Latest News

September 23, 2015

உள்நாட்டுக் கட்டமைப்பின் மூலமே விசாரணை: ரணில்
by Unknown - 0

ஐ.நாவின் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச் சாட்டுக்கள் உள்நாட்டில் அமைக்கப்படும் கட்டமைப்பின் மூலமாகவே விசாரணை செய்யப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இலங்கை குறித்து ஐ.நா. வெளியிட்ட அறிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் விஷேச உரை ஒன்றை நிகழ்த்திய ரணில் இவ்வாறு கூறினார்.

2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் தவறியதாலேயே இலங்கைக்கு சர்வதேச ரீதியில் அழுத்தம் ஏற்பட்டதாக பிரதமர் தெரிவித்தார்.

ஆனால், கடந்த ஜனாதிபதி தேர்தல் முடிவுக்குப் பின்னர் சர்வதேச சமூகத்திற்கு இலங்கை அரசின் மீது மீண்டும் நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாகவும் இது இலங்கைக்குக் கிடைத்த வெற்றியென்றும் ரணில் கூறினார்.

நல்லிணக்க அணைக்குழு முன்வைத்த பரிந்துரைகளை அமல்படுத்த அப்போதைய அரசாங்கம் தவறிவிட்டதாகவும் ரணில் கூறினார்.

"சலக இன மக்களும் வசிக்கக்கூடிய நாடு"
இதன் காரணமாகத்தான் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துமாறு 2012 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் ஐ.நாவின் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக ரணில் கூறினார்.

நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்க பதவி நீக்கம் செய்யப்பட்டது, ஜனாதிபதிக்கு மேலும் அதிகாரங்களை அளிக்கும் 18 அரசியல் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது, தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றின் காரணமாக நிலைமை மேலும் சீர்குலைந்ததாகத் தெரிவித்தார்.

எனவே நல்லிணக்கத்தை எற்படுத்துவதற்காக தென் ஆப்பிரிக்க அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய இரண்டு சிறப்பு உள்நாட்டு கட்டமைப்புக்கள் உருவாக்கப்படுமென்றும் கூறினார் பிரதமர் ரணில் கூறியுள்ளார்.

காணாமல் போனோர் தொடர்பாக ஆராய்வதற்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் உதவியுடன் விசேஷ அலுவலகமொன்று நாடாளுமன்றத்தின் ஊடாக ஸ்தாபிக்கப்படுமென்றும் ரணில் கூறினார்.

சகல இன மக்களும் தடையின்றி வசிக்கக் கூடிய நாடொன்றை உருவாக்குவதே தனது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்று கூறிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தின் அனுமதியுடன் சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் கூறினார்.
« PREV
NEXT »

No comments