Latest News

August 26, 2016

புலிகளின் படகுத்தொழில்நுட்பத்தை களவாடிய சிங்கள அரசு.!! வெளிவரும் உண்மைகள்
by admin - 0

சிறிலங்கா இராணுவத்தினர், அடுத்தவாரம் தமது முப்படையினரைக் கொண்ட பெரும் போர்ப் பயிற்சி ஒன்றில் ஈடுபட உள்ளனர். வரும் செப்ரெம்பர் 3ஆம் நாள் தொடக்கம், 25ஆம் நாள் வரை கொக்கிளாய் பகுதியில் இடம்பெறவுள்ள இந்த போர்ப் பயிற்சிக்கு “நீர்க்காகம்”என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த போர்ப்பயிற்சியில் சிங்களப்படையினருடன் சேர்ந்து பங்களாதேஸ், சீனா, இந்தியா, ஜப்பான், மாலைதீவு, நேபாளம், பாகிஸ்தான், மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த50 படையினர் உட்பட, இந்த நாடுகளைச் சேர்ந்த 3500 படையினர் இந்த பயிற்சியில் பங்கு பற்ற உள்ளனர் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்?

எனது பதிவின் நோக்கம் இந்த பயிற்சி பற்றியதல்ல.!

இந்த பயிற்சியில் ஈடுபடுத்தப்பட இருக்கின்ற சிங்களக் கடற்படையினரின் சண்டைப்படகுகள் பற்றியது.

நண்பர்களே.! இதேபோன்று ஒரு போர்ப் பயிற்சி, போன வருடமும் சிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்டது.

அதில் சிங்களக் கடற்படையினரின் பாவனைக் கடற்கலமான “டோராவிற்கு” பதிலாக, கடற்புலிகளிடமிருந்து கைப்பற்றிய சண்டைப்படகுகளின் தொழில்நுட்பத்தை கொண்டு “அதே போன்று வடிவமைக்கப்பட்ட சண்டைப்படகுகளை கொண்டே” அந்த பயிற்சியை மேற்கொண்டிருந்தனர்.

புலிகளின் படகுகளையும், அதேபோன்று சிங்களக் கடற்படையாள் உருவாக்கப்பட்ட, படகுகளின் படங்களையும் இணைத்துள்ளேன் அதை பார்க்கும் போது உங்களுக்கு புரியும்.

2009வரை சிங்களக் கடற்படையின் பிரதான சண்டைப்படகாக “இஸ்ரேலிய தயாரிப்பான டோறாப்படகுகளையே”பாவித்து வந்தது.

இந்த சிறிய வகைப்படகுகளே சண்டைக்கு இலகுவானதாக உலக கடற்படையால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதையே தான் கடற்புலிகளுக்கு எதிரான போரில் சிங்களக் கடற்படை இஸ்ரேலிடமிருந்து கொள்வனவு செய்து பாவித்தது.

காலப்போக்கில் சிங்கள அரசு அதே போல, அந்த தொழில் நுட்பத்தை கொப்பி பண்ணி சொந்தமாக தயாரித்தது.

ஆனபோதும் கடற்புலிகளுடனான போரில் உலகத்தரம் வாய்ந்த சண்டைப்படக்கான “டோராவை” புலிகளின் சொந்த முயற்சியால் உருவாக்கப்பட்ட சண்டைப்படகுகளைக்கொண்டு கடலின் அடியில் மூழ்கடித்தனர்.

கடற்புலிகள் கடலில் ஆதிக்கம் செலுத்த, சிங்களக் கடற்படை கதிகலங்கியது.

1990களின் நடுப்பகுதிகளில் தினமும் “டோராப் படகு”மூழ்கடிப்பு செய்தியே தாயகத்தில் முன்னிலை வகித்திருந்தது. அந்தளவு தூரம் கடலில் புலிகள் ஆதிக்கம் செலுத்தினர்.

ஆரம்பத்தில் தனிப்படகுகளில் சுதந்திரமாக சுற்றித்திரிந்த சிங்களக் கடற்படை, பின்னைய காலங்களில் கூட்டமாகத் திரியவேண்டி இருந்தது.!

பொதுவாக ஒரு நாட்டுடனான போரின் போது அந்த நாடுகளின் யுத்த நிலைமை பற்றி, ஒவ்வொரு நாடுகளும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருப்பர்.

அதே போலவே புலிகளுக்கும் சிங்களப்படையினருக்குமான போரின் உத்திகளையும், அதற்கான பாவனைக் கலங்கள் (ஆயுதங்கள்) பற்றியும் உன்னிப்பாக அவதானிப்பர்.

அதன் வெளிப்பாடாக 2009யுத்தம் முடிவுற்ற போது, சிங்கள அரசிடமிருந்து ஈரானிய அரசு கடற்புலிகளின் போர்த்தொழில் நுட்பத்தை சிங்கள அரசிடமிருந்து பெரும் தொகைக்கு வாங்கி இருந்தனர். (ஈரானிய அரசு கொட்டபாய ராஜபக்ஸவிடமிருந்து வாங்கியது இது பற்றிய ஒரு பதிவு முன்னர் பதிவிட்டுள்ளேன்)

ஆக, முன்னைய போர் ஒத்திகையில் போது நல்ல பெறு பேறுகளை கொடுத்தது கடற்புலிகளின் சண்டைப்படகு தொழில் நுட்பம்.!

ஆகவே தான் சிங்கள அரசு அந்த தொழில்நுட்பத்தை கொண்டு பெரும் தொகையான சண்டைப்படகுகளை உற்பத்தி செய்து வருகின்றது. இந்த ஒத்திகைக்கும் இந்த படகுகளே பாதிக்கப்படலாம். (இதில் சிறிய நாடுகளுக்கான ஏற்றுமதி நோக்கமும் சிங்கள அரசு கொண்டுள்ளது)

புலிகளின் படகில் அப்படி என்ன சிறப்பு உள்ளது?

புலிகளுடனான போரில் “பெரும் பட்டறிவை” கொண்ட நாடான சிங்களம் உலக நாடுகளால் ஏற்றுக்கொள்ளப் பட்ட சண்டைப்படகான டோராவை புறம்தள்ளி புலிகளின் தொழில்நுட்பத்தை கையில் எடுத்தமைக்கான காரணத்தை பார்ப்போம்.

புலிகளின் சண்டைப்படகுக்களில் பிரதானமாக இருந்த சிறப்பு அம்சங்கள்.!

அ. கனரக ஆயுதங்கள், எரிபொருள் கலன்கள்,ஆயுதங்களுக்கான ரவைகள் என பெரும் சுமைகளை ஏற்றியவாறு அதி கூடிய வேகம்.

ஆ. அந்த வேகத்துக்கு ஈடுகொடுக்க கூடிய படகுக் கட்டுமானம் (வேகம் அதிகரிக்கும் போது படகு பிரிந்து விபத்து ஏற்றப்படுவதற்கு சந்தர்ப்பம் அதிகம்)

இ. எல்லா காலநிலைக்கும் தாக்குப்பிடிக்கக் கூடியது.

ஈ. சண்டைகளின் போது வேகமாகவும் அதேநேரம் சடுதியாக திரும்பக்கூடியவாறு அமைக்கப்பட்டிருந்த அதன் அடிப்பகுதி.

உ. மிக முக்கியமானது குறைந்த உட்பத்திச்செலவு

இப்படி பல சிறப்பு அம்சங்களை கொண்ட தமிழனின் தொழில்நுட்பம் களவாடப்பட்டு விற்பனைக்கு தயாராகி உள்ளது.

சிங்களம் ஒரு நாட்டு அரசாக இருந்தபோதும் அதனால் எந்த ஆயுத தொழில் நுட்பத்தையும் சொந்தமாக உருவாக்க முடியவில்லை.

ஆனால், கிடைத்த சிறு வளங்களை கொண்டே, தமிழர் ராணுவம் “ஆணியில் இருந்து விமானத்தில் போட்ட குண்டுவரை” சொந்தமாக தயாரித்தே பயன்படுத்தினான்.!

உண்மையில் புலிகளே இராணுவ தொழில் நுட்பத்தில் வல்லுனர்கள் என்பதை சிங்களம் இந்த படகுகள் மூலம் மீண்டும் நிருபித்துள்ளது.!
ஏக்கங்களுடன் துரோணர்.!!

« PREV
NEXT »

No comments