Latest News

May 07, 2016

லண்டன் வரலாற்றில் மாற்றத்தை ஏற்படுத்தினார் புதிய மேயர் சதீக் கான்
by admin - 0

லண்டன் நகர மேயரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) நடைபெற்றிருந்தது. இதில் தொழிலாளர் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய சதீக் கான், கன்சர்வேட்டிவ் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஷக் கோல்ட்ஸ்மித் உட்பட மேலும் பல முக்கிய வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இந்நிலையில், குறித்த தேர்தலின் வாக்கெண்ணும் பணிகள் இன்று அதிகாலையுடன் முழுமையாக நிறைவடைந்தது. இந்நிலையில், இறுதி முடிவுகளின் படி, சதீக் கான் 13 இலட்சத்து 10 ஆயிரத்து 143 வாக்குகளைப் பெற்றுள்ளார். அவருக்கு அடுத்த படியாக, ஷக் கோல்ட்ஸ்மித் 9 இலட்சத்து 94 ஆயிரத்து 614 வாக்குகளையே பெற்றுள்ளார்.

எனவே, லண்டன் வரலாற்றில் மாற்றத்துடனான ஒரு வெற்றியைப் பெற்று உலகின் புகழ்மிக்க நகரின் மேயராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சதீக் கானுக்கு அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயர் பில் டி பிலஸியோ, தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

சதீக் கான் தனது வெற்றியின் பின்னர் முதல் முறையாக கருத்துத் தெரிவிக்கும்பொழுது, “லண்டன் நகருக்கு எனது நன்றிகள். உலகின் புகழ்மிக்க நகராக லண்டன் இருப்பதில் பெரிதும் பெருமையடைகின்றேன். மக்கள் என்மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்பும், நம்பிக்கையுமே என்னை இன்று இவ்விடத்திற்கு கொண்டுவந்துள்ளது. அதற்கு நான் எப்பொழுதும் நன்றி உடையவனாக இருப்பேன்.

நான் லண்டன் நகருக்கு தொலைவில் உள்ள ஒரு பிரதேசத்திலேயே வளர்ந்து வந்தேன். எனினும் என்னைப் போன்று ஒருவர் லண்டன் நகர மேயராக தெரிவாவார் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை. எனவே சாத்தியமற்ற விடயம் என்று இருந்த ஒன்றை, சாத்தியமடையச் செய்தமைக்காக நான் ஒவ்வொரு லண்டன் வாசிகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எனது வெற்றியைத் தொடர்ந்து லண்டன் நகரின் முன்னேற்றத்திற்காகவும், புதிய சிறந்த தொழில்வாய்ப்புக்கள் உட்பட நகரின் அபிவிருத்திக்காகவும் நான் சிறந்த முறையில் செயற்படுவேன். நகரின் இலக்குகளை அடைவதற்கு சிறந்த முறையில் செயற்படுவேன்” என்றும் அவர் தெரிவித்தார்
« PREV
NEXT »

No comments