Latest News

December 24, 2015

லெப்.கேணல்.அப்பையா அண்ணை.! எமது போராட்டத்தின் ஆரம்பத் தீப்பொறி..!! ஈழத்து துரோணர்...!!!
by admin - 0


லெப்.கேணல்.அப்பையா அண்ணை.! இந்த பெயரை தவிர்த்து, தமிழீழத்தின் ஆயுதப்போராட்ட வரலாற்றை யாராலும் எழுதிவிட முடியாது. 1970களின் இறுதியில் தலைவருடன் இணைந்து, இந்த போராட்டத்தை வளர்த்தவர்களில், அப்பையா அண்ணையின் பங்கும் அளப்பெரியது.
ஈழத்து துரோணர்

அவர் இந்த போராட்டத்தின் ஒரு வேர் என்பதாலோ என்னவோ, அவரது முன்னைய செயல்பாடோ அல்லது அவரையோ பெரிதாக வெளியில் தெரியாது. அதை அவர் விரும்பியதும் இல்லை.!
ஆரம்பத்தில் இருந்தே ஒரு கெரிலா போராளியாக தனது பயணத்தை ஆரம்பித்தவர், 24/12/1997 அன்று தனது வாழ்வை முடிக்கும் போது, புலிகளமைப்பு மிகப்பெரும் இராணுவமாக வளர்ச்சியை பெற்றிருந்த போதும், கடைசிவரை ஒரு கெரிலாப் போராளியாகவே, எந்தவித ஆடம்பரமோ, பகட்டோ இல்லாது தன் வாழ்கையை எமக்கு ஒரு பாடமாக்கி மறைந்திருந்தார்.

1980களின் தொடக்கம் அது. தலைவருக்கும் போராளிகளுக்கும் பட்டறிவுக்காலம். தாங்களாகவே தாக்குதல், மற்றும் பயிற்சிகளை கற்று வந்தனர். அதன் ஒரு அங்கமாக சுயமாக வெடிகுண்டுகளை தயாரித்து இயக்கும் பொறிமுறைகளை அன்று அப்பையாண்ணையே உருவாக்கி இருந்தார்.

ஆம், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பகால வெடிகுண்டு நிபுணர் அப்பையாண்ணை தான். பொன்னாலையில் வைத்து கடற்படையினர் மீதான கண்ணிவெடித் தாக்குதல், மற்றும் 1983இன் திருநெல்வேலி கண்ணிவெடித் தாக்குதலின், கிடங்கு கிண்டி கண்ணிவெடியை மண்ணில் புதைத்து வெடிக்கும் நிலைவரை உருவாக்கி, அந்த வெற்றிக்கு வித்திட்டவர் அப்பையாண்ணை தான்.

அத்தோடு நின்றுவிடாது 1980களின் இறுதியில், ஆயுத தொழிற்சாலைகளை நிறுவ, பெரும் பங்காற்றினார். 1980களின் இருந்து 1990வரை அப்பையாண்ணையின், வெடிகுண்டு உற்பத்திகளான பண்டிக்குட்டி, தேங்காய், TNT குண்டில் செய்த புல்சுவிச் (இப்படித்தான் போராளிகள் அழைப்பார்கள்) எனப் பல உற்பத்திகள் எதிரிகளுக்கு சிம்ம சொர்ப்பனமாக இருந்தது. புலிகளின் சுயமாக உலங்குவானூர்தி ஒன்றை உருவாக்கும் முயற்சியிலும் இவரின் பங்கும் உள்ளது.

எனக்கும் அப்பையாண்ணைக்குமான உறவு மணலாற்றில் இருக்கும் போதே தொடங்கியிருந்தது. அப்பையாண்ணை எப்போதும் அமைதியாக இருப்பார், அவர் கதைக்கும் போது மெதுவாகவே கதைப்பார், சிறிய போராளியானாலும் அவர்களை மிகவும் மரியாதையாகவே விழித்து உரையாடுவார். இது தான் அப்பையாண்ணை.!

அந்த காலங்களில் நாங்கள் மிக வயது குறைந்த போராளிகள், அதனால் எல்லா தளபதிகளாலும் அன்பாக பராமரிக்கப் பட்டோம். இந்திய இராணுவத்துடன் போர் உச்சம் பெற்றிருந்த நேரம், புலிகலமைப்பில் சிலநூறு போராளிகளே அங்கிருந்தனர்.
ஈழத்து துரோணர்

அப்போதெல்லாம் உணவுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவியது. பெரும்பாலும் பருப்பும், சோறும் தான். ஆனால், ஒரு பருக்கை கூட மிச்சம் விடாது சாப்பிடுவோம். அவ்வளவு பசியில், அளவு சாப்பாடு தான். அதனால் அப்பையாண்ணையின் பராமரிப்பின் கீழ், நீண்டதூர பயணங்கள் செல்லும் போராளிகளுக்கு கொடுப்பதற்காக பிஸ்கட், பழரின், மாமைட், சிக்கன்சூப்கட்டி போறவற்றை அவர் பங்கரில் வைத்திருப்பார்.

அவருக்கு தெரியாமல் சில போராளிகள் அதைத்திருடுவார்கள். அதில் நாங்களும் விதிவிலக்கல்ல. இந்த கொள்ளையில் ஈடுபடுவதற்கு, ஒரு முகாமை தாக்குவதற்கு திட்டம் போடுவது போல எம்மால் திட்டம் போடப்படும்.

ஏனெனில் அந்த பொருட்களை சுற்றி அப்பையாண்ணையின் புள்சுவிச் இருக்கும். ( இது ஒரு அப்பையாண்ணையின் வெடிகுண்டு பொறிமுறை தவறி அதில் நாம் தொட்டால் அது வெடித்து விடும்) அதுவெடித்ததும் அவர்கள் அப்பையாண்ணையால் பிடிக்கப் பட்டு தண்டனை வழங்கப்படும்.
தண்டனை பெற்றாலும் அந்த முயற்சியை நாம் கைவிடுவதில்லை. இப்போது நினைத்தாலும் அந்த நாட்கள் மீண்டும் வராதா என்னும் ஏக்கம் குடிகொள்கின்றது. அதன் பின் 1990ம் ஆண்டு ஊர் திரும்பிய பின் மானிப்பையில் அவரது வீட்டுக்கு சென்றிருந்தேன்.

அங்கு அவரது சிறிய குளிர்பான உற்பத்தியையுடன், பல்பொடியும் உற்பத்தி செய்து, அதை கடைகளுக்கு போட்டு, தனது செலவுக்கு எடுத்தது போக, மிகுதியை ரஞ்சித் அண்ணையிடம் (பிரிகேடியர்.தமிலேந்தி) கொண்டு சென்று கொடுப்பார். தனது இறுதிக்காலம் வரை அமைப்பிடம் இருந்து எந்த உதவியும் பெறாது வாழ்ந்த போராளி.

இப்படியே நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவரது வீட்டுக்கு சென்று, அன்ரியின் கையால் தேசிக்காய் தண்ணியும் குடித்துவிட்டு வருவேன். இப்படியான நேரமொன்றில் தான் எதிரியின் பிரதேசத்தில் வைத்து காயமடைந்தமையால், யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருந்தேன்.

பெரும் இரத்தப்பெருக்கு காரணமாக சிலநாட்கள் உணர்வில்லாது இருந்துவிட்டு நான் கண்விழித்தபோது, அப்பையாண்ணை என்னை பார்க்க வந்திருந்தார். நலம் விசாரித்த பின் போகும் போது ஒரு மாமைட் போத்தலை தந்துவிட்டு சென்றிருந்தார். என்னால் நம்பமுடியவில்லை, எனக்கோ ஆச்சரியம்.!

ஒரு சதத்தை தன்னும் தேவை இல்லாமல் செலவழிக்காத போராளி. காயமடையும் போராளிகளுக்கு தேவையான சத்து நிறைந்த உணவுகளும், பாணங்களும் நேரம் தவறாமல் எமக்கு வந்து விடும். அப்படி இருக்கும் போது அவர் ஏன் இதை கொண்டு வந்து தந்தார்?
அப்போது தான், காட்டில் வைத்து மாமைட் எடுத்து நாங்கள் பிடிபட்டது நினைவுக்கு வந்தது. அவரும் அதை மறக்காது, குசும்பாக அதை தந்து விட்டு சென்றிருந்தார். என்னையறியாமல் அந்த வேதனையிலும், புன்னகைதான் வந்தது.
இப்படியே காலம் சுழன்று ஊர் வரும் போதெல்லாம் அப்பையாண்ணையையும் ஒரு எட்டு பார்ப்பது வழமை. இறுதியாக இடப்பெயர்வின் பின்னர் மல்லாவி 5ம்யுனிட் பகுதியில் குமாரின் ( லெப்.கேணல்.செல்வக்குமார்) முகாமிற்கு அருகில் இருந்தார். குமாரை சந்திக்க செல்லும் போதெல்லாம், அப்பையாண்ணையையும் சந்திக்க தவறவில்லை.
1997 இன் இறுதி ஜெயசிக்கிறு சண்டை நேரம், மன்னாரில் இருந்து தான் மக்கள் தமது வவுனியாவிற்கான போக்கு வாரத்தில் இருந்தனர். 24/12/1997 அன்று யாழில் இருந்து வரும் தனது மகளைக்கூட்டி வருவதற்காக மாலை 3.00மணிபோல் தனது ஹோண்டா சுப்பர் கப் 90 உந்துருளியில் மன்னார் நோக்கி பயணமானார். அதன் பின் அவர் மாயமாகி விட்டிருந்தார்.
இதை அறிந்த புலிகள், தலைவரின் கட்டளைக்கு இணங்க பெரும் தேடுதல் ஒன்றை மேற்கொண்டனர்.

ஆனபோதும் பள்ளமடுவரை அவரை சிலர் கண்டிருந்தனர். ஆக, அதற்கு பின்னர் தான் அவரை கடத்தி இருந்தனர்.

சில காலங்களின் பின் புலனாய்வுத்தகவல் மூலம் அவர் கொல்லப்பட்டதை புலிகள் உறுதிப்படுத்தினர். உண்மையில் அந்த நேரத்தில் வயோதிகம் காரணமாக இயக்க செயல்பாட்டில் இருந்து,அவர் ஓய்வில் இருந்த நேரம், எதிரி தனது வீரத்தை அந்த முதியவரிடம் காட்டி இருந்தான்.

அன்று தமிழரின் வீர வரலாற்றின் ஒரு பக்கம்,எம்மை விட்டு போயிருந்தது. தலைவராலும், போராளிகளாலும் மிகவும் நேசிக்கப்பட்ட போராளி எம்மை விட்டு போன போதும், அவர் நினைவுகள் எல்லோர் மனங்களிலும் நிச்சையம் வாழும். அவர் என்னை தனது பிள்ளை போலவே பார்த்தார்! நான் அவரை எனது "அப்பையா"போலவே பார்த்தேன்.!!
கண்ணீருடன் துரோணர்..!!!
« PREV
NEXT »

No comments