Latest News

July 23, 2015

கடந்த கால அரசுகளை போல் இந்த அரசும் தமிழர்களை ஏமாற்றுகிறது
by admin - 0

நாடாளுமற்றத் தேர்தல் நடைபெறவிருக்கின்ற நிலையில் நீண்ட காலமாக இரானுவ ஆக்கிரமிப் இருந்த சம்பூர் பிரதேசம் விடுவிக்கப்பட்டமை போன்று வலிகாமம் வடக்குப் பிரதேசமும் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டுமென வலி வடக்கு மீள்குடியேற்றக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
 
ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவித்து இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்துவதில் கடந்த கால அரசுகளைப் போன்று புதிய அரசும் தட்டிக் கழித்து சர்வதேசத்தை ஏமாற்றி வருகின்ற நிலையில் இங்குள்ள  தமிழ் அரசியல் வாதிகளும் மக்களை ஏமாற்றி சுயநல அரசியல் பிழைப்பை நடத்தி வருவதாகவும் மேற்படி குழுவின் தலைவர் எஸ்.சஜிவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
 
யாழ் ஊடக அமையத்தில் நேற்று  புதன்கிழமை ஊடகவியியலாளர்களைச் சந்தித்து கருத்து தெரிவிக்கையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார். அந்தச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்....
 
வலிகாமம் வடக்கிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்து 25 வருடங்களுக்கும் மேலாக தற்போதும் முகாம்களிலேயே வாழ்ந்து வருகின்றனர். இந்த 25 வருடத்தில் பல்வெறு தேர்தல்களும் நடைபெற்றுள்ளன. இதில் பல தேர்தல்களின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளின் அடிப்படையில் நம்பிக்கை நிமித்தம் மக்கள் வாக்களித்திருக்கின்றனர். ஆனால் மீளக்குடியமர்த்தப்படாத நிலையே இருக்கின்றது.
 
இந்நிலையில்  கடந்த ஐனாதிபதித் தேர்தலின் பின்னர் ஆட்சிக்கு வந்த புதிய அரசும் மீள்குடியேற்றம் செய்வதாக கூறி குறிப்பிட்டளவு பகுதியை மட்டும் விடுவித்துவிட்டு இந்த மக்களின் மீள்குடியமர்வை தட்டிக்கழித்து சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கு முனைகின்றது.
 
இவ்வாறான நிலையில் நாங்கள்  காணிகளை விடுவித்தோம், விடுவிக்கிறோம், விடுவிப்போம் என்று கூறி பலரும் மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்றுக் கொண்டு தமது கதிரைகளைக் காப்பாற்றுவதற்கு துடிக்கின்ற அதே வேளையில் மக்களின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சனைகளைத் தீர்த்து மக்களை குடியமர்த்துவதில் அக்கறையில்லாத நிலையே காணப்படுகின்றது.
 
குறிப்பாக இங்கு எத்தனை முகாம்கள் இருக்கின்றன. இதற்கு என்ன செய்யலாம் எனத் தெரியாதவர்களே அதிகம் இத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இந்த மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக முகாம்களிற்கும் வந்து செல்கின்றனர். இவ்வாறு இந்த மக்களிடம் வருகின்ற அரசியல்வாதிகளே இனியும் மக்களை ஏமாற்றாது ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.
 
குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பிரதேசமும் யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் வடக்கைப் போன்று இரானுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு அந்தப் பிரதேச மக்கள் முகாம்களிலேயே அகதிகளாக பல்வேறு கஸ்ர துன்பங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வந்தனர். 

புதய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் இப் பிரதேசங்கள் முழுமையாக விடுவிக்கப்படுமென அறிவிக்கப்பட்டது.
 
இதற்கமைய வலி வடக்கில் ஒருபகுதி விடுவிக்கப்பட்டது. ஆனால் மிகுதி விடுவிக்கப்படாத நிலையே இருக்கின்றது. இதே வேளை சம்பூர் முழுமையாக விடுவிக்கப்பட்டள்ளது.ஆகவே சம்பூர் முழுமையாக விடுவிக்கப்பட்டமை போன்று வலி வடக்கையும் முழுமையாக விடுவித்து இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த நிலத்தில் மீளக் குடியமர்த்த வேண்டுமென்றும் சஐPவன் மேலும் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments