Latest News

July 23, 2015

வவுனியாவில் அரும்புகளின்... ஆசிரியர்களுக்கான விசேட ஒன்று கூடல் இனிதே நடைபெற்றது.
by kavin - 0

அரும்புகள் சமூக அபிவிருத்தி நிறுவனமானது ஆசியர்களுக்கான விசேட ஒன்று கூடல் நிகழ்வொன்றை கடந்த 12.07.2015 அன்று வவுனியா கனகராயன்குளம் ஆரம்ப பாடசாலையில் நடாத்தியது.

இலங்கையில் நடைபெற்ற கடுமையான யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களின் நிலையறிந்து அவர்களின் எதிர்கால வாழ்க்கையினைக் கருத்திற்கொண்டு அதற்குத் தேவையான கல்வியினை குறைவின்றி அளித்திட "அரும்புகள் சமூக அபிவிருத்தி நிறுவனமானது" பல செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை அனைவரும் அறிந்ததே.


அரும்புகளின் திட்டப்படி இலங்கையின் தமிழ் பிரதேசங்களில் வாழும், கல்வியில் மிகவும் பின்தங்கிய மாணவர்களினைக் கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான கற்றல் உபகரணங்கள் மற்றும் விசேட வகுப்புக்கள் என கல்வி சம்மந்தமான அனைத்து விடயங்களையும் அளித்து அவர்களின் எதிர்கால வாழ்க்கையினை மிகவும் பிரகாசமான முறையில் உருவாக்கி விடுதல் ஆகும்.

அந்த வகையில் அரும்புகள் ஆரம்பிக்கப்பட்டு சில மாதங்களில் யாழ் மாவட்டம், மன்னார் மாவட்டம், முல்லைத்தீவு மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம், வவுனியா மாவட்டம், திருகோணமலை மாவட்டம், மட்டக்களப்பு மாவட்டம் மற்றும் மணலாறு மாவட்டம் என அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து இதுவரை 23 இலவசக் கல்வி நிலையங்களை ஆரம்பித்துள்ளது. தொடர்ந்தும் அனைத்து ஊர்களிலும் பின்தங்கிய கிராமங்களைக் கண்டறிந்து கிராமம் கிராமமாக பல இலவசக் கல்வி நிலையங்களை ஆரம்பித்து வருகிறது.

அரும்புகளின் வளர்ச்சி மற்றும் செயற்பாடுகளின் எதிர்காலத் தேவையினைக் கருதி ஆசிரியர்களுக்கான விசேட ஒன்று கூடல் ஒன்று வவுனியாவில் நடைபெற்றது.

மேற்படி அரும்புகள் நிறுவனத்தின் மாணவர்களுக்கான மாலை நேர வகுப்புக்களில் கல்வி கற்பிக்கும் வட மாகாணத்தின் கீழுள்ள ஆசிரியர்களுக்கான விசேட கலந்துரையாடலானது 12.07.2015 அன்று வவுனியா கனகராயனன் குளம் ஆரம்ப பாடசாலை மண்டபத்தில் காலை 10.00 மணியளவில் மங்களவிளக்கேற்றலுடனும், இரண்டு நிமிட அகவணக்கத்துடனும் ஆரம்பமாகியது.

பின்பு வருகை தந்த அனைவரும் ஒருவரையொருவர் அறிமுகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து "அரும்புகளின்" இலங்கை ஒருங்கிணைப்பாளர் அவர்களின் தலைமையுரையும், வரவேற்புரையும் நிகழ்த்தப்பட்டது. முதலில் வருகை தந்த அனைவரையும் நல்வரவுடன் வரவேற்றார். அந்த வகையில்

● திரு. ரவிகரன்,
வடமாகாண சபை உறுப்பினர் முல்லைத்தீவு மாவட்டம்,

● திரு. இராஜேஸ்வரன்
உதவிக் கல்விப் பணிப்பாளர்
(ஆரம்பக் கல்வி)
வவுனியா,

● திரு. இந்திரராஜா
ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர்
வடமாகாண சபை உறுப்பினர் வவுனியா வடக்கு,

● திரு. மாணிக்கவாசகர்
bbc தமிழோசை செய்தியாளர்

மற்றும் அரும்புகள் உறுப்பினர்கள், ஆசிரியர்கள்.

அனைவரையும் வரவேற்றதுடன், அரும்புகள் சமூக அபிவிருத்தி நிறுவனமானது சமூக வலைத் தளமான முகநூல் நண்பர்கள் மூலம் உருவாக்கப்பட்டதொன்று என்றும், அதன் மூலமே இதற்குரிய நிதிகள் புலம்பெயர் மற்றும் தமிழக உறவுகளால் கிடைக்கப்பெறுவதையும் எடுத்துக் கூறினார்.

பின் இக் கூட்டம் இன்று நடாத்தப்படுவதற்கு முதற்காரணமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாலைநேர வகுப்புக்களில் மாணவர்களின் வரவு சரியான முறையில் பேணப்பட வேண்டும் எனவும், மாணவர்களின் இணைபாடவிதமான செயற்பாடுகளை இனங்கண்டு அதனை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் கூறினார் அத்துடன் ஒவ்வொரு நாளும் வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன் ஒரு நாளுக்கு இரண்டு மாணவர்கள் அடிப்படையில் அவர்களின் இணைபாடவிதமான செயற்பாடுகள் மூலம் அவர்களின் தனித்திறமைகளை இனம் காண்பதற்காக உரிய மாணவர்களின் ஆற்றல்களை வெளியில் கொண்டுவர சிறிது நேரம் ஒதுக்கி அதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறும் ஆசிரியர்களை கேட்டுக்கொண்டார். மேலும், பரீட்சைகள் நடாத்தப்படுவது மாதமொருமுறையா? வாரம் ஒரு முறையா? என்பது தொடர்பாக பின்னர் கலந்தாலோசிப்பது எனவும் ஆசிரியர்களிடம் கேட்டுக்கொண்டார்.

தினவரவு பதிவுகள், நாளந்த கற்றல் குறிப்புகள் ஆகியன வடிவமைப்பட்டுள்ள பதிவேடுகளில் பதியப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார். அத்துடன் அரும்புகளின் செயற்திட்டங்கள் குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தார்.

அடுத்ததாக, திரு. ரவிகரன் வடமாகாண சபை உறுப்பினர் அவர்கள் உரை நிகழ்த்துகையில் எது எப்படி அழிக்கப்படினும் கல்வி ஒன்றே அழிக்கப்படாத செல்வம் என்றும் அதனை நிறைவேற்ற இவ் அரும்புகள் நிறுவனம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளைப் பாராட்டியதுடன், இதற்கென ஒழுங்கமைக்கப்பட்ட ஆசிரியர்கள், அன்பர்கள் அனைவரும் தேவையறிந்து சமூக சேவை மனப்பான்மையுடன் கடமையாற்ற வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

பின்பு திரு. இராஜேஸ்வரன், உதவிக் கல்விப் பணிப்பாளர் அவர்களால் ஆசிரியர்களிற்கான கற்பித்தல் தொடர்பில் ஆலோசனை வழங்கப்பட்டது. அந்த வகையில், முதலாவதாக மாணவர்களின் உளநிலை புரிந்து வீட்டுச் சூழல், அதன் பின்னணி அறிந்து அவர்களைக் கற்றல் செயற்பாடுகளிற்கு உள்வாங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும், தற்போது நகரங்களை நோக்கிச் செல்வந்தர் தமது பிள்ளைகளைக் கற்பிப்பதற்கு அழைத்துச் செல்லப்படும்போது வறுமைப்பட்ட மாணவர்களே கிராமங்களில் தமக்கென ஒரு கல்வி நிலையம் இல்லையென ஏங்கி கொண்டு இருப்பவர்களிற்கு நீங்கள் இச் செயற்பாட்டைச் செய்ய முன்வந்துள்ளீர்கள். எனவே, அவர்களிற்கு ஏட்டுக் கல்வி மூலம் மட்டுமல்ல ஐம்புலன்களும் புலத்தகு வகையில் செயற்பாட்டு முறைக் கல்வியை முன்னெடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார். அதுவே அவர்களிற்கு மனதில் பதியும் செயற்பாடாக அமையும் என உறுதியாக எடுத்துரைத்தார்.

அடுத்ததாக, உதவிக் கல்விப் பணிப்பாளரும், வட மாகாணசபை உறுப்பினர், வவுனியா வடக்கு அவர்களுமாகிய திரு.இந்திரராஜா அவர்கள் உரையாற்றுகையில், மாணவர்களைச் சரளமாகப் பேசுவதற்குரிய தன்மையை உருவாக்கவேண்டுமெனவும், ஆரம்பக் கல்வியாகையால் முதலில் அவர்களிற்கு எழுத்தாற்றலை வளர்ப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டதுடன் அரும்புகள் நிறுவனம் தொடர்ந்து இச் செயற்பாட்டை முன்னெடுத்து வரும்போது இனிவருங்காலங்களில் வட மாகாண சபையும் கற்றல் உபகரணங்களை வழங்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

அடுத்த நிகழ்வாக ஆசிரியர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது. அதில் ஒவ்வொரு ஆசிரியர்களினதும் குறை நிறைகள் ஆராயப்பட்டன. அந்தவகையில் பொதுவான பிரச்சனைகளாக கீழ்வருவன காணப்பட்டன.

● மாலை நேர வகுப்புக்களிற்கு வருகை தரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகிறது. சில நிலையங்களில் கூடிய மாணவர்களிற்கு ஒரு ஆசியரியரே கற்பிக்கின்றார் இது கஸ்டமாக இருக்கின்றது எனவும் மேலதிகமாக ஆசிரியர்கள் ஒழுங்கமைக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

● வகுப்புக்களில் மெல்ல கற்போரிலிருந்து மிகைத்திறன் மாணவர் வரை காணப்படுகின்றனர். இங்கு மெல்லக்கற்போரின் கல்வியறிவினையும் உயர்த்தவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆதலால் மாதமொருமொறை பரீட்சை நடாத்துவது சிறந்தது எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

● அரும்புகள் நிறுவனத்தின் கீழ் கற்பிக்கும் ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியர் சேவைக்கு உட்பட்டவர்கள் அல்லர் சிலர் தனியார் கல்வி நிறுவனங்களில் கற்பிப்பதாலும் ஆசிரிய அறிவுரைப்பு வழிகாட்டியின் படி ஆசிரியர்களிற்கு ஒரு கருத்தரங்கை அரும்புகள் நிறுவனத்தால் நடாத்தப்படுபது சிறந்தது என இங்கு வருகை தந்த சான்றோரால் எடுத்துரைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட அரும்புகள் நிர்வாகம் இது தொடர்பான அறிவுறுத்தல்களை உரிய முறைப்படி ஆசிரியர்களிற்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் கூறப்பட்டது.

வேறு விடயங்கள் இல்லாத காரணத்தால் அனைவருக்கும் தேனீர், சிற்றுண்டி வழங்கப்பட்டதை தொடர்ந்து சமூக ஆர்வலர் திருமதி. கானவி அவர்களின் நன்றியுரை நிகழ்த்தப்பட்டது.

இதில் முக்கியமாக மண்டப ஒழுங்கமைப்பு செய்து தந்த வவுனியா கனகராயனன் குளம் ஆரம்ப பாடசாலை அதிபருக்கும் அரும்புகள் நிறுவனத்தின் செயற்பாடுகளை எடுத்தியம்பிய ரவிகரன் அவர்களுக்கும் ஆசிரியர்களிற்கான கல்வி செயற்பாடுகள் சம்மந்தமான வழிகாட்டல்களையும் மாணவர்களின் உளவளர்ச்சி சம்மந்தாகவும் எடுத்தியம்பிய இராஜேஸ்வரன் அவர்களுக்கும் எழுத்தாற்றல், பேச்சாற்றல்களை மாணவர்களிடையே முன்னெடுக்க வேண்டும் என எடுத்துரைத்த இந்திர ராஜா அவர்களுக்கும் நன்றி தெரிவித்ததுடன், பிரித்தானிய ஒலிபரப்பு "தமிழ் ஒசை" நிருபர் திரு. மாணிக்கவாசகர் அவர்களுக்கும் சிரமங்களை பாராது வருகை தந்த அரும்புகள் ஆசிரிய பெருந்தகைகளிற்கும, நன்றி கூறி மதியம் 12.30 மணியளவில் இக்கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.


அரும்புகள்" சமூக அபிவிருத்தி நிறுவனமானது உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையத்தின் ஒரு அங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments