Latest News

September 11, 2015

மெக்கா விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 87ஆக உயர்வு!
by Unknown - 0

சவூதி அரேபியாவின் மெக்காவில் உள்ள அல் ஹரம் மசூதியில் கிரேன் ஒன்று சரிந்ததில் குறைந்தது 87 பேர் பலியாகியாகியுள்ளதாக சவூதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் 150க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

எப்படி இந்த விபத்து நடந்தது என்று தெரியவில்லை. சமூக வலைத்தளங்களில் வெளிவந்துகொண்டிருக்கும் படங்களில் பலர் இறந்து கிடக்கும் காட்சிகளும் காயமடைந்து கிடக்கும் காட்சிகளும் காணப்படுகின்றன.

இம்மாதப் பிற்பகுதியில் ஹஜ் யாத்திரை துவங்கவிருக்கும் நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது.
ஹஜ் யாத்திரையின் போது உலகம் முழுவதும் இருந்து லட்சக் கணக்கானவர்கள் இந்த புனித நகருக்கு வருகைதருவார்கள்.

வருடாவருடம் இந்த எண்ணிக்கை அதிகரிப்பதால், ஒரே நேரத்தில் 22 லட்சம் பேர் மசூதிக்குள் இருக்கும் வகையில் மசூதியின் பரப்பளவை 4 லட்சம் சதுர மீட்டராக விரிவாக்கும் பணிகளை சவூதி அதிகாரிகள் கடந்த ஆண்டு துவங்கினர்.

இதற்கான கட்டுமானப் பணிகளில் பயன்படுத்தப்பட்டிருந்த கிரேன் ஒன்றுதான் தற்போது சரிந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடுமையாக வீசிய காற்றின் காரணமாக இந்த கிரேன் விழுந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அரேபியத் தீபகற்பம் முழுக்கவே கடந்த வாரத்திலிருந்து புழுதிப்புயல் வீசிவருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் பயணத்தை மேற்கொள்ளும் யாத்ரீகர்களுக்கு அல் ஹரம் மசூதி மிக முக்கியமான புனித தலமாகும்.

இந்த மசூதியின் மையத்தில்தான் உள்ள காபாவை நோக்கித்தான் உலகம் முழுவதுமுள்ள இஸ்லாமியர்கள் நாள்தோறும் வழிபடுகிறார்கள்.

ஒவ்வொரு இஸ்லாமியரும் தன் வாழ்நாளில் ஒரு முறையாவது, தன்னால் இயலும் பட்சத்தில் இங்கு வரவேண்டும் என இஸ்லாம் கூறுகிறது. இங்கு வரும் இஸ்லாமியர்கள் காபாவை எதிர் கடிகாரச் சுற்றில் ஏழு முறை வலம்வருகிறார்கள்.


« PREV
NEXT »

No comments