Latest News

September 23, 2015

மாணவர் சக்தியே ஒரு இனத்தின் விடுதலை மூச்சு!!
by அகலினியன் - 0

மாணவர் சக்தியே ஒரு இனத்தின் விடுதலை மூச்சு!!


மாணவர் சக்தியே ஒரு இனத்தின் விடுதலை மூச்சு, சமகாலத்தில் தமிழ் மக்கள் புரட்சியே எமது பலம்.

சுருக்கமான ஒரு வரலாற்றைக் கூறி மாணவர் போராட்டத்திற்கு வருகின்றேன், இலங்கைத்தீவு சுதந்திரம் அடைந்த காலம் தொடக்கம் அதாவது 1948, தமிழர்கள் சிங்கள ஆட்சியாளர்களிடம் ஏமாந்து வருவதை நாம் எமது பாட்டன் பூட்டன் காலத்தில் இருந்து அறிந்து வந்த வரலாற்று உண்மை, அதாவது 1958ல் இருந்த சிங்கள தலைமைகளை இன்றைய எமது சந்ததி  அனுபவ ரீதியாக நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும், அதேவேளை எதிர்கால தமிழ் சமுதாயமும் இவற்றை மிக உன்னிப்பாகக் கவனித்துச் செயல்ப்பட வேண்டும்.

பண்டார நாயக்காவுடன் தந்தை செல்வநாயகம்  செய்துகொண்ட சமஷ்டித் தீர்வு உடன்பாட்டை அதற்குப் பின்னால் வந்த டட்லி  சேனாநாயக்க அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சனைக்குத் தீர்வு காண விரும்புவதாகக் கூறியவேளை பண்டார நாயக்கா தந்தை செல்வநாயகம் செய்து கொண்ட சமஷ்ட்டி  உடன்படிக்கயை ஏற்றுக் கொள்ளவில்லை, காரணம் இது புதிய அரசாங்கம் ஆகவே எல்லாவற்றையும் புதிதாகத் தொடங்குவோம் என டட்லி சேனநாயக்க - தந்தை செல்வநாயகம் ஒப்பந்தம் என ஒரு புதிய ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது, அதிலும் எமக்கு எந்தப் பயனும் கிடைக்கவில்லை.

அதன் பிற்காலத்தில் 1977ம் ஆண்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி முறையைக் கொண்டு ஆட்சிக்கு வந்த  ஜே. ஆர் ஜெயவர்தனா இனப்பிரச்சனைக்குத் தீர்வுகாண விரும்புவதாகக் கூறிக்கொண்டு தனது கட்சியினால் முன்னர் செய்து கொள்ளப்பட்ட டட்லி சேனநாயக்கா தந்தை செல்வநாயகம் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தார், ஏன் எனில் இது புதிய அரசாங்கம் தற்பொழுது பொறுப்பேற்று இருக்கிறது என்று கூறி, ஆகவே எல்லாவற்றையும் புதிதாகத் தொடங்குவோமென மாவட்ட அபிவிருத்திச் சபைத் தீர்வை முன் மொழிந்தார், அதுவும் தமிழர்களுக்கு எந்தவகையிலும் பயனளிக்கவில்லை அதேவேளை 1983ல் அவரின் ஆட்சிக் காலத்தில் கறுப்பு யூலை என நாம் நினைவு கூறும் தமிழின அழிப்பின் வெளிப்படையான செயலை உலகம் அறியும், அதற்கும் இன்றுவரை எமக்கு நீதி கிடைக்கவில்லை.

அதுவே எமது மாணவர்களை ஆயுதம் ஏந்திப் போராட நிர்ப்பந்தித்தது, தமிழீழ விடுதலைப் போரட்ட ஆரம்ப காலகட்டத்தில் தனது மாணவ பருவத்தில்  இளைஞர்கள் எழுச்சிக்கு வித்தானவர்தான் பொன் சிவகுமாரன்.

ஒரு தேசத்தின் எதிர்காலத்தை தீர்மானிப்பவர்களாக அத்தேசத்து இளைய சந்ததியினரே விளங்குகின்றனர், அதிலும் சிறப்பாகச் சொல்லப்போனால் அத்தேசத்தின் மாணவர் சமுதாயமே அதன் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர், இளமையான புத்துணர்வுக் கனவுகளுடன், புரட்சிகரமான சிந்தனைத் திறனைக் கொண்டவர்களாக விளங்கும் மாணவர்கள்  அந்நாட்டின் வருங்கால சிற்பிகளாகவும் தேசத்தைத் தாங்கும் தூண்களாகவும் அனைவராலும் நோக்கப்படுகின்றனர்.

சர்வதேசரீதியாகப் பார்க்கப்போனால் இன்று உலகின் பெரும்பான்மையான நாடுகளின் அரசியல் தலைவிதியைத் தீர்மானித்த சக்திகளாக மாணவர் சமுதாயமே விளங்குகின்றனர்.

உலகில் போராடி விடுதலை - பெற்ற எல்லா நாடுகளின் விடுதலைப் போராட்டங்களிலும் மாணவர் வகித்த பாத்திரம் பிரதானமான ஒரு இடத்தைப் பிடித்திருக்கின்றன, இவற்றில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதல் மாணவர் சக்தியாக பொன் சிவகுமாரன் எமது தமிழ் மாணவர் சக்தியின் எழுச்சியின் வடிவம் பெறுகின்றார் என்பதையும் நாம் அனைவரும் அறிவோம்,  அதேவேளை மாணவர்களின் போராட்டம் என்பது தனிய வன்முறையை மாத்திரம் கொண்டதாக உலகில் அமையவில்லை.

மாணவர் சமூகத்தின் அரசியல் பிரவேசமும், அது ஏற்படுத்திய புரட்சிகளும் உலகில் பல மாற்றங்களுக்கு வழிகோலின அது மட்டுமல்லாது வன்முறை தவிர்த்து மென்முறை வழிகள் மூலம் அவர்கள் நடத்திய போராட்டங்கள் பல சீர் திருத்தங்களுக்கு வழியமைத்தன.

19ம்,  20ம் நூற்றாண்டுகளில் தென் ஆப்பிரிக்காவில் தலைவிரித்தாடிய நிற பேதத்திற்க்கு கறுப்பின மக்கள் மேற்கொண்டு வந்த உரிமைப் போராட்டத்திலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் அரசியல் திருத்தங்களைக் கோரி மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களிலும், சோவியத் ஒன்றியம், கியூபா, யூக்கோசிலவோக்யா, பிரான்ஸ், சீனா, வியட்நாம், இந்தோனேசியா, போன்ற நாடுகளில் நடைபெற்ற விடுதலைப் போராட்டங்களிலும் மாணவர்களின் அதியுயர் பலம் வெளிக்காட்டப்பட்டதுடன், பல புதிய சுதந்திர தேசங்களின் மலர்ச்சிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் மறுமலர்ச்சிக்க்கும் வித்திட்டது.

இவ்வாறான கடந்தகால உலக வரலாறுகளில் உலக அரங்கில் மாணவர்களுடைய சக்தி மாபெரும் சக்தியாகப் பரிணமித்திருந்தது.

கங்கேரி சோவியத் ஒன்றியத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட காலத்தில் பல்வேறு உரிமைகள் மறுக்கப்பட்ட நாடாக கிழக்கு ஐரோப்பிய கொம்யூனிச அணியின் ஓர் அங்கமாக விளங்கியது. இங்கு சோவியத்தின் அடக்கு முறைகளிற்கு எதிரான போராட்டம் தீவிரம் பெற்றது, அவற்றுள் 1956ம் ஆண்டு நிகழ்ந்த ஒக்டோபர் புரட்சி முக்கியமானதாகும், ரஷ்யாவின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த கங்கேரிய அரசினால் ரஷ்ய மொழியும், மாக்சிச லெனிசக் கோட்பாடுகளும் கட்டாய பாடமாக்கப்பட்டன, அதேவேளை கொம்யூனிசத் தலைவர்களால் பதவியிலிருந்து பிரதமர் தூக்கி எறியப்பட்டார் இவற்றை எதிர்த்து மாணவர்களதும், பொதுமக்களதும் போராட்டம் தீவிரமடைந்தது,

மாணவர்களதும் பொதுமக்களதும் நாடுதழுவிய இத்தகைய எதிர்ப்புப் போராட்டங்களை சோவியத் ஒன்றியம் ஆயுதமுனையில் அடக்கியது 25000, தொடக்கம் 50000 ஆயிரம் கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டு போராட்டம் அடக்கப்பட்டாலும் அரசுக்கெதிரான எதிர்ப்புணர்வுகள் இருந்துகொண்டே இருந்தது, அன்று கங்கேரிய மாணவர்கள் தொடுத்த புரட்சியின் அடித்தளமே கங்கேரிய விடுதலைக்கு வழிவகுத்தது.

கங்கேரியைப்  போலவே போலந்தும் சோவியத்தின் பிடியில் இருந்த காலத்தில் அதன் கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டிருந்தது, அதவாது 1968ல் போலந்துத் தலைநகர் வார்சோவில் அமைந்திருந்த பல்கலைக்கழக மாணவர்கள் ஆரம்பித்த அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மிக வேகமாக நாட்டின் எல்லாப் பல்கலைக் கழகங்களிற்கும் பரவி மக்கள் மத்தியிலும் பரவியது, அரசியல் யாப்பில் புதிய சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டுமென்பதாகவே மாணவர்களது கோரிக்கைகள் இருந்தன. மிக மிக உக்கிரமடைந்த மாணவர்களதும் மக்களதும், இப் போராட்டத்தை அரசு வன்முறைமூலம்  அடக்கியது. அனாலும், பின்னொருநாளில் ஆர்ப்பாட்டகாரர்கள் கேட்ட  அவ் அரசியல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அதன் அடிப்படையில் கடந்த நுற்றாண்டில் உலகிற்கு உதாரணமாக காட்டுகின்ற விடுதலைப் போராட்டங்களில் தென் ஆபிரிக்க விடுதலைப்போராட்டம் மிக முதன்மையானது. நிறவெறி அடக்கு முறமைக்கு எதிராக கறுப்பின மக்களின் பல்வேறு அமைப்புக்கள் தமது போராட்டங்களை முன்னெடுத்தனர், அவற்றினுள் கறுப்பின மாணவர்களால் உருவாக்கப்பட்ட கறுப்பின உணர்வியக்கம் BCM - Black conscious movement மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

1960 களில் உருவாக்கப்பட்ட BCM அமைப்பிற்கு பைபோ ஸ்டீபன் தலைமை வகித்தார், இவ் அமைப்பில் மாணவர்களது தீவிர பரப்புரையால் வெள்ளையின மாணவர்களும் இணைந்து நிற வெறிக்கெதிராகப் போர்க்கொடி தூக்கினர். 1968களில் கறுப்பின மாணவர்கள் கறுப்பினத்தவரை மட்டும் கொண்ட தென்னாபிரிக்க மாணவர் அமைப்பை (SASO - SOUTH AFRICAN STUDENTS  ORGANISATION ) உருவாக்கினர். கறுப்பின உணர்வியக்கத்தின் செயற்பாடுகள் நிறவெறி அரசிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்தன, நிறவெறி அரசு அவ்வமைப்பை அழித்துவிட எவ்வளவோ முயற்ச்சிகள் எடுத்தது.

1976ல் பாடசாலைகளில் கட்டாய மொழியாக்கப்பட்ட அரச மொழியை எதிர்த்து யோகன்ச்போர்க்கில் போராட்டங்களை ஆரம்பித்தனர், இப்போராட்டம் நாடளாவியரீதியில் பரவியது, மாணவர்களது அப்போராட்டத்தை அடக்குவதற்கு அரசு இராணுவத்தைப் பயன்படுத்தியது. இதனால் 575 மாணவர்கள் கொல்லப்பட்டு பலர் படுகாயப்படுத்தப்பட்டனர். போராட்டங்களை ஒழுங்கமைத்து நடத்திய 18 கறுப்பின அமைப்புக்கள் தடைசெய்யப்பட்டு  ஸ்டீபனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் சித்திரவதைகளினால் சிறையிலேயே சாவைத்தழுவிக் கொண்டார், கறுப்பின மாணவர்கள் மேற்கொண்ட உலகப்புகழ் பெற்ற இந்தப் போராட்டம் தென் ஆபிரிக்க மக்களை எழுச்சி கொள்ள செய்ததுடன், நெல்சன் மண்டேலா தலைமையிலான தென் ஆபிரிக்க தேசிய கொங்கிரஸ் மேற்கொண்ட போராட்டத்திற்கும் பக்க பலமாக அமைந்ததுடன் அவர்களது விடுதலையையும் விரைவாக்கியது.

அமெரிக்காவில் நிறப்பேதம் தலைவிரித்தாடிய காலப்பகுதியில் உரிமைகள் மறுக்கப்பட்ட கறுப்பின மக்களிற்காக குரல்கொடுக்க மாணவர்களின் சாத்வீக ஒருங்கிணைப்புக்குழு (SNCC - Students  Nonviolent Cordinating  Committee) அமைப்பு 1960 களில் உருவாக்கப்பட்டது. இவ் அமைப்பினூடக மாணவர்கள் முன்னெடுத்த போராட்டங்களிற்கு பலதரப்பட்ட மக்களும் தமது ஆதரவைத் தெரிவித்ததுடன் அவர்களும் போராட்டங்களில் ஈடுபட்டனர், இன ரீதியிலான பாரபட்சங்களை தேசிய மட்டத்தில் வெளிக்கொணரவும், கறுப்பின மக்களை விழிப்புணர்வு பெற்று எழுச்சி கொள்ள செய்யவும் SNCC பாடுபட்டது.

இந்தோனேசியா கிழக்குத் தீமோரை ஆக்கிரமித்து கொடூர மனித உரிமை மீறல்களைப் புரிந்ததுடன், இந்தோனேசியாவை மோசமான வறுமைக்குள் தள்ளவைத்து இந்தோனேசியா அதிபர் சுகார்த்தோவை பதவியிலிருந்து தூக்கி எறிந்த பெருமையும், 1999ல் கிழக்குத் தீமோர் சுதந்திரம் அடைவதற்கும் மூலகாரனமானவர்கள் மாணவர்களே.

இன்று தாயகத்திலும், தமிழகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும், வாழும் தமிழ் மாணவர்கள் மாணவப் புரட்சி ஒன்றை  உருவாக்கி எமக்கெதிராக நடந்த, நடந்துகொண்டிருக்கும்  தமிழின அழிப்புக்கு சர்வதேச சுயாதீன விசாரணையை எதிர்வரும் ஐக்கிய நாடு சபையின் வாக்கெடுப்பில் நிலைநாட்டுவதற்கு நாடளாவிய ரீதியில் சாத்வீக வழியில் ஒன்றுபட்ட மாணவப் புரட்சியாக உருவெடுத்து அதை ஒன்றுபட்ட மக்கள் புரட்சியாக மாற்றியமைப்பதன் மூலம் இந்தமாத முடிவில் சர்வதேச சுயாதீன விசாரணைதான் என்ற இறுதித் தீர்வை எம்மால் அடையமுடியும் என்பது உலக வரலாறு காட்டிய பாதை.

அதேவேளை ஸ்ரீலங்கா அரசானது 65 வருடகாலமாக தாங்கள்  செய்துவரும் தமிழின அழிப்பைத் தாங்களே விசாரித்து தாங்களே நீதிவழங்கி மீண்டும் எமக்கெதிரான இன அழிப்பைத் தொடர, இந்தியா சென்ற இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து உரையாடியதை யாவரும் அறிவர் அங்கே பிரதமர் மோடியும் சிறுபிள்ளைக்கு சொல்லுமா போலா 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்ப்படுத்தும்படி சொல்லிவிட்டார்.

அதாவது 1987ம் ஆண்டு ஆடி மாதம் இந்தியாவின் ஆலோசனையுடன் கைச்சாத்திடப்பட்ட 13ம் திருத்தச்சட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ஐந்து அம்சக் கோரிக்கைகளும் பின் வருமாறு...

1) இலங்கை நாடென்பது பல்லின பல்மத நாடாக இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் ஒப்புக்கொள்ளப்பட்டது.

2) இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின்படி இலங்கை என்ற நாட்டின் வடக்கு - கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களினதும் முஸ்லீம் மக்களினதும் வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட தொடர்ச்சியான வாழ்நிலப் பிரதேசங்களாகும்.

3) இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் படி வடக்கு - கிழக்கு மாகாணங்களின் இணைப்பு என்பது உறுதிப்படுத்தப்படுகின்றது.

4) இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின்படி தமிழ் மொழி உத்தியோக பூர்வ மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது .

5) அதி உச்சமாக இந்திய - இலங்கை ஒப்பந்த்ததின் பிரகாரம் ஒற்றை ஆட்சி அரசியலமைப்பின் 13வது அரசியலமைப்பு சட்ட சீர்திருத்தத்தின் மூலம் இலங்கை என்ற நாட்டில் அதிகாரப் பரவலாக்கல் முறை ஏற்படுத்தப் படுகின்றது.


ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட 1987 ம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து இந்த ஒப்பந்தம் நேரத்துக்கு நேரம் சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கே அப்ப அப்ப இந்திய - சிங்கள ஆட்சியாளர்களால் பேசப் படுவதை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள்,

இந்த ஒப்பந்தத்தை மீறிய செயல், வடக்கு - கிழக்கு பிரிக்கப்பட்டுள்ளது அதன் எல்லையான மணலாற்றில் சிங்கள மக்களை குடியமர்த்தி வெலிஓயா எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது, 19 ம் திருத்த சட்டத்தில் தமிழ் மொழி விலக்கப்பட்டுள்ளது, இதனால் நடைமுறையில் சாத்தியமில்லாத 13 ம் திருத்தச் சட்டத்தை வலியுறுத்துவதை விட்டு இந்தியப் பிரதமர் மோடி இந்தியத் தமிழர்களின் உணர்வை மதித்து இந்தியாவை தாய் நாடக மதிக்கும் வடக்கு - கிழக்கு வாழ் ஈழத் தமிழர்களின் நலன்கருதி இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையை வலியுறுத்துவதே சிறந்தது அதுதான் இந்திய நலனுக்கும், பாதுகாப்புக்கும் சிறந்ததுமாகும்.

எதிர்வரும் நாட்களில் ஈழத் தமிழர்களதும், தமிழகத் தமிழர்களதும் தொடர்ச்சியான மாணவர் மக்கள் போராட்டமே இந்த மாத இறுதியில் சிறிலங்காவுக்கு எதிரான சர்வதேச விசாரணையை நிலைநிறுத்தும் என்பது எனது ஆணித்தரமான கருத்து.

- தயிசன்
« PREV
NEXT »

No comments