Latest News

September 25, 2015

கலப்பு நீதிமன்றத்தின் மூலமே தமிழ்மக்களுக்கு நீதி கிடைக்கும் - - வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர்
by admin - 0

கலப்பு நீதிமன்றத்தின் மூலமே தமிழ்மக்களுக்கு நீதி கிடைக்கும் - 
- வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் 
வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர்

போரினால் பாதிப்படைந்த தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமாயிருந்தால் அது ஐக்கிய நாடு மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் சையிட்டினால் சமர்ப்பிக்கப்பட்டது போன்று ஒரு கலப்பு நீதிமன்றத்தின் மூலமே அது சாத்தியமாகும் என வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். 
மேலும் அந்த அறிக்கையில், 
தற்போது அமெரிக்காவின் யோசனைக்கு அமைய கலப்பு நீதிமன்றத்துக்கு பதிலாக சர்வதேச ஒத்துழைப்புடன் கூடிய உள்ளக பொறிமுறையினை வலியுறுத்தியுள்ளனர். 
உள்ளக விசாரணை எவ்வளவு இதயசுத்தியுடன் நடைபெறும் என்பது இலங்கையில் தமிழ் மக்களின் விவகாரங்களில் கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்ட ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில்  எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் சான்று பகிரும். இது ஒர் கண்துடைப்பு நாடகமாக அமையுமே தவிர தமிழ் மக்களுக்கு நியாயத்தையும் பெற்றுக்  கொடுக்காது.
நடக்கப் போகின்ற விசாரணை ஒர் குற்றவியல் விசாரணையாகும். இதில் வழக்குத் தொடுநரிலிருந்து விசாரிப்பவர்கள் வரை இதயசுத்தியுடன் நடப்பார்களா என்பது எமது கடந்தகால வரலாற்றிலிருந்து எம்மால் புரிந்து கொள்ள முடியும்.
ஆதலால் தமிழ்த் தலைமைகள் சர்வதேச நீதிபதிகள், வழக்குத் தொடடுப்பவர்கள், சட்டத்தரணிகள் மற்றும் விசாரணையாளர்களை உள்ளடக்கிய ஒரு கலப்பு நீதிமன்றத்தை ஏற்படுத்துவதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இல்லையேல் தமிழ் மக்களுக்கு நீதிகிடைப்பது கேள்விக் குறியாகவே காணப்படுமென்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடகச் செயலாளர் 
எதிர்க்கட்சி தலைவர் காரியாலயம்
வடக்கு மாகாண சபை
« PREV
NEXT »

No comments