Latest News

March 14, 2016

யோஷித ராஜபக்ஷவுக்கு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியது!
by Unknown - 0

இலங்கையில் கறுப்பு பண மோசடிக் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட 4 சந்தேகநபர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட சந்தேகநபர்கள் கடந்த ஜனவரி 30-ம் திகதி கடுவலை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், அவர்களை பிணையில் விடுவிக்கக் கோரி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி, சந்தேக நபர்களை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைப்பதற்கு நியாயமான காரணங்கள் இல்லை என்று கூறினார்.

இதன்படி, யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கிய நீதிபதி, அவர்கள் விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

நீதிமன்றத்தின் அனுமதியின்றி சந்தேகநபர்கள் வெளிநாடு செல்ல முடியாதென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு விசாரணைகள் முடிவடைந்த பின்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

தற்போது, நாட்டில் திடிரென ஏற்படும் மின்சார தடைக்கு நாசகார வேலையே காரணம் என்று கூறப்படுவது பற்றி அவரிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

இது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டு என்று கூறிய மகிந்த ராஜபக்ஷ, அரசாங்கத்தின் பலவீனம் இதன்மூலம் வெளிப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதனிடையே, மகிந்த ராஜபக்ஷவின் மூத்த மகனான நாமல் ராஜபக்ஷ மீதும் கறுப்பு பண மோசடிக் குற்றச்சாட்டில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments