Latest News

June 23, 2016

எம் தலையில் கொத்துக்குண்டு வீசியவரிலும் கொடியவர் நமரே!
by admin - 0

எம் தலையில் கொத்துக்குண்டு வீசியவரிலும் கொடியவர் நமரே!

வன்னியில் நடந்த போரில் கொத்துக் குண்டுகள் வீசப்பட்டன என்று பிரித்தானிய கார்டியன் பத்திரிகை உறுதி செய்து செய்திவெளியிட்டுள்ளது. 

உலக நாடுகளில் தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகளை வன்னி மண்ணில் வீசிய நாசகாரம் சாதாரணமானதன்று.

இந்த நாட்டின் பிரஜைகளான தமிழ் மக்களைக் காப்பாற்றவேண்டிய இலங்கை அரசாங்கம் தமிழர்களின் தலையில் கொத்துக் குண்டுகளைக் கொட்டிக் கொலைப் பாவம் செய்தது எனில், வன்னியில் நடந்த போரின்தாக்கம் எப்படியாக இருந்திருக்கும் என்பதை நாம் சொல்லி யாரும் தெரிய வேண்டிய அவசியம் இருக்கமாட்டாது.

இலங்கை பெளத்த நாடு என்று சொல்லிக்கொள்பவர்கள் தம்நாட்டு மக்களைக் கொல்வதற்குக் கொத்துக் குண்டுகளை வீசினர் எனில், தமிழ் இன அழிப்பின் வக்கிரம் எத்துணை தூரம் இருந்திருக்கும் என்பதை உணர்வதில் கடினம் இருக்கமுடியாது.

ஓ! சிங்களப் பேரினவாதிகளே! தமிழ் இனத்தின் தலையில் கொத்துக் குண்டுகளை வீசிவிட்டு, மின்சாரக் கதிரையில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை காப்பாற்றிவிட்டோம் என்று  ஜெனிவாவில் நின்று உலகின் முன் உரைக்கின்ற உங்களிடம் நீதி, நியாயம், நேர்மை,  தர்மம் ஏதேனும் இருக்கிறதா! என்ன?

ஒவ்வொரு பூரணையிலும் போதி மாதவனை  பூசிப்பதாகக் காட்டிக்கொள்ளும் உங்களின் செயலை அந்தப் புத்தபிரான் ஏற்றுக்கொள்வாரா? ஒரு கணம்  சிந்தித்துப் பாருங்கள்.

அட! இதை நாம் சொல்லும்போது ஒரு உண்மை புலப்படுகிறது. கொத்துக் குண்டுகளை எங்கள் உறவுகளின் தலைகளில் போட்ட உங்களைவிட, உங்களைக் காப்பாற்றுவதற்காக எங்கள் அரசியல் தலைமைகள் கடுமையாகப் பாடுபட்டனவே, உண்மையில் உங்களைவிட மிகக் கொடியவர்கள் எங்களை நம்பவைத்து எங்களுக்காகக் கதைப்பது போலப் பாசாங்கு செய்து உங்களைக் காப்பாற்றிய எங்கள் அரசியல் தலைவர்கள் என்றால் அது பிழையன்று.

பிரித்தானிய கார்டியன் பத்திரிகை சொல்கிறது வன்னிப்போரில் இலங்கைப் படைத்தரப்பு  கொத்துக் குண்டுகளை வீசியதாக.

ஆனால் லண்டன் சென்ற எங்கள் அரசியல் பிரதிநிதித்துவம்; இன அழிப்பு நடக்கவில்லை என்கிறது என்றால், நிலைமை என்ன என்பதைப் புரிய முடிகிறது அல்லவா?

என்ன செய்வது! எங்கள் ஊழ்வினைப் பயன் அதுவாயிற்று. எனினும் இறைவன் என் முன்வந்து என்ன வேண்டும்கேள் என்று என்னிடம்  கூறினால், 

தனிநாடு வேண்டும்; சர்வதேசப் போர்க்குற்ற விசாரணை வேண்டும்; இன அழிப்பு செய்தவர்களுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என் றெல்லாம் கேட்கமாட்டேன். மாறாக இறைவா! எங்களுக்கு வாய்த்துள்ள அரசியல் தலைமைபோல என் எதிரிக்குக் கூட ஒரு அரசியல் தலைமை வாய்த்துவிடக் கூடாது. இதை வரமாகத் தா என்று தான் கேட்பேன்.

ஏனென்றால் என் எதிரிக்கும் இப்படியொரு மோசத்தலைமை கிடைத்துவிடக் கூடாது. கிடைத்தால் அவனும் அவன் இனமும் மீளமுடியாத பாவம் செய்தவர்களாவர்.  
வலம்புரி
« PREV
NEXT »

No comments