Latest News

August 22, 2016

ஆனையிறவிலிருந்து ஐ.நா. செயலகம் நோக்கிய நீதிக்கான போராட்டத்திற்கு பொது அமைப்புக்கள் பூரண ஆதரவு!
by admin - 0

தமிழர் தாயகத்தைச் சிங்கள பௌத்த மயமாக்கும் நோக்குடன் இராணுவப் பலத்துடன் இடம்பெற்று வரும் தமிழர் தாயக அபகரிப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு சர்வதேச நீதியை வலியுறுத்தியும் ஆனையிறவிலிருந்து கிளிநொச்சி ஐ.நா.செயலகம் வரை இடம்பெறவுள்ள நீதிக்கான போராட்டத்திற்கு பூரண ஆதரவை வழங்கிக் கலந்துகொள்ளவுள்ளதாக கிளிநொச்சி மாவட்டப் பொது அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
கடும்போக்கு இனவாதி மகிந்த ராஜபக்ஷவினால் தமிழ் மக்கள் மீது இரக்கமற்ற முறையில் நடத்தப்பட்ட இன அழிப்பு யுத்தத்திற்கு நீதி கோரியும் தமிழர்கள் நம்பி ஆதரித்த தற்போதைய நல்லாட்சிக்கான அரசு என்று தம்மைச் சொல்லிக்கொள்ளும் மைத்திரி அரசினால் தமிழர் தாயகப் பகுதிகளில் பௌத்த விகாரைகளை அமைத்தும் புத்தர் சிலைகளை நிறுவியும் தாயகப் பிரதேசங்களை பௌத்த சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகளை எதிர்த்தும் தமிழர்களின் உரிமையை வலியுறுத்தியும் எதிர் வரும் 22.08.2016 ஆம் திகதி திங்கட்கிழமை ஆனையிறவிலிருந்து கிளிநொச்சி ஐ.ந.செயலகம் வரை இடம்பெறவுள்ள நீதிக்கான நடை பயணத்திற்கு தமது பூரண ஆதவை வழங்கி அதில் பங்காளர்களாகக் கலந்துகொள்ளவுள்ளதாக கிளிநொச்சி மாவட்டப் பொது அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
தமிழர் தாயகப் பகுதிகளில் இராணுவ பலத்துடன் பௌத்த விகாரைகளை அமைத்தும் புத்தர் சிலைகளை நிறுவியும் தமிழர் தாயகப் பகுதிகளை பௌத்த சிங்கள மயமாக்கும் நோக்குடன் இடம்பெற்று வரும் அராஜககங்களைக் கண்டித்து எதிர்ப்புத் தெரிவித்து சர்வதேச நீதியை வலியுறுத்தி கிளிநொச்சி மாவட்டக் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் சமாசமும் பொது அமைப்புக்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள ஆனையிறவிலிருந்து கிளிநொச்சி ஐ.நா. செயலகம் வரையான நீதிக்கான நடை பயணத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது பூரண ஆதரவை வழங்கி அதில் கலந்துகொள்ளவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கிளிநொச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்திருந்தார். 
அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் களிநொச்சி மாவட்டச் செயலகமான அறிவகத்தில் இடம்பெற்ற இது தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்ட கிளிநொச்சி மாவட்டப் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ள சர்வதேச நீதியை வலியுறுத்தும் நீதிக்கான நடை பயணத்திற்குத் தாம் பூரண ஆதரவை வழங்கிக் கலந்துகொள்ளவுள்ளதாகத் தெரிவித்துள்ளன.
இக்கலந்துரையாடலில் வடமாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராசா, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை பரப்புச் செயலாளர் அ.வேழமாலிகிதன், கிளிநொச்சி மாவட்ட கிராம அபிவிருத்திச் சங்கங்களின் சமாசத் தலைவர் க.ஜெயக்குமார், மற்றும் கிளிநொச்சி மாவட்ட இந்து இளைஞர் பேரவை, கிளிநொச்சி இஸ்லாமிய அமைப்புக்கள் சார்பாக மௌலவி, கிளிநொச்சி மாவட்ட வர்த்தகர் சங்கம், கிளிநொச்சி  பொதுச்சந்தை வர்த்தகர் சங்கம், பரந்தன் வர்த்தகர் சங்கம், கிளிநொச்சி மாவட்ட பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம், கிளிநொச்சி மாவட்ட அழகக சங்கம், கிளிநொச்சி மாவட்ட விவசாய அமைப்புக்களின் சம்மேளனம், இரணைமடு கமக்கார அமைப்புக்களின் சம்மேளனம், கிளிநொச்சி மாவட்ட முன்பள்ளி ஆசிரியர் சங்கம், கிளிநொச்சி மாவட்ட நன்னீர் மீன்பிடியாளர் சங்கம், கிளிநொச்சி மாவட்ட தனியார் கல்வி நிலையங்களின் சங்கம் போன்ற பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தமது கருத்துக்களையும் தெரிவித்திருந்ததுடன் தமது பூரண ஆதரவை வழங்கி நீதிக்கான நடை பயணத்தில் கலந்துகொள்ளவுள்ளதாகத் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
« PREV
NEXT »

No comments