Latest News

July 23, 2016

பாதிக்கப்பட்ட தாயக மக்களுக்கான புலம்பெயர் உறவுகளின் பணிகள் மகத்தானவை!: வேழமாலிகிதன்.
by admin - 0

பாதிக்கப்பட்ட எமது தாயக மக்களுக்காக காலத்தின் தேவை அறிந்து முன்னெடுக்கப்படும் புலம்பெயர் தேசத்து எமது உறவுகளின் பணிகள் மகத்தானவை அவை என்றென்றும் பாராட்டப்பட வேண்டியவை, மறக்கப்பட முடியாதவை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் அ.வேழமாலிகிதன் சாந்தபுரம் மக்களுக்கான உதவி வழங்கும் நிகழ்வில் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் சாந்தபுரம் கிராமத்தில் நன்னீர் மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு வந்த மக்கள் இரணைமடுக்குளத்தினது புனரமைப்புப் பணிகளுக்காக நீர் திறந்து விடப்பட்ட நிலையில் தொழில் இழப்புக்குள்ளாகி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றார்கள். இவர்களுக்கான உலருணவுப் பொருட்களை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனது ஒழுங்குபடுத்தலில் புலம்பெயர் தேசத்து உறவுகளின் ரியூப் தமிழ் நிறுவனம் சாந்தபுரம் மக்களுக்கான உலருணவு உதவிப் பொருட்களை கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை சாந்தபுரம் பொதுநோக்கு மண்டபத்தில் வைத்து வழங்கியிருந்தது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு மக்களுக்கான உலருணவுப் பொருட்களை வழங்கிவைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் அருணாசலம் வேழமாலிகிதன் மக்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும்போது மேற்படி கூறியிருந்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில், 

எமது மக்கள் கடந்த கால கொடிய யுத்தங்களால் அனைதையும் இழந்த நிலையில் நலன்புரி நிலையங்களிலிருந்து தமது சொந்த இடங்களுக்கு வந்து உணவு சமைப்பதற்கான பொருட்கள் முதல்கொண்டு அனைத்தையுமே தேடிப் பெற்றுக்கொள்ள வேண்டியவர்களாகக் காணப்பட்ட போதிலும் எந்த நிலையிலும் மீண்டெழுவோம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை மூலம் தமது முயற்சியால் தமது வாழ்வாதரங்களை உருவாக்கி மீண்டு வருகின்றார்கள். 

சாந்தபுரம் கிராமத்தில் வசிக்கும் மக்களில் பலர் இரணைமடுக்குளத்தில் நன்னீர் மீன்பிடியைத் தமது பிரதான வாழ்வாதாரத் தொழிலாகக் கொண்டவர்கள். இம்முறை இரணைமடுக்குளத்தின் புனரமைப்பு வேலைகள் இடம்பெற்று வருகின்றமையால் இவர்களது தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு இவ்வேளையில் இப்படியான உலருணவுப் பொருட்களை வழங்கி இவர்களுக்குத் துணைபுரிந்த புலம்பெயர் தேசத்து எமது உறவுகளின் ரியூப் தமிழ் நிறுவனத்தினரது பணிகள் மிகவும் பாராட்டப்பட வேண்டியதாகக் காணப்படுகின்றது.
பேரழிவுகளைச் சந்தித்து மீண்டு வரும் எமது மக்கள் இப்படியான தவிர்க்க முடியாத காரணங்களால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படும்போது உடனடியாகவே மாற்றுவழிகளை உருவாக்கக்கூடிய வளங்களை ஒரு திட்டமிட்ட முறையில் தம்மிடம் வைத்திருக்க வேண்டும். எமது மக்கள் சேமிப்பதிலும் அதனைத் திட்டமிட்ட வகையில் பயன்படுத்துவதிலும் திறமையானவர்கள். 

சாந்தபுரம் என்னும் கிராமத்தில் வாழ்கின்ற மக்களின் வாழ்வாதாரங்கள் அனைத்தும் கடந்த கால யுத்தங்களால் சிதை;தழிக்கப்பட்ட நிலையில் தற்போது பல இன்னல்களுக்கும் மத்தியில் சீரான உதவித்திட்டங்கள் அற்ற நிலையில் தமது வாழ்வாதாரத்திற்காகப் போராடி வரும் இந்த மக்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் வழங்கப்பட்டது போன்ற உடனடி உதவித்திட்டங்கள் தேவையாகவுள்ளன. ஒரு திட்டமிட்ட அடிப்படையில் இந்த மக்களின் மீட்சிக்கான உதவித்திட்டங்கள் வழங்கப்பட வேண்டும். என அவர் மேலும் தெரிவித்தார்.

சாந்தபுரம் மக்களுக்கான உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர்களான ஜெயக்குமார், கதிர்மகன், ரியூப் தமிழ் நிறுவனப் பணிப்பாளர், பணியாளர்கள் மற்றும் சாந்தபுரம் நன்னீர் மீன்பிடிச் சங்கத் தலைவர், கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் எனப் பலரும் கலந்துகொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிப் பொருட்களை வழங்கிவைத்திருந்தார்கள்.
« PREV
NEXT »

No comments