Latest News

July 23, 2015

ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளேயே தீர்வு-ஐதேமு தேர்தல் அறிக்கை!
by Unknown - 0

இலங்கையின் சகலதரப்பின் இணக்கத்திற்கு அமைய ஒரே நாட்டுக்குள் அதிகபட்ச அதிகாரப் பகிர்வு மூலமே இனப்பிரசனைக்கான தீர்வு மேற்கொள்ளப்படும் என்று நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவங்கள் தொடர்பாக ஐ நா அமைப்பினால் முன்வைக்கப்படவுள்ள அறிக்கை சம்பந்தமாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருக்கும் சகலதரப்புகளுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு உள்ளூர் சட்டக்கட்டமைப்பின் மூலம் தகுந்த பதில்கள் வழங்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கை வியாழனன்று கொழும்பில் வெளியிடப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமயில் நல்லாட்சிக்கான ஐக்கிய முன்னணியிலுள்ள ஏனையக் கட்சித் தலைவர்களும் கலந்துக்கொண்டனர். நாட்டை மீளவும் கட்டி எழுப்புவதற்கான ஐந்தாண்டு வேலைத் திட்டம் ஒன்றும் ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டது.

இந்த திட்டத்தின்படி, ஊழல் மோசடிகளை ஒழிப்பது, ஜனநாயக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவது, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது மற்றும் கல்வித் துறையை மேம்படுத்துவது ஆகிய ஐந்து குறிக்கோள்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இன்றைய விழாவில் உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க, கடந்த ஜனவரி மாதம் எட்டாம் தேதி மக்கள் பெற்ற வெற்றியை உறுதிபடுத்த வேண்டுமானால் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் நல்லாட்சிகான தேசிய முன்னனி வெற்று பெறுவது அவசியமென்று தெரிவித்தார்.

"மஹிந்த வெல்வது குடும்ப ஆட்சியை மீண்டும் கொண்டுவரும்"
அதற்கு மாறாக இந்த தேர்தலுக்குப் பிறகு மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சி அமைக்கப்பட்டால் நாடு மீண்டும் பிரிவனைவாதத்திற்கு தள்ளப்பட்டு ஊழல் மோசடிகள் அதிகரிக்கும் என்றும் ராஜபக்ஷவின் குடும்பம் மாத்திரமே நன்மை பெறுமென்றும் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்தார்.

"எனவே இந்தத் தேர்தலில் மக்கள் இரண்டு விஷயங்கள் குறித்து தமது கவனத்தை செலுத்த வேண்டும். அதாவது ஐக்கிய தேசிய முன்னணிக்கு வாக்குகளை வழங்கி நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதா? இல்லாவிட்டால் மகிந்த ராஜபக்ஷவிற்கு வாக்குகளை வழங்கி நாட்டை அழிவுப் பாதையில் கொண்டு செல்வதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்" என்று தெரிவித்தார் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க.

தற்போது உருவாக்கப்பட்டுள்ள நல்லாட்சி மேலும் பலப்படுத்தப் படவேண்டுமென்று கூறிய நல்லாட்சிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரர், 19ஆவது திருத்தச்சட்டத்தை பலப்படுத்தி விரிவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென்று கோரிக்கை வைத்தார்.

மீண்டும் நாட்டில் குடும்ப ஆட்சியொன்றை உருவாக்குவதற்கு சிலர் பேசிவருவதாகக் கூறினார் ஜாதிகஹெல உறுமய கட்சியின் தலைவரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க. ராஜபக்ஷவின் தலைமையில் மீண்டும் ஒரு ஆட்சி இலங்கையில் உருவானால் நாடு பின்கொண்டு செல்லப்படுமென்றும் எச்சரித்தார்.

கடந்த ஜனவரி மாதம் எட்டாம் தேதி ராஜபக்ஷ குடும்பத்தின் பிடியிலிருந்து மக்களைக் காப்பதற்கு தாங்கள் நடவடிக்கைகளை எடுத்ததாகக் கூறிய அவர், கொலை மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நபர்கள் மக்களை திசை திருப்புவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி ராஜபக்ஷ குடும்பத்தினர் நிச்சயமாக தோற்கடிக்கப்படுவார்களென்றும் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments