Latest News

November 15, 2015

தொடர்ந்து கொட்டும் மழையால் யாழ்ப்பாணத்தில் 9 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு!
by admin - 0

 தொடர்ந்து கொட்டும் மழையால் யாழ்ப்பாணத்தில் 9 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு!

இன்று மூன்றாவது நாளாக கொட்டி வரும் மழையினால், யாழ். மாவட்டத்தில் மட்டும் 9,051 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கான சமைத்த உணவுகள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஏற்பாட்டில் வழங்கப்பட்டு வருகின்றது.

இன்று மூன்றாவது நாளாக கொட்டி வரும் மழையினால், யாழ். மாவட்டத்தில் மட்டும் 9,051 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கான சமைத்த உணவுகள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஏற்பாட்டில் வழங்கப்பட்டு வருகின்றது.

அத்துடன் தரப்பால் மற்றும் நிலவிரிப்புக்களை அந்தந்த பிரதேச செயலாளர்களிடம் தகவல் திரட்டி வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் கூறினார்.

இதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக 1506 குடும்பங்களைச் சேர்ந்த 5946 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குச்சவௌி பிரதேசத்தில் பாலர் பாடசாலையொன்றில் 40 குடும்பங்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அம் மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார குறிப்பிட்டார். குச்சவௌி, கிண்ணியா, பட்டினமும் சூழலும் பிரதேசங்களில் வௌ்ளநீர் தேங்கி நிற்பதால் பிரதேச சபைகளின் ஊடாக பெக்கோ இயந்திரங்களை பயன்படுத்தி வடிகான்களை வெட்டி நீரை வடியச் செய்யுமாறும் பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அவர் இங்கு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மன்னார் தீவு மற்றும் பெருநிலப்பரப்பில் உள்ள பல கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. இன்று காலை முதல் மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக கடும் மழை பெய்து வருகின்றது. இதனால் மாவட்டத்தின் பல கிராமங்களில் உள்ள வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் என்பன வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.

மன்னார்-யாழ்ப்பாணம் ஏ-32 பிரதான வீதியின் பாலியாற்று பகுதியில் உள்ள பாலத்தை மேவி சுமார் 5 அடிக்கு மேலாக வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதினால் போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளங்குளம் பகுதியில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 24 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் அங்குள்ள கோவில் ஒன்றில் தஞ்சமடைந்துள்ளனர். இதே வேளை பாலியாறு பெருக்கொடுத்துள்ளமையினால் பாலியாற்று பகுதியில் வாழ்ந்து வரும் 25 குடும்பங்களைச் சேர்ந்த 98 பேர் பாதிக்கப்பட்டு உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

இதே வேளை சிலாபத்துறை-புத்தளம் பிரதான வீதியில் வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளமையினால் இளவங்குளம் வீதியூடான போக்குவரத்துக்களும் பாதிப்படைந்துள்ளது. அனுராதபுரம்- நாச்சியாதீவு குளத்தின் அனைத்து அனைக்கட்டுகளும் திறந்து விடப்பட்டுள்ளமையினால் மல்வத்து ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.இதனால் மடுக்கரை அச்சங்குளம், இராசமடு ஆகிய கிராமங்களிலும் தற்பொது வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தற்போது மன்னார் தீவுப்பகுதிக்குள் உள்ள பல கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.

இதே வேளை தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக மூர்வீதி, உப்புக்குளம், பள்ளிமுனை, நலவன்வாடி, பொரியகடை, சின்னக்கடை, சௌத்பார், சாந்திபுரம், பனங்கட்டுக்கோட்டு, எமிழ் நகர், எழுத்தூர் ஆகிய கிராமங்களிலும் மழை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.தற்போது வெள்ள நீரை கடலுக்கு அனுப்பும் நடவடிக்கைகளில் மக்களும் அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் நாதன் திட்டம், உழவனூர், புன்னைநீராவி ஆகிய கிராம மக்களின் தற்காலிக வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதில் நாதன் திட்டத்தில் வசிக்கும் 367 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்களில் 342 குடும்பங்கள் தற்காலிகக் கொட்டில்களிலேயே 6 வருடங்களாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் தற்காலிக வீடுகள் மழையால் பதிப்படைந்தும், உடைந்தும் வெள்ள நீர் உட்சென்றும் காணப்படுவதுடன், இவர்கள் தற்போது தென்னிந்திய திருச்சபை முன்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு உழவனூரை சேர்ந்த 225 குடும்பங்களும் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், இவர்களிலும் 206 பேர் தற்காலிக வீடுகளில் நீர் புகுந்து பாதிப்படைந்தே தம்பிராசபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று புன்னைநீராவியை சேர்ந்த 25 குடும்பங்கள் முற்றாக பாதிப்படைந்து புன்னைநிராவி மஹா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான உணவுகளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவியுடன் சமைத்தே சாப்பிட்டு வருகின்றனர்.
« PREV
NEXT »

No comments