Latest News

September 07, 2016

ஆபத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு -தலைமைகள் காரணமா?
by admin - 0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது தமிழ் மக்கள் வைத்திருந்த நம்பிக்கை மெல்ல, மெல்ல இழக்கப்பட்டுவருவதாக அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.

மக்களுக்கு வழங்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியமையே இந்த நிலைக்கு காரணம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கூட்டமைப்பின் அண்மைக்கால அரசியல் நகர்வுகள் தமிழ் மக்களின் மத்தியில் பெற்றுள்ள செல்வாக்கை வெகுவாக பாதித்துள்ளது.

கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐ.நா செயலாளர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை யாழ்ப்பாணத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இச்சந்திப்பின் போது வடக்கில் தமிழ் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். சந்திப்பின் பின்னர் ஐ.நா செயலாளரை கூட்டமைப்பினர் தம்மை சந்திக்க வைப்பார்கள் என போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் எதிர்ப்பார்திருந்தனர்.

எனினும் ஐ.நா செயலாளரோ பின் கதவு வழியாக செல்ல, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதன் பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை சந்திக்க கூட்டமைப்பு பிரதிநிதிகள் வருகை தந்திருந்தனர்.

இதன் போது யாரும் எதிர்பாராத விதமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூட்டமைப்பு உறுப்பினர்களை நோக்கி வார்த்தைகளால் தாக்க தொடங்கினர்.

சூழ்நிலையை உணர்ந்துகொண்ட கூட்டமைப்பு உறுப்பினர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இது போலவே கூட்டமைப்பு உறுப்பினர்கள் வழங்கும் வாக்குறுதிகளும் காற்றில் பறக்கும் பட்டம் போல் ஆகிவிட்டதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

பரவிப்பாஞ்சான் மக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் வழங்கிய வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதனால் கடும் அதிருப்தியடைந்த மக்கள் தங்கள் போராட்டத்தை மீண்டும் மேற்கொள்ளத் தொடங்கியிருக்கின்றனர்.

அது போலவே அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலும் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருக்கையில் அரசியல் கைதிகளும் தங்களது போராட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கப் போவதாக குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில் எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தன் நல்லாட்சி அரசாங்கம் அமைந்த கையோடு 2016ஆம் ஆண்டின் இறுதிக்குள் அரசியல் தீர்வை பெறுவோம் கருத்து வெளியிட்டு இருந்தார்.

இக் கருத்தை மக்கள் எவ்வாறு எடுத்துக் கொள்வார்கள் என்று ஏனைய தமிழ் அரசியல் தலைமைகள் கேள்வி எழுப்பத் தொடங்கியிருக்கின்றன.

இதேவேளை, யாழ். உடுவில் மகளிர் பாடசாலை விவகாரத்திலும் கூட்டமைப்பின் தலையீடுகள் இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

« PREV
NEXT »

No comments