Latest News

July 01, 2015

யாழ்ப்பாணக் கலைஞர்களின் "பனங்காய்ப் பணியாரம்". ஒரு அசாத்திய சாதனையே.!!
by admin - 0

யாழ்ப்பாணக் கலைஞர்களின் "பனங்காய்ப் பணியாரம்". ஒரு அசாத்திய  சாதனையே.!!

"வல்லை வெளியில காற்றடிக்கும்
திரெளி மீன் துள்ளி எழும்
ஒடியல் கூல் குடித்தால்
மனமெங்கும் விண் கூவும்" என்ற பல்லவியுடன் "பனங்காய்ப் பணியாரமே" என்ற சரணத்தில் பாடல் ஆரம்பிக்கும் போதே இந்த அழகிய "காதல் கடிதம்" பாடல் இறுவட்டினை முழுமையாகப் பார்த்து விட வேண்டும் என மனம் முண்டியடித்துக் கொண்டு துடிக்கிறது. முழுமையாகப் பார்த்து விட்டால் ஒவ்வொரு ஊர்களின் சிறப்போடு அந்த ஊர்களுக்கே அழைத்துச் செல்கிறது இந்த "பனங்காய்ப் பணியாரமே" என்ற அழகிய பாடல் காணொளி.

இந்தக் கலைஞர்களின் வளர்ச்சியை சற்று பின்னோக்கி பார்த்து வருவோம்...

ஈழத்தில் நடைபெற்ற 30 வருட காலப் போராட்ட காலங்களுக்குள்... திரைப்படத்துறையில் சாதிக்கவோ அல்லது கால்பதிக்கவோ அப்போதைய இளைஞர்கள் பெரிதாக விரும்பியதில்லை... 

காரணம், தாய் மண்ணின் விடுதலைக்காக ஒரு முழுமையான மக்கள் விடுதலைப் போராட்டமாக நடைபெற்று வரும் போது அந்த விடுதலைப் போராட்டத்தில் தங்களை முழுமையாக அர்ப்பணித்த மக்களானவர்கள் தமது தேசத்தின் விடுதலையே முதல் தேவையென போரிட்டும், பணியாற்றியும் வந்தார்கள். 

அந்த இறுக்கமான வேளைகளிலும் தாய்மண்ணின் பெருமைகளையும், போராட்ட விழிப்புணர்வுக்காகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் கலைத்துறைகளை உருவாக்கி மக்கள் கலைஞர்களையும் உள்வாங்கி உள்ளூர் கலைஞர்களூடாக சாதாரண ஒளிப்பதிவு சாதனங்களைப் பயன் படுத்தியே நாடகங்கள் திரைப்படங்களை உருவாக்கினார்கள். 

ஆனாலும், அதில் சில குறைகள் செயற்கைத் தனங்கள் இருந்தாலும் யாரும் பெரிதாக விமர்சித்தது இல்லை. காரணம், எவ்வித முன் அனுபவங்களுமின்றி மிகவும் இறுக்கமான போர்க்காலங்களில் மிகவும் சாதாரண கருவிகளை வைத்து அர்ப்பணிப்போடு உழைத்து படங்களை வெளியிட்டதனால் அவை ஈழ மக்களினால் பெரும் மதிப்போடு வரவேற்கப்பட்டு பாதுகாக்கப்பட்டன.

தற்போது யுத்தம் முடிவுற்றாலும் ஈழ மக்களுக்கான விடுதலையும், நீதியும் கிடைக்கவில்லை, பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அதிகார வர்க்கத்தின் பிடியில்தான் இன்னமும் நிம்மதியின்றி வாழ்ந்து வருகிறார்கள். இருந்தபோதிலும், யுத்த காலங்களில் புலம்பெயர்ந்து தமிழகம் உட்பட வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் ஈழ உறவுகள் மற்றும் தமிழக உறவுகளின் துணையுடன் திரைத்துறையில் கடந்த சில வருடங்களாக யாழ்ப்பாணத்துக் கலைஞர்கள் மெல்ல மெல்ல பிரகாசித்து சாதித்தே வருகிறார்கள். 

தற்போது நவீன மயமாக்கப்பட்ட ஒலி, ஒளிப்பதிவு கருவிகள் ஊடாக மிகவும் இயல்பாகவே தென்னிந்திய திரைப்படப் பாடல்கள் போல் உருவாக்கி அசத்தி வருகிறார்கள். 

அதிலும், பிரான்ஸில் உள்ள ஈழத் திரைப்படக் கலைஞர்கள் குறிப்பாக "ஒளிக்கோன்" விஜிதன் சொக்கா (Sokka Vigithan), மன்மதன் பாஸ்கி (Manmathan Baski) ரமணன் (Indiran Raam ), ஜனார்த்திக் சின்னராசா (Janarthik Sinnarasa) மற்றும் பலர் நவீன முறையில் பல குறும்படங்களை திரைப்படப் பாணியில் உருவாக்கி வருகிறார்கள். அதுமட்டுமின்றி இலங்கை, வவுனியாவில் இருந்தும் ஜெயந்தன் கந்தப்பு என்ற இளைஞர் பல வருடங்களாகவே பல பிரபலமான பாடல் காணொளிகளை மிகவும் சிறப்பாக வெளியிட்டு வருகிறார். தற்போது யாழ்ப்பாணத்திலும் திறமைமிக்க பல இளம் கலைஞர்கள் உருவாகி வருகிறார்கள்.

இந்த "பனங்காய்ப் பணியாரம்" பாடல் அடங்கிய "காதல் கடிதம்" என்ற பாடல் இறுவட்டு 2007 ஆம் ஆண்டின் இறுதியில் வெளிவந்திருக்கிறது. இந்த இறுவட்டை யாழ் கரவெட்டியைச் சேர்ந்த   தற்போது நோர்வேயில் வசித்து வருகின்ற "நோர்வே" வசீகரன் என்பர் தமிழகக் கலைஞர்களுடன் சேர்ந்து  மிகவும் சிறப்பாக சில வருடங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார். 

ஆனாலும் இந்தப் பாடல் காணொளியினை அன்மையில்தான் ஒரு நண்பரின் முகநூலில் பார்த்தேன். இந்தப் பாடல் காட்சிகளில்... நடனம், நடிப்பு, உடை மற்றும்  அலங்காரம் என்பன காட்சிகளில் ஒருபக்கம் சிறப்பாக இருக்க மறுபக்கம் பாடல் உருவாக்கத்தில் நேர்த்தியான ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, இயக்கம் மற்றும் அசத்தலான இசையுடன் அழகான பாடல் கோர்வை வடிவமைப்புடன் (Songs Editing) உருவாக்கி பாடல் காட்சியோடு நமது கலைஞர்களுடன் யாழ்ப்பாணம் மிகவும் அழகாகவே தெரிகிறது.

பாடல் வரிகள் உட்பட பாடியவர்களின் குரல்களும் மிகவும் சிறப்பாகவே உள்ளது. ஒரு தென்னிந்திய திரைப்படத்தில் உள்ள ஒரு பாடல் காட்சியை மிகவும் ரசித்து பார்ப்பது போலவே பார்க்க முடிகின்றது.

நமது கலைஞர்களைப் பாரட்டி வாழ்த்துவதோடு அவர்களை ஊக்கப்படுத்தி மேன்மேலும் வளரச் செய்ய புலம்பெயர் ஈழக் கலைஞர்களுடன், தமிழகக் கலைஞர்களும் தமது தொப்புள்கொடி உறவுகள் என நினைத்து தமக்குத் தெரிந்த கலை நுட்பங்களை மற்றும் நுணுக்கங்களை கற்றுக் கொடுத்து அவர்களின் எதிர்கால பிரகாசமான ஈழத்திரைப்படத்துறையை உருவாக்கி வளர்த்திட தங்களால் முடிந்த உதவிகளை செய்ய முன்வர வேண்டும். 

அப்போதுதான் எமது ஈழ போராட்ட வரலாறுகளையும், கலாச்சார மற்றும் மொழியின் முக்கியத்துவத்தையும் அசலோடு நம் எதிர்கால சந்ததியினருக்கு வரலாறுகளாக உருவாக்கிக் கொடுக்க முடியும்.

சரி இப்போது பாடல் காட்சிகளை முழுமையாகக் கண்டு களியுங்கள்.

"பனங்காய்ப் பணியாரம்" திரும்பத் திரும்பக் கேட்டாலும் திகட்டாத பலகாரம்.


- வல்வை அகலினியன்.


« PREV
NEXT »

No comments