Latest News

February 23, 2016

ஜெ. வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமணம் நூற்றாண்டிலேயே பிரமாண்டமானது- கர்நாடகா; நாளையும் விசாரணை..
by admin - 0

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக இருந்த சுதாகரனின் திருமணம்தான் நூற்றாண்டிலேயே மிக பிரமாண்டமானது என்று
உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதிட்டார். இந்த வழக்கின் விசாரணை நாளையும் தொடர்ந்து நடைபெற உள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு, திமுக பொதுச்செயலர் அன்பழகன் உள்ளிட்டோர் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஒத்திவைக்கக் கோரிய ஜெயலலிதா தரப்பு அவகாசத்தை நீதிபதிகள் நிராகரித்து கர்நாடகா அரசு இறுதிவாதத்தைத் தொடங்க அனுமதித்தனர். இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு எதிராக கர்நாடகா அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே தமது வாதங்களை முன்வைத்தார்.


தவே தமது வாதத்தில், ஜெயலலிதாவின் சொத்துகளை கர்நாடகா உயர்நீதிமன்றம் மதிப்பிட்டதில் பிழைகள் உள்ளன; ஜெயலலிதா உள்ளிட்டோர் சதிச் செயலில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை விசாரணை நீதிமன்றம் நிரூபித்திருந்தும் கண்டுகொள்ளாமல் மேம்போக்காக விசாரித்து ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுதலை செய்துவிட்டது என்றார். அத்துடன் நீதிபதி குமாரசாமி ஓய்வு பெறும் அவசரத்தில் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பை பிழையாகப் போட்டுவிட்டார் போல... சட்டவிரோதமாக சேர்த்த சொத்துகளை மறைப்பதற்காக ஜெயலலிதா உள்ளிட்டோர் பல நிறுவனங்களை உருவாக்கினர். இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள அந்த நிறுவனங்கள் அனைத்தும் இந்த நோக்கத்துக்காகவே உருவாக்கப்பட்டன. ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக இருந்த சுதாகரனின் திருமணம்தான் இந்த நூற்றாண்டின் மிகப் பிரமாண்டமானது. நமது எம்ஜிஆர் நாளேட்டுக்காக ரூ14 கோடி சந்தா சேர்த்தாக கூறப்படுவதை நம்பவே முடியவில்லை. இந்த சந்தா முறைகேடாக சேர்க்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா ஊதியமாக வாங்கியது ரூ1தான்... அப்படி ரூ1-ஐ ஊதியமாக வாங்கிய ஜெயலலிதா, இத்தனை கோடி சொத்துகளை வாங்கிக் குவிக்க எங்கிருந்து பணம் வந்தது? என்றார் துஷ்யந்த் தவே. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சுதாகரன் திருமணம் குறித்து கவலைப்படுவதற்கு எதுவும் இல்லையே என்றனர். பின்னர் இந்த வழக்கின் விசாரணையை நாளை பகல் 2 மணிக்கு ஒத்திவைப்பதாகவும் வேறு வழக்குகளைக் காரணம் காட்டி எந்த ஒரு தரப்பும் நாளைய விசாரணையைத் தவிர்க்கக் கூடாது எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். 2-வது நாளாக நாளை ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு எதிராக கர்நாடகா அரசு சார்பில் துஷ்யந்த் தவே தமது வாதங்களை தொடருவார்.


« PREV
NEXT »

No comments