Latest News

August 17, 2016

தமிழ் அரசியல் கைதியை சங்கிலியால் கட்டி யாழில் சிகிச்சை!
by admin - 0

மனநிலை பாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டு, தமிழ் அரசியல் கைதியான இராசையா ஆனந்தராஜ் அனுராத புரத்திலிருந்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் கைவிலங்கிடப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையின் 7ஆவது வாட்டில் 19ஆம் இலக்கக் கட்டிலில் நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இராசையா ஆனந்தராஜ் தனது விடுதலைக்காக பல தடவைகள் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த கைதியை அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு மாற்ற அனுமதியளித்தமை தொடர்பாக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனைத் தொடர்புகொண்டு கேட்டபோது, குறித்த கைதியின் ஆரோக்கியம் தொடர்பாக தமிழ் அரசியல்வாதிகளின் கோரிக்கைக்கிணங்கவே இடமாற்றம் செய்யப்பட்டது எனத் தெரிவித்தார்.

மேலும், கைதி மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதால் அவர் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைபெறுவதற்கு மறுத்ததையடுத்து அவர் யாழ்ப்பாணத்திற்கு மாற்றப்பட்டார் எனவும் தெரிவித்தார்.

ஏன் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரை கைவிலங்குடன் வைத்து சிகிச்சையளிக்கிறீர்கள் எனக் கேட்டபோது, கைதி மிகவும் மோசமான மனநிலைக் குளப்பத்திலுள்ளார். ஆகையால் அவரை கைவிலங்குடனேயே வைத்தியசாலையிலும் அனுமதித்துள்ளோம் என்று தெரிவித்தார்.

இராசையா ஆனந்தராஜ் என்பவர் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தால் விடுதலைசெய்யப்பட்ட பின்னர் 2014ஆம் ஆண்டு மீண்டும் பயங்கரவாதச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த கைதியை சட்டவிரோதமாக சங்கிலியால் கட்டி சிகிச்சை வழங்கப்படுவதை மறைப்பதற்காகவே அவர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளாரென தெரிவிக்கப்படுகின்றது என்ற நம்பகமான தகவல் துளியத்திற்கு கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

« PREV
NEXT »

No comments