Latest News

June 18, 2016

தமிழர் தமிழராகவே இருங்கள்.! -ஈழத்து துரோணர்
by kavinthan Sivakurunathan - 0

தமிழர் தமிழராகவே இருங்கள்.!
ஈழத்து துரோணர்.!!

இந்த பூமி பந்தில் தோன்றிய மொழி எது என்று இந்த வெள்ளைக்கார பொண்ணு சொல்லுது.! 

இதே விடையையத்தை பல வெள்ளைக்காரத் துறைமாரும் இப்போதெல்லாம் சொல்லிவருகினம். 
ஆனால் எல்லோரும் சொல்லி  வைத்தால் போல தமிழ் தோன்றி 5000வருடங்களுக்கு மேல் தான் ஆகின்றது என்றே பதிவு செய்கின்றார்கள். 

அத்தோடு திராவிட குடும்பம் என்றே தமிழரை வகைப்படுத்துகின்றனர். இதன் மூலம் இந்திய நடுவனரசின் கடைக்கண் பார்வைக்கு அர்த்தம் கொடுக்கின்றனர் வரலாற்றாளர்கள்.இந்த சூட்சுமத்தை தமிழர் நன்கு  உணரவேண்டும்.!

இன்று வரை தமிழ் தோன்றி 20000 வருடங்கள் இருக்கலாம் என்பதை நிருபிப்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லாத போதும், தமிழ் தோன்றி 10000 வருடங்களுக்கு மேல் ஆகின்றது என்பதற்கு நேரடி ஆதாரங்கள் கிடைத்தபோதும், அதை வெளிவராது இந்திய நடுவனரசு தந்திரமாக மறைத்து வருகின்றது. 

அடுத்தது மிக முக்கியமானது.! 

ஒரு மொழியை வைத்தே ஒரு இனத்தை வகைப்படுத்துகின்றோம் அல்லது அடையாளப்படுத்துகின்றோம். உதாரணத்துக்கு ஆங்கிலம் பேசுபவர் ஆங்கிலேயர் பிரஞ்சு பேசபவர் பிரஞ்சுக்காரர் என்கிறோம். அதுபோல மூத்தகுடியான தமிழ் மொழி பேசுபவரை தமிழர் என்றே அடையாளப்படுத்த வேண்டும்.! 

ஆனால் திட்டமிட்டு வரலாற்றை மாற்றி, திராவிடர் என்றே தமிழர் வரலாறுகள் திரிக்கப்படுகின்றன/ திரிக்கப்பட்டுவிட்டன.! 

பூமியில் தோன்றிய முதல் மொழி தமிழ் என்றால் இந்த பூமியில் தோன்றிய முதல் மனித இனமும் தமிழன் என்பதே உண்மை. அப்படி இருக்கும் போது ஏன் எமக்கென்று ஒரு தேசம் இல்லாது போனது? 

கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம், போர்கலை, என எல்லா துறைகளுக்கும் அடி ஆதாரத்தை உருவாக்கியவன் தமிழனே.! 

ஆனால் இன்றைய தேதியில் எம் சொந்தங்கள் உயிரை பணயம் வைத்து கடல்வழியே ஏதிலிகளாக பயணப்பட்டபோது, இந்தோ அரசு துப்பாக்கி சூடு நடத்தி விரட்டுகின்றது. எம்மை  ஒரு சக மனிதனாகவே பார்க்க கூட இவர்கள் மறுக்கின்றார்கள்.! 

இதை ஒரு சாதாரண விடையமாக என்னால் கடந்து போக முடியவில்லை.! 

அந்த தாய்களின் கதறல்களும், எம் மழலைகளின் கண்ணீருக்கும், சர்வதேசத்தின் மெளனமே பதிலாகின்றது.! 

இதற்கெல்லாம் யார் காரணம்? 

நாம் எங்கே தவறு செய்தோம்? 

ஏன் எமக்கென்று ஒரு தேசம் இல்லாது போனது.? 

இதற்க்கான விடையை நாம் தேடவேண்டும்.!

அடுத்தது என்ன செய்யவேண்டும் என்ற பார்வையை எமக்குள் நாம் உருவாக்க வேண்டும்.! 

 "இஸ்ரேலியர்" தமது தேசத்தை அடைவதற்கு முன்னர் எப்படி இருந்தார்களோ? அந்த நிலையில் தான் இன்று தமிழர் நாம் இருக்கின்றோம்.! 

அவர்கள் தமது நாட்டுக்காக இரண்டாயிரம் வருடங்களாக தொடர்ந்து போராடி வெற்றி கண்டார்கள். அதற்கு அவர்கள் செய்தது தமது பிள்ளைகளுக்கு சந்ததி, சந்ததியாக தமக்கான தேசம் பற்றியும், அதன் தேவை பற்றியும், அவர்களின் மனதில் பதிய வைத்தார்கள். 

தங்கள் தேசத்தை அடைவதற்கு முன், உலகமெல்லாம் பரந்து வாழ்ந்தபோது, இஸ்ரேலியர் தமது சமூகத்தினரை சந்தித்து விடைபெறும் போது, வாழ்த்துக்கு பதிலாக "அடுத்த முறை இஸ்ரேலில் சந்திப்போம் என்பார்கள்" இப்படி ஒரு வருடமல்ல 2000வருடங்கள் நம்பிக்கையோடு காத்திருந்தார்கள். 

அவர்களிடமிருந்து இன்னொரு பாடமும் எமக்கிருக்கின்றது.! 


அதாவது அவர்கள் ஏதிலிகளாக புலம் பெயர்ந்த பின் காலம் செல்ல, செல்ல தமது தாய்மொழியை மற்ற மொழிகளுடன் கலந்து பேசிவந்தனர். 

அந்த நேரத்தில் தமக்கான தேசத்தை உருவாக்க, முனைப்பு காட்டி  போராடிக்கொண்டிருந்த "கரி பென் கானான்" என்பவர் எல்லா நாடுகளுக்கும் பயணப்பட்டு தங்கள் தாய்மொழி வகுப்புகளை இளம் தலைமுறைக்காக  உருவாக்கினார். 

அத்தோடு தாய் நாட்டு பெருமைகளை கூறி அந்த உணர்வுடன் அவர்களை வளர்த்தெடுத்தார். இதன் மூலமே அவர் அந்த நாட்டை உருவாக்க அடித்தளமிட்டு அதை செய்தும் காட்டினார்.

இதை தான் நாமும் செய்ய வேண்டும். தமிழனிடம் தமிழில் உரையாடுங்கள். ஆங்கிலத்தை பெருமையாக நினைக்காமல், தமிழுடன் பிறமொழியை கலக்காது உரையாடுங்கள். 

உங்கள் பிள்ளைகளுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் எமது தேசம் பற்றியும், மொழி பற்றியும், அதன் பெருமைமிகு வரலாறு பற்றியும், சந்ததி, சந்ததியாக அவர்களுக்கு சொல்லி கடத்துங்கள். 

அல்லது போனால் இன்னும் 50 ஆண்டுகளில் இலங்கையில் தமிழர் சிங்களவராக மாறி இருப்பர்.! 

100ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தமிழர் ஆங்கிலேயராக மாறியிருப்பர்.! 

இது போல ஒரு காணொளி 100ஆண்டுகளின் பின் வெளிவரும், இப்படி ஒரு மொழி பூமியில் இருந்ததாக.! 

தமிழர்களே உங்களை நீங்கள் தமிழர்களாகவே அடையாளப்படுத்துங்கள். திராவிடர் என்னும் முகமூடி வேண்டாம். நீங்கள் நீங்களாகவே இருங்கள். 

தேவையில்லாத விவாதங்களை தவிருங்கள். சாதி, மதம் வர்க்க வேறுபாடுகளை களைந்து தமிழராய் இணையுங்கள். 
வரட்டு கெளரவங்களை கைவிட்டு தமிழராய் இணைந்து போராடுங்கள். 

வெறும் 40லட்சம் கொண்ட ஈழத்தமிழராகிய நாம் 40000 மாவீரரையும் 4லட்சம் மக்களையும் பலிகொடுத்து போராடினோம். 
அதை விட பலமடங்கு விழுப்புண் அடைந்தனர். சிறுக சிறுக சேர்த்த பல்லாயிரம் கோடி சொத்துகளையும் இழந்து தமிழருக்கான அடையாளத்தை சர்வதேசத்தில் உருவாக்கியுள்ளான் ஈழத்தமிழன். 

நாம் சாதி, மத வேறுபாடு கழைந்து  "தமிழராக" போராடி எங்கள் பங்கை தமிழுக்கு செய்துள்ளோம்.! 

தாய் தமிழ் உறவுகளே  தயவு செய்து, வர்க்கவேறுபாடு களைந்து, முதலில் நீங்கள் தமிழராய் இணையுங்கள்.! அதுவே உங்கள் பாதைக்கான முதல் படி! 

ஏனெனில் நீங்கள்" உங்களை தமிழனாக உணராதவரை", உங்கள் பெருமையை நீங்கள் உணரப்போவதில்லை.!  
மனச்சுமையுடன் துரோணர்.!!
« PREV
NEXT »

No comments