Latest News

June 29, 2016

வடபோர் முனைப் பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு நிதி போதாமலுள்ளது! ஹலோரஸ்ற் உதவிப் பணிப்பாளர்- றொப்.
by admin - 0

போர் நடைபெற்ற வடபோர் முனைப் பகுதிகளான முகமாலை, அதனை அண்டிய பகுதிகளில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றுவதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வரும் அதேவேளை கண்ணிவெடிகளை அகற்றும் பணியாளர்களுக்கு வழங்குவதற்கான நிதி போதாமலுள்ளமையால் கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக பணியாளர்களை ஈடுபடுத்த முடியாத நிலை காணப்படுவதாக கண்ணிவெடிகளை அகற்றும் ஹலோரஸ்ற் மனிதாபிமான நிறுவனத்தின் இலங்கைக்கான உதவிப் பணிப்பாளர் றொப் கணிவெடிகள் அகற்றப்படாதமையால் மீள்குடியமர்த்தப்படாத நிலையிலுள்ள இந்திரபுரம் கிராம மக்கள் மத்தியில் தெரிவித்தார். 

பச்சிலைப்பள்ளிப் பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த வேம்பொடுகேணி கிராம அலுவலர் பிரிவின் கீழுள்ள இந்திரபுரம் கிராமத்தைச் சேர்ந்த 138 ஏக்கர் மக்கள் குடியிருப்புக் காணிகளில் போர் நடைபெற்ற காலங்களில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள் இன்னும் அகற்றப்படாதமையால் அங்குள்ள 150 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீளக்குடியமரமுடியாத நிலையில் நலன்புரிநிலையங்களிலும் உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் அவல வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார்கள். 
இந்திரபுரம் கிராமத்தில் 1986 ஆம் ஆண்டு முதல் குடியேறி வாழ்ந்துவந்த இக்கிராம மக்கள் யுத்தம் காரணமாக 1996 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து வெளியேறிய நிலையில் யுத்தம் முடிவடைந்துள்ளபோதிலும் இக்கிராமத்தில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள் அகற்றப்படாதமையால் தமது கிராமத்திற்குச் செல்ல முடியாதவர்களாகக் காணப்படுகின்றார்கள்.
இவ்விடயம் குறித்து கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் அவர்களது கவனத்திற்குக் கொண்டுவந்த இக்கிராம மக்கள் இக்கிராமத்தின் கண்ணிவெடியகற்றப்பட்டு வரும் பகுதியில் இன்றையதினம் மாலை 4.00 மணியளவில் ஒன்றுகூடி அங்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தன். 

இக்கலந்துரையாடலின் போது தமது பகுதியில் யுத்த காலங்களில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள் அகற்றப்படாதமையால் தாம் பல்வேறுபட்ட இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாகவும் தமது பகுதியிலுள்ள கண்ணிவெடிகளை அகற்றி தம்மை விரைவாகக் குடியமர்த்த ஆவன செய்யுமாறு மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனிடம் கேட்டுக்கொண்டார்கள்.

புதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் எமது தாயகப் பகுதிகளில் யுத்த காலங்களில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றி மக்களை மீளக்குடியமர்த்துவது பற்றி எமது கட்சியின் தலைவர் சம்பந்தன் ஐயா அவர்களும் கூடிய கவனம் செலுத்தியுள்ளார். இவ்விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்திற்கும் சர்வதேசத்தின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது. யுத்த காலங்களில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றி மக்களைக் குடியமர்த்துவதற்கு மேலும் உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் முன்வந்துள்ளன. அந்தவகையில் எமது மக்களின் காணிகளிலுள்ள கண்ணிவெடிகளை அகற்றி மக்களை மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.

இந்திரபுரம் கிராம மக்களுடனான சந்திப்பில் கண்ணிவெடி அகற்றும் மனிதாபிமான நிறுவனமான ஹலோரஸ்ற் நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிப்பணிப்பாளர் றொப், இநதிரபுரம் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ஜோர்ச், கிராம அலுவலர் த.நிமலரூபன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச அமைப்பாளர் கஜன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணித் தலைவர் சு.சுரேன் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
« PREV
NEXT »

No comments