Latest News

August 29, 2016

பயணியை நெஞ்சில் பிடித்துத் தள்ளி விட்டுச் சென்ற தெல்லிப்பளை மினிபஸ் நடத்துநரின் அடாவடி!
by admin - 0

பயணி ஒருவரை தனியார் மினிபஸ்ற்குள்ளிருந்து நெஞ்சில் பிடித்து வெளியே தள்ளி விட்டுச் சென்ற பஸ் நடத்துநர் பயணியை வாயில்வந்தபாட்டுக்கு கண்டபடி திட்டியுள்ளார். இச்சம்பவத்தை மினிபஸ் சாரதியிடம் சென்று கூறியபோது நடத்துநர் சொல்வதும், செய்வதும்தான் சரி எங்கள் பஸ் இல் யாரை ஏற்ற வேண்டும் யாரை ஏற்றக் கூடாது என்று நாங்கள்தான் தீர்மானிப்போம் எனவும் கூறியதுடன் நீங்கள் யாரிடம் கூறினாலும் இங்கு நாங்கள் நினைத்ததுதான் சட்டம் எனவும் கூறியுள்ளார்கள். இது தொடர்பில் யாழ்ப்பாணம் மினிபஸ் சங்கத்திடமும் முறையிடப்பட்டுள்ளது.

இது பற்றி மேலும், இன்று (28.08.2016) காலை 11.15 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து கே.கே.எஸ். வீதியூடாக தெல்லிப்பளை செல்லும் இலக்கம் 60-ஸ்ரீ-3287 மினி பஸ் இல் ஏறிய பயணி ஒருவரை பஸ் நடத்துநர் பின்னுக்குப் போ என்று கூறியுள்ளார் அதற்கு அவர் தம்பி நான் கொக்குவிலில் இறங்கிவிடுவன் பின்னுக்குச் சென்றால் இறங்க முடியாது என்று கூற இப்ப பஸ்ஸை விட்டுக் கீழே இறங்கி நில் போகும்போது ஏற்றிச் செல்கிறோம் என்று கூறியுள்ளார். 

அதற்கமைவாக பயணி கீழே இறங்கி நின்றுள்ளார். சிறிது நேரத்தில் பஸ் செல்வதற்கு ஆயத்தமானதும் கீழே நின்ற பயணிகளை பஸ்ஸில் ஏறுமாறு நடத்துநர் கூறியதற்கமைவாக அப்பயணியும் பஸ்ஸில் ஏறி பஸ்ஸினுள் நிற்க ஐயா நீ... ஏன் ஏறினனி... உன்னை இந்தப் பஸ்ஸில் ஏற்ற முடியாது நீ இறங்கு என்று பஸ் நடத்துநர் கூறியுள்ளார். அதற்கு அந்தப் பயணி தம்பி நான் இந்தப் பஸ்ஸில் போவதற்காகத்தானே நீர் கூறியபடி இவளவு நேரமும் காத்து நின்றனான். ஏன் என்னை ஏற்றிச் செல்ல முடியாது என்று கூறுகின்றீர் என்று கேட்டதற்கு பஸ் நடத்துநர் ஏன் என்று உனக்குப் பதில் நான் சொல்லமுடியாது உன்னை எங்களின் பஸ்ஸில் ஏற்ற முடியாது நீ வேற பஸ்ஸில் போ கெதியாக கீழே இறங்கு என்று கூறியதுடன் பயணியைப் பஸ் வண்டியிலிருந்து நெஞ்சில் பிடித்துக் கீழே தள்ளி விட்டுள்ளார். இதனை நேரடியாக அவதானிக்க முடிந்துள்ளது. 

இதனை அவதானித்தவர்கள் சிலரும் பயணியும் பஸ் வண்டியின் சாரதியிடம் சென்று முறையிட்ட போது இந்த பஸ் வண்டியில் நடத்துநர் சொல்வதைப் பயணிகள் கேட்கவேண்டும் அவர் சொல்வதுதான், செய்வதுதான் சரி நாங்கள் எமது பஸ் வண்டியில் எங்களுக்கு விரும்பியவர்களைத்தான் ஏற்றுவோம். உங்களை ஏற்றுவதற்கு எமக்கு விருப்பமில்லை உங்களை நாங்கள் ஏற்றமாட்டம். இதை நீங்கள் யாரிடம் கூறினாலும் எம்மை எவரும் எதுவும் செய்ய முடியாது. இங்கு இப்போது நாங்கள் கூறுவதுதான் சட்டம் என்றும் கூறிவிட்டு அப்பயணியையும் அவருக்காகக் கதைக்கச் சென்ற பயணிகளையும் ஏற்றாமல் சென்றுள்ளார்கள். 

இவ்விடயம் குறித்து அவ்விடத்தில் நின்ற தனியார் (மினிபஸ்) போக்குவரத்துச் சங்கத்தின் பஸ் வண்டி நேரக் கட்டுப்பாட்டாளரிடம் பாதிக்கப்பட்ட பயணியாலும் ஏனைய பயணிகளாலும் முறையிடப்பட்டுள்ள போது இவ்விடயத்தை தமது சங்கத்திடம் எழுத்து மூலம் முறையிடுமாறும் அப்படிச் செய்தால்தான் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் கூறப்பட்டது.

பஸ் வண்டியிலிருந்து நெஞ்சில் பிடித்துக் கீழே தள்ளிவிட்ட பஸ் நடத்துநருக்கு 20 முதல் 24 வயதுக்கிடைப்பட்ட ஒரு இளைஞர் என்பதும் பயணிக்கு 53 வயது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும் என்பதுடன் அப்பயணியின் வயதைக்கூடக் கருத்தில் கொள்ளாது பயணி ஏதும் கதைக்காத நிலையில் ஏன் தம்பி இப்படிச் செய்கிறாய் என்று கேட்டதற்கு நீ.. நீ... உனக்கு நான் ஏன் என்று சொல்ல வேணுமோ நான் சொன்னால் நீ இறங்கிப் போவன் என்னை நீ ஏன் என்று கேள்வி கேட்கிறாய் என்று கூறியதுடன் இன்னும் ஏதோ கெட்ட வார்தைகளையும் பயன்படுத்தி ஏசி மனிதத் தன்மையற்ற முறையில் நடந்துகொண்டுள்ளார் என்பதை நேரடியாகவே அவதானிக்க முடிந்துள்ளது
« PREV
NEXT »

No comments