Latest News

October 14, 2015

இலங்கை சிறையில் உள்ள 87 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்
by admin - 0

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 87 தமிழக மீனவர்கள், பறிமுதல் செய்யப்பட்ட 39 படகுகளை விடுவிக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கடந்த 12-ம் தேதி ராமேஸ்வரம் பகுதியிலிருந்து மீன் பிடிக்கச் சென்ற 24 அப்பாவி மீனவர்களை கைது செய்ததுடன் அவர்களின் 4 படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது. இது குறித்து 13-ம் தேதி தங்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன்.

இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் இன்று (14-ம் தேதி) நாகப்பட்டினம் பகுதியிலிருந்து மீன் பிடிக்கச் சென்ற 9 அப்பாவி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த 87 மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ளனர். அவர்களுக்குச் சொந்தமான 39 மீன்படி படகுகளும் இலங்கை வசம் உள்ளன. பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால் அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், கொடுமைப்படுத்தப்படுவதும் அவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பறிக்கும் செயலாகும். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரின் தாக்குதல்கள் தொடர்வது ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும்.

எனவே, இந்தப் பிரச்சினையை உடனடியாக இலங்கை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று ராஜதந்திர நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும். அரசு ரீதியாக தலையிட்டு 87 மீனவர்கள், 39 படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுபோன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த உடனடி நடவடிக்கை எடுக்குமாறு இலங்கையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும். இந்தப் பிரச்சினையில் தாங்கள் நேரடியாக தலையிட்டு உடனடி தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
« PREV
NEXT »

No comments