Latest News

September 21, 2016

உடுவில் மகளிர் கல்லூரியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பாக வ.மா.ச எதிர்க்கட்சித் தலைவர் அவசர பிரேரணை
by admin - 0

உடுவில் மகளிர் கல்லூரியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பாக வ.மா.ச எதிர்க்கட்சித் தலைவர் அவசர பிரேரணை

உடுவில் மகளிர் கல்லூரியில் அண்மையில் மாணவிகளால் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களின் போது நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பாகவும், அக் கல்லூரியில் பல ஒழுக்க சீர்கேடுகள் நடைபெற்று வருவதாக பெற்றோரினால் கூறப்படும் முறைப்பாடுகள் தொடர்பாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா நாளை 22.09.2016 நடைபெறவுள்ள சபை அமர்வின் போது ஓர் அவசர பிரேரணையைக் கொண்டுவரவுள்ளார். அப் பிரேரணையில் கூறப்பட்டுள்ளதாவது,

'உடுவில் மகளிர் கல்லூரியின் புதிய அதிபர் நியமனம் தொடர்பாக அக் கல்லூரி மாணவிகளினால் நடாத்தப்பட்ட அமைதியான போராட்டத்தின் போது சில கல்லூரி ஆசிரியர்களும், மதகுரு ஒருவரும், வேறு வெளியாட்களும் மாணவிகள் மீது தகாத வார்த்தைப் பிரயோகங்களைப் பிரயோகித்தும், மிரட்டியும், தாக்குதல்களையும் நடாத்தியுள்ளதாக மாணவிகளின் பெற்றோர்களினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவற்றிற்கு ஆதாரமாகக் காணொளிப் பதிவுகளும் இருக்கின்றன. 
அத்துடன் இக் கல்லூரியில் கடந்த பல வருடங்களாகப் பல சீர்கேடுகள் இருந்து வந்துள்ளதாகவும், அவை மூடி மறைக்கப்பட்டிருந்ததாகவும், தற்சமயம் முறைப்பாடுகள் வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாகப் பாடசாலையைச் சேர்ந்த சில ஆசிரியர்களும் (இருபாலாரும்) சில விடுதிப் பணியாளர்களும், பிறழ்வான நடத்தைகளில் ஈடுபட்டதாகவும் முறையிட்டுள்ளனர். பாடசாலை நிர்வாகம் இதனைக் கண்டும் காணாமலிருந்து தவறு செய்பவர்களிற்குத் துணைபோயிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 
மாணவிகளின் விடுதிகளின் ஒழுக்க விழுமியங்கள் தொடர்பாகவும் வேதனையளிக்கக் கூடிய தகவல்கள் பரவியுள்ளன.

மேலும் தற்போது கடமையாற்றும் ஆசிரியர்களில் ஒரு பகுதியினர் பொருத்தமான கல்விசார் தகமைகளைக் கொண்டிராதுள்ளனரென்றும், தமது தனிப்பட்ட விடயங்கள் தொடர்பில் மாணவிகள் விளங்கிக்கொள்ளும் வகையில் விரசமாகப் பயன்படுத்துவதாகவும், ஒரு சில ஆண் ஆசிரியர்கள் ஒழுக்கப் பிறழ்வான வகுப்பறை செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் கூறப்பட்டிருக்கின்றது.

தொண்ணூறு வீதத்திற்கும் மேலாக சைவசமயத்தைப் பின்பற்றும் மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலையில், அவர்கள் வழிபடுவதற்கு வழிபாட்டிடம் இல்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான முறைப்பாடுகளின் உண்மைகளை வெளிக் கொணர்ந்து உரிய நடவடிக்கைகளிற்காக பரிந்துரை செய்வதற்கேதுவாக கௌரவ முதலமைச்சர் அவர்கள் ஓர் விசாரணைக் குழுவை அமைத்து, அவை தொடர்பான உண்மையை வெளிக் கொணர்வதற்கு ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்'. 

என அச் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஊடகப்பிரிவு
எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயம்
வடக்குமாகாண சபை
« PREV
NEXT »

No comments