Latest News

November 04, 2015

உள்ளக விசாரணை தீர்வை பெற்றுக்கொடுக்காது : ஜப்பான் தூதுவரிடம் சி.வி தெரிவிப்பு
by admin - 0

தற்போது காணப்படும் சட்டங்கள் நாட்டிற்கு ஏற்புடையதாக இல்லாத காரணத்தால் உள்ளக விசாரணை தமிழ் மக்களுக்கு நன்மை பயக்காதென தாம் ஜப்பான் தூதுவரிடம் தெரிவித்ததாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஜப்பான் தூதுவர் கெனிச்சி சுகனுமாவை சந்தித்து கலந்துரையாடிய வடக்கு முதல்வர், அங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து ஊடகங்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.

‘ஜப்பான் தூதுவர் யாழ் வந்ததன் பிரதான நோக்கம் ஜெய்க்கா செயற்திட்டத்தை பற்றி அறிந்து செல்லவேயாகும். வட மாகாணத்திலே வெளிநாட்டு நிறுவனங்களும், வெளிநாட்டு அரசும் பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுக்கும் தரவுகள் முழுமையாக எமக்கு தரப்படுவதில்லை. நேரடியாக மத்திய மாகாணத்திடம் செல்கின்றது. அதனால் நாட்டின் மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து செயற்திட்டங்களை தீட்டினால் அது மக்களுக்கு பயனுள்ளதாக அமையுமென்ற கருத்தை ஜப்பான் தூதுவரிடம் முன்வைத்தேன்.

நல்லெண்ணத்தை வெளியில் இருந்து கொண்டு வந்து எங்களிடம் திணிக்க முடியாது. அதனை எடுத்துக் காட்டக்கூடியவாறு செயற்படுத்த வேண்டும். உதாரணம் சிறையில் வாடும் 300, 400 பேரை விடுவிப்பதற்கு அரசு எவ்வளவு கஷ்டப்படுகிறது. சிறைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பில் தடங்கல், தாமதம் எதற்கு? வியப்பாக இருக்கிறது. இவ்வாறான சிறிய விடயங்களில் விட்டுக்கொடுத்தால் தான் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். அதைவிடுத்து நல்லிணக்கம் என்று பேசுவதில் எதுவித அர்த்தமும் இல்லை என்றும் அவரிடம் குறிப்பிட்டேன்.

இதன்போது, நாட்டிலே தமிழ் நீதிபதிகள் இல்லையா என்று ஜப்பான் தூதுவர் கேள்வியெழுப்பினார். அதற்கு தமிழ் நீதிபதிகள் நாட்டில் குறைவுதான், ஆனால் அவர்கள் சரியானதொரு தீர்மானத்திற்கு வருவார்கள் என்று கூறமுடியாது. ஏனென்றால் சிலவேளைகளில் அவர்களையும் பயம் பீடிக்கிறது. ஏதாவது ஒன்றைக்கூறி பின்விளைவுகளில் மாட்டிவிடுவோம் என்ற கருத்துக்கூட சிறுபான்மை நீதிபதிகளிடம் இருக்கின்றது. 

ஆகவே பக்கர்சார்பில்லாத நீதிபதிகளை வெளியில் இருந்து கொண்டுவந்தால்தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கலாம். அவ்வாறு நீதியைப் பெற்றுக்கொடுக்காதவிடத்து மக்களின் ஆத்திரம் சுமூகமான சூழலை ஏற்படுத்தாது என்று அவரிடம் குறிப்பிட்டேன்’ என்றார்.

« PREV
NEXT »

No comments