Latest News

June 29, 2016

ஐ.நா பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அரசிற்கு வலியுறுத்தல்
by admin - 0

ஐ.நா
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் காரியாலயத்தினால் இலங்கை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்திற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த செப்ரெம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தின் முன்னேற்றங்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சயீட் அல் ஹுசைன், இன்று (புதன்கிழமை) பேரவையில் வாய்மூல அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ள நிலையில் அது தொடர்பில் வெளியாகிய அறிக்கையிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த பரிந்துரையின்படி, மனித மீறல்களில் ஈடுபடுவோர் தண்டிக்கப்படுவர் என்ற பொதுவான மற்றும் தெளிவான அறிவுறுத்தல் அனைத்து பாதுகாப்பு படைத் தரப்பினருக்கும் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பாதுகாப்பு படையினரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுமாயின் அது நிறைவு செய்யப்படும் வரை அவர்களை பணி இடைநீக்கம் செய்தல், பாதுகாப்பு துறை மறுசீரமைப்பு, உள்நாட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளில் இராணுவத்தின் தலையீடு குறித்த திட்டமொன்றை தயாரித்தல், இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்ட தனியார் காணிகளை மீண்டும் கையளித்தல், தீவிரவாதத்தை தடுத்தல் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு ஆகிய சட்டமூலங்களை சர்வதேச சட்ட விதிமுறைகளின்படி தயாரித்தல் ஆகிய விடயங்கள் இலங்கையினால் செயல்படுத்த வேண்டிய விடயங்களாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேவேளை, உள்ளூர் சுயாதீன பொறிமுறையை உள்ளடக்கிய விசேட கலப்பு நீதிமன்றம் ஸ்தாபிக்கப்பட்டு, அதில் சர்வதேச நீதிபதிகள் உள்ளிட்ட விசாரணையாளர்களை நியமித்தல் மற்றும் பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்த வழக்குகளை இங்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளல் என்பவும் ஐ.நா.வினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

« PREV
NEXT »

No comments