயுத்தங்களை பிரசவித்தது. இறுதியாக இரண்டாம் உலக மகாயுத்தின் பெறுபேறாய் வரையப்பட்ட உலகப்படத்தின் புவிசார் - பூகோள அரசியல் போக்கே இன்றைய உலகம் தழுவிய அரசியல் போக்கின் நீழ்ச்சியாகும். 

அப்படியென்றால் நெப்போலிய யுத்தத்தின் குழந்தையாய் 19ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவும் அது பின்பற்றிய புவிசார் - பூகோள அரசியலும் பிரசவமாயின. அதன் உச்சம் இரண்டாம் உலக மகாயுத்தத்தில் முடிவடையவே அதன் பெறுபேறான இன்றைய புவிசார் - பூகோள வரைபடம் உருவானது என்பதைப் பார்க்கும் போது நெப்போலிய யுத்தங்களில் இருந்தும், இரண்டாம் உலக யுத்தத்தில் இருந்தும் இந்த உலகத்தை பிரித்துப் பார்க்க முடியாது. 

இத்தகைய வரைபடத்தின் தொடர் புள்ளிகளில் ஒன்றாகவே முள்ளிவாய்க்கால் யுத்தத் தேவைகளும் இடம்பெற்றன. இங்கு புவியியல்தான் அரசியலை நிர்ணயிக்கின்றது என்பது அர்த்தமல்ல. ஆனால் புவிசார் நிலைமைகளானவை ஆங்காங்கே பெரும் புள்ளிகளாக அமைந்து உலக அரசியல் வரைபடத்தை தொடுத்துவிடுகின்றன என்பதே உண்மை. இதில் புவிசார் புள்ளிகளுக்கும் மற்றும் அரசியல் வளர்ச்சிப் போக்குக்கும் இடையில் தொடர்புகள் இருக்கின்றன என்பதை மட்டும் அவதானித்தால் போதுமானது. 

அதேவேளையில் கேந்திர முக்கியத்தும் வாய்ந்த மையங்களில் புவிசார் புள்ளிகளுக்கு இருக்கக்கூடிய முக்கியத்துவங்களை குறைத்து மதிப்பிடவும் கூடாது. 

மேற்படி நெப்போலிய யுகத்தில் இருந்து அதன் வரலாற்றை யுத்தப் போக்குக்கு ஊடாக கற்றறிந்ததன் வாயிலாகவே மக்கிண்டரால் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் புவிசார் அரசியல் பற்றிய இருதய நிலக் கோட்பாட்டை பூகோள அரசியல் பரிமாணத்துடன் வரைய முடிந்தது. நெப்போலியனது ரஷ்யா மீதான படையெடுப்பும் அதன் தோல்வியும்தான் ரஷ்யப் பகுதியை இருதய நிலமாக அடையாளங் காணக்கூடிய வரலாற்று உதாரணத்தை ஏற்படுத்தியது. 

அந்த நெப்போலியனால் உலக சாம்ராஜ்ஜியத்தின் அச்சாக பார்க்கப்பட்ட திருகோணமலையும் அதைச் சார்ந்த இலங்கைத் தீவும் 21ஆம் நூற்றாண்டிலும் அதற்குரிய முக்கியத்துவத்துடன் உலக ஆதிக்கத்திற்கான ஒரு வர்த்தக மற்றும் கேந்திர புள்ளியாக தொடர்கிறது.

இந்த வகையில் நெப்போலியன் கண்ட ரஷ்ய ஜெனரல் வின்டர், அட்மிரல் ஆங்கிலக் கால்வாய் என்பவற்றுடன் சேர்த்து திருகோணமலையை உள்ளடக்கிய இலங்கையும் இன்றைய உலக அரசியல் வரலாற்றில் முக்கிய வரலாற்றுப் புள்ளிகளாக தொடர்கின்றன. 

தன் புவியியல் பலவீனத்தில் இருந்து தற்காக்க சீனப் பெருஞ்சுவரை எழுப்பி சீனாவால் அந்நியப் படையெடுப்பில் இருந்து தற்காக்க முடிந்தது. சீனாவைப் பொறுத்த வரையில் அதன் புவியியல் பலவீனத்தை தடுக்க அதனிடம் ஒரு மாற்றுவழியிருந்தது. 

அதற்கு தாய்வான் விடயம் வேறானது. அரசியல் ரீதியாக தாய்வான் தீவு சீனாவுடன் இணைவதாக முடிவெடுக்காத இடத்து சீனாவின் இறுதித் தெரிவு அதன் மீதான படையெடுப்பாகவே அமைய முடியும். கடல்சார்ந்த அமைவிடப் பிரச்சனையில் சீனா விட்டுக் கொடுப்பற்ற ஒரு போக்கை எதிர்காலத்தில் கைக்கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை. 
அதேபோல இலங்கைத் தீவு விடயத்தில் இந்தியா அமைதியாக இருக்க இடமிருக்காது. பிரச்சனைகளின் முரண்பாடு முற்றி உயர்நிலை அடையும் போது இங்கு வல்லரச சக்திகள் ஏதோ ஒருவகையில் இரண்டு அணிகளாக பிளவுண்டு ஓர் அறுவை சிகிச்சையில் ஈடுபடும். 

அதற்கிடையிலோ அல்லது அப்போதோ அதில் ஈழத்தமிழரின் கழுத்து அறுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதற்கான முன்னறிவு எமக்கு அவசியம். இதில் சீனா நிரந்தரமாக அதாவாது எக்கட்சி இலங்கையில் பதவியில் இருந்தாலும் இலங்கை அரசின் பக்கமே நிற்கும். இதனைச் சுற்றி ஓர் அணி உருவாகும். 
இரண்டாம் உலக மகாயுத்தத்தின் போது இந்த உலகம் இரண்டு அணிகளாக பிளவுண்ட ஒரு வரலாற்று அனுபவத்தை இங்கு கருத்தில் கொள்வது அவசியம்.

எதிரும் புதிருமான சோசலிச சோவியத் யூனியனும், முதலாளித்துவ பிரித்தானியாவும், அமெரிக்காவும் ஓர் அணியின் கீழ் வந்தன. பிரித்தானியாவிற்கு எதிராக விடுதலைப் போராட்டம் நடத்திய இந்திய தேசிய காங்கிரசும் பிரித்தானியாவுடன் ஹிட்லருக்கு எதிராக கூட்டுச் சேர்ந்தது. அப்படியே அமெரிக்காவிற்கு எதிராக போராடி வந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியும் அமெரிக்க பிரித்தானிய அணியுடன் கூட்டுச் சேர்ந்தது. இது மிகவும் கவனத்திற்குரிய ஒரு வரலாற்று கூட்டாகும். 

இங்கு தூய்மைகள் பார்க்கப்படவில்லை. யதார்த்தம் சார்ந்த தேவைகளே பார்க்கப்பட்டன. இரண்டாம் உலக மகாயுத்தத்தின் போது மலேசிய கம்யூனிஸ்ட் கட்சி தனது எதிரியான பிரித்தானிய ஆட்சியாளர்களுடன் கூட்டுச் சேர்ந்து ஒன்றாக களம் கண்டனர். ஒன்றாகவே இரத்தமும் சிந்தினர். ஆனால் இரண்டாம் உலக மகாயுத்தம் முடிந்த மறுகணத்தில் கூட்டை கைவிட்டு இரண்டும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. இங்கு ஒரு கட்டத்தில் கூட்டு நிலவிய உதாரணத்தை கருத்தில் கொள்ள தவறமுடியாது. 

வரலாற்றில் இருந்தும் கூடவே எதிரியிடம் இருந்தும் பாடங்களைக் கற்றுக் கொண்டு தன்னை சரிசெய்யத் தவறும் யாரும் வரலாற்றில் வெற்றிபெற முடியாது. 

பேயுடன் மட்டுமல்ல, பிசாசுடனும் கூட்டுச் சேர்ந்து தன் சொந்த குடிமக்களை அழிக்கும் ஒரு வரலாற்றுப் பாரம்பரியத்தை ஜெயவர்த்தன இலங்கையில் தொடங்கி வைத்தார். அது ஒரு வளர்ச்சிப் போக்கைக் கொண்ட ஒரு பாரம்பரியமாய் தொடர்கிறது. இதில் இருந்து மீள தமிழ்த் தரப்பு அதிக பிரயத்தனங்களை செய்ய வேண்டியிருக்கும்.

தொழில்சார் மற்றும் முறைசார் அரசியல் இராஜதந்திர கட்டமைப்புக்கள் தமிழ்த் தரப்பிடம் இல்லை. இதற்கான புலமைசார் பாரம்பரியமும் தமிழ்த் தரப்பிடம் இல்லை. இத்தகைய வெற்றிடத்தில் இருந்து மேற்படி கட்டமைப்புச் சார்ந்த வளர்ச்சிகளைக் கண்டிருக்கும் சிங்களத் தரப்புடன் தமிழ்த் தரப்பு தன்னை நிலைநிறுத்த அரும்பாடுபட வேண்டும். 

இது வெறுமனே அறிவு சார்ந்த விடயம் மட்டுமல்ல அறிவுக்கும் அப்பால் புலமையும் கையாளல் தேர்ச்சியும் அதற்குப் பொருத்தமான மனப்பாங்கும் ஒருங்குசேர வளரவேண்டும்.  புவிசார் அரசியல் - பூகோள அரசியல், அரசியல் - இராசதந்திரம் போன்ற  துறைகளில் புலமையும், இவற்றைக் கையாளும் திறமையும் சேர்ந்து வளர்ச்சி அடைந்திருக்கக் கூடிய ஒரு மக்கள் கூட்டத்தினாற்தான் வரலாற்றில் வெற்றிகளைக் குவிக்க முடியும் என்பதை கருத்தில் கொள்ளத் தவறக்கூடாது.

« PREV
NEXT »

No comments