Latest News

October 05, 2015

ஐ.நா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த தவறினால் பின்விளைவுகள் உண்டு: சுமந்திரன்
by Unknown - 0

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் இலங்கையின் போர்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் பற்றி விசாரணை செய்வதற்கு அமெரிக்காவினால் தீர்மானம் கொண்டுவரப்பட்டிருந்தது. இந்தத் தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்டு கையெழுத்திட்டதனால் வாக்கெடுப்பின்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை பற்றியும் அது ஏற்படுத்தப் போகும் தாக்கங்கள் பற்றியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் பற்றி அவர் குறிப்பிடுகையில், கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை அடுத்து ஐக்கிய நாடுகளின் மனிதஉரிமைகள் உயர்ஸ்தானிகர் நடத்திய சர்வதேச விசாரணை அறிக்கையில் இருந்து வந்துள்ள பரிந்துரைகளை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு தீர்மானமாக இது அமைந்துள்ளது.   இதனை 38 நாடுகள் வழிமொழிந்துள்ளன.

2002 ஆம் ஆண்டில் இருந்து 2011 ஆம் ஆண்டுவரையான 9 வருட காலப்பகுதியில் இலங்கையில் மனிதஉரிமை மீறல் பற்றிய ஐக்கிய நாடுகளின் மனிதஉரிமைகள் உயர்ஸ்தானிகரின் விசாரணை அறிக்கையில், யுத்தக் குற்றங்களும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு விரோதமான குற்றங்களும் இழைக்கப்பட்டதற்கான சான்றுகள் இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து பல பரிந்துரைகள் சொல்லப்பட்டுள்ளன.அதில் முக்கியமானவை இந்தக் குற்றங்களுக்கு பொறுப்பானவர்கள் ஒரு குற்றவியல் நீதிமன்றத்துக்கு முன்பாக நிறுத்தப்பட்டு அவர்களுக்கான தண்டனை கொடுக்கப்படவேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள சட்டப்பொறிமுறை நம்பகத்தன்மை இழந்துவிட்ட காரணத்தினால் பொதுநலவாய நாடுகளின் விசாரணையாளர்கள், வெளிநாட்டு நீதிபதிகள, வழக்குத் தொடுனர்கள் பங்குபெறும் ஒரு நீதிமன்றம் அமைக்கப்பட்டு நீதிவிசாரணை செய்யப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகையினால் இது ஒரு முன்னேற்றகரமான முதல்படிக்கல்லாகும். அத்துடன் இலங்கை அரசாங்கம் இதற்கு இறங்கி வந்ததும் ஒரு முக்கியமான விடயம். மேலும் இராணுவம் மக்களுக்கு நிலங்களை  திருப்பிக் கொடுக்கவேண்டும் என்பதும், காணாமல் போனவர்களை கண்டறிதல், மற்றும் பயங்கரவாத தடுப்புச் சட்டம் நீக்கப்படுதல், தடுப்புக் காவலில் இருப்பவர்களை விடுதலை செய்தல், நிரந்தரமான அரசியல்தீர்வு முதலான பரிந்துரைகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இலங்கை அரசாங்கம் இவற்றை செய்யவேண்டிய நிர்பந்தம் உண்டு. செய்யத் தவறினால் அவற்றுக்கான பின்விளைவுகள் உண்டு. அதனை செய்விக்கின்ற செயற்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகிய நாங்கள் அதற்கு முழுமையான ஆதரவினை வழங்கி ஏற்பட்டுள்ள இந்த சர்வதேச சந்தர்ப்பத்தினை பயன்படுத்த வேண்டும் என இலங்கைக்கும் உலகத்துக்கும் கூறியுள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments