Latest News

September 20, 2015

சங்கக்காராவின் போராட்டம் வீண்-சாம்பியன் கிண்ணத்தை தவறவிட்ட சர்ரே அணி!
by raj mullai - 0

றொயல் லண்டன் கிண்ண ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் சர்ரே அணியை வீழ்த்தி குளோசஸ்டிர்ஷியர் 6 ஓட்டங்களால் ’திரில்’ வெற்றி பெற்றது.

இங்கிலாந்தில் நேற்று நடந்த றொயல் லண்டன் கிண்ண ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் சர்ரே- குளோசஸ்டிர்ஷியர் அணிகள் மோதின.

இதில் நாணய சுழற்சியில் வென்ற சர்ரே அணி களத்தடுப்பை தெரிவு செய்ய முடிவு செய்தது. இதனால் குளோசஸ்டிர்ஷியர் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

தொடக்கம் முதலே தடுமாற்றத்துடன் விளையாடிய குளோசஸ்டிர்ஷியர் அணி திக்கித்திணறி ஓட்டங்களை சேர்க்க ஆரம்பித்தது.

இருப்பினும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்ததால் அந்த அணி 47.4 ஓவர்களுக்கு 220 ஓட்டங்கள் எடுத்து சுருண்டது. அதிகபட்சமாக ஜோன்ஸ் (50) அரைசதம் எடுத்தார்.

சர்ரே அணி சார்பில் மிரட்டலாக பந்துவீசிய டெர்ன்பேச் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

எளிய இலக்குடன் களமிறங்கிய சர்ரே அணிக்கு தொடக்கமே மோசமாக அமைந்தது. தொடக்க வீரர்கள் ரோய் (11), டேவிஸ் (13) சொற்ப ஓட்டங்களில் நடையை கட்டினர்.

இதன் பின்னர் ஜோடி சேர்ந்த சங்கக்காரா (60), பெர்ன்ஸ் (56) சிறப்பாக விளையாடி அரைசதம் எடுத்தனர். இருப்பினும் பின்னர் வந்தவர்கள் ஜொலிக்கவில்லை.

கடைசி ஓவரில் 3 பந்துக்கு 6 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் 49.3 ஓவரில் 214 ஓட்டங்களுக்கு சர்ரே அணி அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

இதனால் குளோசஸ்டிர்ஷியர் 6 ஓட்டங்களால் ’திரில்’ வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியது.

3 விக்கெட் மற்றும் 35 ஓட்டங்கள் எடுத்த குளோசஸ்டிர்ஷியர் அணியின் டெய்லர் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.



« PREV
NEXT »

No comments